போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்துக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (30) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஆவார்.

சந்தேக நபரான இளைஞன், இந்தியாவின் மும்பை நகரத்துக்குச் செல்வதற்காக நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ள நிலையில், அந்த விமானத்தில் ஏறாமல், மாலை 05.31 மணியளவில் இந்தியாவின் மும்பை நகரத்தை நோக்கிச் செல்லவிருந்த மற்றுமொரு விமானத்துக்காக பயணச்சீட்டை கொள்வனவு செய்துள்ளார்.

இதன்போது விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இளைஞனின் பயணப்பொதியிலிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட பிரான்ஸ், ஸ்பெயின் கடவுச்சீட்டுகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபரான இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபர் இந்தியா சென்று பின்னர் அங்கிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இந்தியாவில் உள்ள தரகர் ஒருவரின் உதவியுடன் போலி கடவுச்சீட்டுகளை தயாரித்துள்ளதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இளைஞர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version