புனேயை சேர்ந்த பெண் ஒருவரை லக்னோவை சேர்ந்த நபர் திருமண ஆசை காட்டி ரூ. 3.60 கோடியை மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த 35 வயது பெண் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். இதன் மூலம் அவருக்கு ரூ.5 கோடி கிடைத்தது.

அப்பணத்தை கொண்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று நினைத்து திருமண பதிவு இணையத்தளத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் கடந்த 2023-ம் ஆண்டு இளைஞர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அந்த நபர் தனது பெயர் ரோஹித் பவார் என்றும் ஆஸ்திரேலியாவில் டாக்டராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து பேசினர்.

ரோஹித் பவார் புனே வந்து அப்பெண்ணுடன் தங்கி இருந்திருக்கிறார். அப்போது அப்பெண்ணிடம் ரூ.5 கோடி இருப்பதை ரோஹித் தெரிந்து கொண்டார்.

இதையடுத்து அப்பெண்ணிடம் புதிய தொழிலில் முதலீடு செய்தால் சர்வதேச அளவில் உயர முடியும் என்று அப்பெண்ணிடம் ரோஹித் தெரிவித்தார். அதோடு இரண்டு பேரை அப்பெண்ணிடம் அறிமுகம் செய்து இவர்கள் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.

அவர்கள் இரண்டு பேரும் அப்பெண்ணிடம் பேசி அவரிடமிருந்த ரூ.3.60 கோடியை பல்வேறு வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்ய வைத்தனர்.

அப்பணத்தை வாங்கிக்கொண்ட பிறகு ரோஹித் தனக்கு வாயில் புற்று நோய் இருப்பதாக கூறி படிப்படியாக அப்பெண்ணுடனான தொடர்பை குறைத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் அவருடனான தொடர்பை துண்டித்துக்கொண்டார்.

திடீரென கடந்த செப்டம்பர் மாதம் அப்பெண்ணிற்கு ஒரு மெயில் வந்தது. அதில் ரோஹி இறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதில் சந்தேகம் அடைந்த அப்பெண் இது குறித்து தனது தோழியிடம் தெரிவித்தார். அவர் கொடுத்த ஆலோசனையின் அடிப்படையில் இது குறித்து புனே போலீஸில் புகார் செய்யப்பட்டது.

புனே போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த நபரின் சொந்த ஊர் லக்னோ என்றும், அவரது உண்மையான பெயர் அபிஷேக் சுக்லா என்றும் தெரிய வந்தது.

அவரது நடமாட்டத்தை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். சிங்கப்பூரில் இருந்து மும்பை வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் மும்பை விமான நிலையத்தில் அபிஷேக் சுக்லாவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
Advertisement

அவர் ரோஹித் என்ற பெயரை பயன்படுத்தி 3194 பெண்களுக்கு மேட்ரிமோனியல் மூலம் மெசேஜ் அனுப்பி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து மேலும் பல பெண்களை அவர் மோசடி செய்திருப்பார் என்று தெரிவித்துள்ள புனே போலீஸ் கூடுதல் கமிஷனர் தேஷ்முக் அது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளார். அபிஷேக்கிடம் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version