மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரதேசத்தில் வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த ஆண் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஜெயந்திபுரம் குமாரத்தன் கோவில் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான ரவி என அழைக்கப்படும் அண்ணாமலை ரவீந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வருவதுடன், மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றவர். சம்பவதினமான இன்று காலை வீட்டின் முன்பகுதி வாசல் கதவில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் வீட்டின் வெளி கதவை உடைத்து உள் நுழைந்ததுடன் தடயவியல் பிரிவு பொலிசாரை வரவழைத்ததுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்ற அனுமதியை பெற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு.தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version