சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 22 பேர் உயிரிழந்தனர். இந்த தகவலை அந்நாட்டின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்நாட்டின் அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட கிளர்ச்சிப் படையினர் கடந்த டிசம்பரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.

அதன் பின்னர் இப்போதுதான் டமாஸ்கஸ் நகரில் முதல்முறையாக இந்த வகையிலான தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-ம் ஆண்டு அங்கு கிளர்ச்சிப் படையினரின் புரட்சி தொடங்கியது.

தற்போது சிரியாவில் ஆட்சியாளர்களின் வசம் உள்ள முக்கிய சவால் என்னவென்றால் அது பாதுகாப்பு விவகாரம்தான். அங்குள்ள சிறுபான்மையின மக்களை அரசு பாதுகாக்க வேண்டும் என சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

டமாஸ்கஸ் நகரில் உள்ள புனித எலியாஸ் தேவாலயத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் Daesh குழுவை சேர்ந்த ஒருவர், தனிநபராக மக்களோடு மக்களாக இருந்து எதிர்பாராத நேரத்தில் துப்பாக்கி சூடு மற்றும் தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தி உள்ளார் என சிரியாவின் இடைக்கால அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாகவும், 63 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் தேவாலயத்தின் மரப்பலகைகள் சரிந்து விழுந்ததாகவும், அந்த இடத்தின் தரைப்பகுதி முழுவதும் ரத்தம் சிதறி இருந்ததாகவும் சர்வதேச செய்திகளை வெளியிட்டு வரும் செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணையை தொடங்கியுள்ளது சிரியா அரசு.

இந்த தீவிரவாத தாக்குதலுக்கு எகிப்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஜோர்டான் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நேரத்தில் சிரியாவுக்கு ஆதரவாக நிற்பதாகவும் கூறியுள்ளன. ஐ.நா அமைப்பின் பிரதிநிதியும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version