இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இன்று (25) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்.

உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் மாலை வந்திறங்கிய உயர்ஸ்தானிகர், முன்னதாககோவில் வீதியில் அமைந்துள்ள IOM அலுவகத்திற்கு சென்றார்.

அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழி காணப்படும் சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு சென்று புதைகுழிகளை நேரில் பார்வையிட்டார்.

அதன் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது, களத்தில் நின்ற சட்டத்தரணிகள் , மனித புதைகுழி அப்பகுதியில் காணப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் புதைகுழிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ். வளைவுக்கு அருகில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘அணையா விளக்கு’ போராட்ட களத்திற்கு நேரில் சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட அணையா தீபத்திற்கு முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Share.
Leave A Reply

Exit mobile version