;ஈரான் – இஸ்ரேல் இடையிலான 12 நாள் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தற்சமயம் அங்கு அமைதி நிலவுகிறது. ‘

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகளைத் தாக்குவோம்’ என்று ஈரான் நாட்டின் தலைமை மதகுருவான அயதுல்லா அலி கமேனி எச்சரித்திருக்கிறார்.

இந்த நிலையில், ஈரான் தனது ராணுவ வலிமையை அதிகரிப்பதற்கான வேலைகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. தற்போது,

Chengdu J-10

சீனாவிடமிருந்து ’செங்டு ஜெ – 10 சி’ ஜெட் விமானங்களை வாங்குவதற்கான முயற்சியில் ஈரான் இறங்கியிருக்கிறது.

‘மூன்றாம் உலகப் போருக்கு இட்டுச்செல்லுமோ…’ என்று கவலையுடன் பார்க்கப்பட்ட ஈரான் – இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்துவிட்டது என்றாலும்,

இந்தப் போருக்கான காரணங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன. இந்தப் பிரச்னையையும், அதற்கான காரணங்களையும், வரலாற்றுப் பின்னணியிலிருந்து பார்த்தால் மட்டுமே சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

நாடற்றவர்களாக இருந்த யூதர்கள், அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவந்தனர்.

அவர்கள், தங்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கினர். அந்த சூழலில், தியோடர் ஹெர்சல் என்பவர் ஜியோனிசத்தின் அடிப்படையில் இஸ்ரேலியர்களுக்கு நாடு வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுவந்தார்.

அதையடுத்து, இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, 1948-ம் ஆண்டு இஸ்ரேல் என்ற நாட்டை அவர்கள் உருவாக்கினர்.

இன்று யூதர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை, சுமார் 15.8 மில்லியன். இவர்களில், தங்களுக்கென்று உருவாக்கிய இஸ்ரேல் நாட்டில் 7.2 மில்லியன் பேர் இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் சுமார் 6.3 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இது தவிர, இங்கிலாந்து, ரஷ்யா, ஐரோப்பா என பல நாடுகளிலும் யூதர்கள் இருக்கிறார்கள்.

ஈரானைப் பார்க்கப்போனால், பழைய பெர்சியாதான் இப்போது இருக்கும் ஈரான். பெர்சியாவுக்கு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. சைரஸ் தி கிரேட் போன்ற பாரசீக மன்னர்கள் ஆண்ட நாடு தான் பெர்சியா.

அங்குதான், ’ஜொராஸ்டிரியனிசம்’ (Zoroastrianism) என்ற மதம் பின்பற்றப்பட்டது. உலகின் பழைமையான மதம் அது.

தத்துவத்திலும், கட்டடக்கலை உள்ளிட்ட கலைகளிலும் பாரசீர்கள் சிறந்து விளங்கினர். அவர்களிடம் எழுத்து முறை இருந்தது. நல்ல நாகரிகத்தை அவர்கள் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில், எட்டாம் நூற்றாண்டில், பாரசீகர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே போர்கள் நடைபெறுகின்றன.

அதில், பெர்சியாவை இஸ்லாமியர்கள் வென்றுவிடுகிறார்கள். அதையடுத்து, ஜொராஸ்டிரியனில் ஒரு குழுவினர், பிற நாடுகளுக்குச் செல்கிறார்கள்.

அதில், ஒரு குழுவினர் இந்தியாவுக்கு வருகிறார்கள். அவர்கள் வந்தது, இன்றைய குஜராத் பகுதி. அங்கு தங்கிய அவர்கள், பிறகு மும்பைக்கு இடம்பெயர்ந்தார்கள்.

அவர்கள், இன்றைக்கு இந்தியாவில் ஒரு லட்சத்துக்கு மேல் இருக்கிறார்கள். அவர்களைத்தான், பார்சிகள் என்று சொல்கிறோம். அவர்கள், ஜெராஸ்டிரிய மதத்தைப் பின்பற்றுகிறார்கள்.

அங்கிருந்து வந்தவர்கள்தான், ரத்தன் டாடாவின் முன்னோர்கள். டாடா நிறுவனம், கோத்ரெஜ் உள்ளிட்ட மிகப்பெரிய தொழில் நிறுவனங்களை நடத்தும் பெரும் தொழிலதிபர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

பின்னாளில், இஸ்லாமிய மன்னர்களால் ஆளப்படும் நாடாக அது மாறியது. ஆகவே, இன்றைக்கு அது இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடாக இருக்கிறது.

அங்கு, சுமார் 90 மில்லியன் மக்கள் வசிக்கிறாக்ள். அவர்களில், 88 சதவிகிதம் பேர் படித்தவர்கள். பெண்களில் அதிகம் பேர் படித்திருக்கிறார்கள். அவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள்.

அதிகமாக முடிவெடுக்கும் நிலையில் பெண்கள் இருக்கிறார்கள். கல்வியையும், அறிவையும், நாகரிக மதிப்பீடுகளையும் உள்ளடக்கிய நாடாக ஈரான் விளங்கிக்கொண்டிருக்கிறது.

1979-க்கும் முன்பு, ஒரு வித்தியாசமான நாடாக ஈரான் விளங்கியது. 1925 முதல் 1979 வரை ஈரானில் பகலவி வம்ச ஆட்சி நடைபெற்றது.

ஈரான், ஜோர்டான் எல்லாம் மேற்கு ஆசியாவில் இருக்கும் நாடுகளில் பழைய நாகரிகங்களின் பின்புலம் கொண்ட நாடுகள்.

எண்ணெய் வருவதற்கு முன்பே கல்வி வந்துவிட்டது என்று சொல்வார்கள். அதாவது, அங்குள்ள எண்ணெய் வளத்தால் மட்டுமே நாங்கள் முன்னேறிவிடவில்லை என்பது அதன் அர்த்தம்.

அந்த நாடுகளில் கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், தத்துவம் என எல்லாமே இருந்தன. எனவே, அமெரிக்காவைப் போன்ற ஒரு நவீன நாடாக ஈரானை உருவாக்க வேண்டும் என்று ஷா முயற்சி செய்தார்.

Mohammad_Reza_Pahlavi

ஆனால், 1979-ல் ஈரானில் நடைபெற்ற புரட்சியில், ரேசா பகலவி என்ற ஷா தூக்கியெறியப்பட்டார்.

அதன் பிறகு ஷியா தலைவர்களின் வசம் நாடு சென்றது. மத அடிப்படையிலான ஆட்சி அமைந்தது.

1979-க்குப் பிறகு அங்கு மதத் தலைவராக வந்த அயதுல்லா அலி கமேனி, அரசியல் தலைவராகவும் இருக்கிறார்.

அதே நேரம், ஓர் அதிபர் தேர்வுசெய்யப்பட்டு, அவரது தலைமையில் அமைச்சரவை செயல்பட்டுவருகிறது.

இதுதான் ஈரானின் இன்றைய ஆட்சி முறை.1980 – 88 காலகட்டத்தில் ஈரான், ஈராக் இடையே எட்டாண்டுகள் போர் நடைபெற்றது.

அதன் பிறகு, குவைத் மீது ஈராக் தலைவர் சதாம் உசேன் படையெடுத்தார். அது, ‘வளைகுடா போர்’ என்று அழைக்கப்படுகிறது. அந்தப் போரையடுத்து, ஈராக் நாட்டில் அணு ஆயுதம் இருப்பதாக உள்ளே நுழைந்த அமெரிக்கா, ஈராக்கை துவம்சம் செய்தது.

சதாம் உசேன் கைது செய்யப்பட்டு, பின்ன தூக்கிலிட்டு கொல்லப்பட்டார். அது ஒரு தனி வரலாறு.

காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், தற்போது ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்று முடிந்திருக்கும் 12 நாள் போருக்கு என்ன காரணம்?

2023-ம் ஆண்டு அக்டோர் 7-ம் தேதி, காஸாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

மேலும், இஸ்ரேலிலிருந்து யூதர்களை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடித்துச்செல்கிறது. அதன் பிறகு ஹமாஸ் மீது இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலைத் தொடங்கியது.

காஸாவில் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், அகதிகளுக்கு உணவு கொடுக்கும் இடங்கள் என எல்லா இடங்களையும் இஸ்ரேல் தாக்கியது.

அதில், 20 ஆயிரம் குழந்தைகள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு பெரும் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.

இப்போது தாக்குதலைத் தொடர்ந்துவருகிறது.

காஸாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்பு, ஈரானில் பயிற்சி பெற்று, ஈரான் ஆதரவுடன் செயல்படுகிறது.

ஆனால், இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் ஹமாஸ் பலவீனமடைந்துவிட்டது. அதன் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டுவிட்டார்.

இன்னும் தன் இஷ்டத்துக்கு காஸாவைத் தாக்கிக்கொண்டிருக்கிறது இஸ்ரேல். இந்த நிலையில், ஈரான் ஆதரைவுடன் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா, ஏமன் நாட்டில் செயல்படும் ஹவுதீஸ் ஆகிய அமைப்புகள் இஸ்ரேலுக்கு எதிராக இயங்கிவருகின்றன.

ஹமாஸ் தலைவர் சின்வாரைக் கொன்றதைப் போல, 2024 அக்டோபரில் லெபனானுக்குள் புகுந்து  ஹிஸ்புல்லாவின் தலைவர் நஸ்ருல்லாவை இஸ்ரேல் கொன்றுவிட்டது.

அதனால், இந்த அமைப்பும் பலவீனமாகிவிட்டது. அதேபோல, ஏமனில் செங்கடல் வழியாகக் கடந்து செல்லும் கப்பல்களை ஹவுதீஸ் தாக்குகிறது என்று சொல்லி, ஹவுதீஸ் இடங்களில் அமெரிக்கா குண்டுவீசியும், ஏவுகணைகளை வீசியும் தாக்குதல் நடத்தியது.

அதில், ஹவுதீஸ் பலவீனமடைந்துவிட்டது.

அந்த மூன்று அமைப்புகளையும் ஒடுக்கிய பிறகு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பார்வை ஈரான் பக்கம் திரும்புகிறது.

‘ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்தால், இஸ்ரேலுக்கு எதிராகத்தான் அது பயன்படுத்தப்படும்.

ஆகவே, ஈரானில் அணுசக்தி தொடர்பான தொழில்நுட்பங்களை அழித்தொழித்துவிட வேண்டுமென்று இஸ்ரேல் நினைக்கிறது.

அப்போதுதான் இஸ்ரேல் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க முடியும் என்று நெதன்யாகு நினைக்கிறார்.

இந்த நிலையில்தான், ஈரானில் ஜூன் 13-ம் தேதியன்று ஐ.ஏ.இ.ஏ ஆய்வு நடத்தியது. விதிமீறல் நிகழ்ந்திருக்கிறதா என்பதற்கான ஆய்வு அது.

அது தொடர்பான முடிவை ஐ.ஏ.இ.ஏ தெரிவிப்பதற்கு முன்பே ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைகளைத் தாக்குதலைத் தொடங்கியது.

இஸ்ரேல் நடத்திய முதல் தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவ கமாண்டர்களும், அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர்.

ஈரானின் எண்ணெய் கிணறு ஒன்றின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. எண்ணெய் கிணறு பற்றி எரிந்தது.

அதையடுத்து, அது ஒரு பொருளாதாரப் போராகவும் பார்க்கப்பட்டது. ஈரான் தனது பதிலடியைத் தொடங்கியது.

ஈரான் வீசிய ஏவுகணைகளால் இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட பல நகரங்கள் கடுமையாக சேதடைந்தன.

ஈரானின் தாக்குதல்களால் தாக்குப்பிடிக்க முடியாமல், பதுங்குமிடங்களில் இஸ்ரேலியர்கள் தஞ்சமடைந்தனர்.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமான போர் தீவிரமடைந்தது. ஈரான் நாட்டின் ஏவுகணைகள் மழை போல இஸ்ரேலில் பொழிந்ததால், நடுக்கமடைந்த இஸ்ரேல், அமெரிக்காவை ஆதரவைக் கோரியது.

“போரை தன்னிச்சையாகத்தானே நீங்கள் ஆரம்பித்தீர்கள். எங்களைக் கேட்டு ஆரம்பக்கவில்லை!\”>என்று சொன்னார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்க வேண்டுமென்று அமெரிக்காவிலுள்ள யூதர்களின் அழுத்தம் கொடுத்தனர்.

அமெரிக்காவில் அதிகாரத்தில் முடிவெடுக்கக்கூடிய நிலையில் யூதர்கள் இருக்கிறார்கள். வர்த்தகம், ஹாலிவுட் உட்பட பல இடங்களில் அவர்கள்தான் கோலோச்சுகிறார்கள். அமெரிக்காவில், ‘பவர்ஃபுல் லாபி’யாக யூதர்கள் இருக்கும் நிலையில், இஸ்ரேலுக்குத் துணையாக இருக்க வேண்டுமென்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர்.

அதன் பிறகுதான், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

அந்த நேரத்தில், ஜி 7 உச்சி மாநாட்டுக்கு ட்ரம்ப் செல்கிறார். அங்கு, போர் நிறுத்தம் வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

ஜி7 உச்சி மாநாட்டிலிருந்து பாதியிலேயே வெளியேறிய ட்ரம்ப், இஸ்ரேல் – ஈரான் போரில் பங்கேற்பது தொடர்பாக இரண்டு வாரங்களில் முடிவெடுப்பதாக தெரிவித்தார்.

ஆனால், அதற்குள்ளாகவே அமெரிக்கா போரில் இறங்கியது. யுரேனியம் செறிவூட்டல் நடைபெறுவதாகச் சொல்லப்படும் ஃபோர்டோ, இஸ்பஹான், நடான்ஸ் ஆகிய நிலையங்கள் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த குண்டுகளை வீசித் தாக்கியது.

அந்த இடங்கள் பலத்த சேதடைந்ததாகச் சொல்லப்படுகிறது. “ஈரானின் அணுஆயுதங்கள் தயாரிப்பதற்கான கட்டமைப்புகளை முற்றிலுமாக அழித்துவிட்டோம\” என்று கூறிய அமெரிக்கா,

“இனிமேல் ஈரானால் அணுஆயுதங்களைத் தயாரிக்க முடியாது” என்று கூறியது.

அமெரிக்காவின் தாக்குதலை தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கையாக ஈரான் பார்த்தது.

எனவே, அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென்று, கத்தாரிலுள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதலை ஈரான் நடத்தியது.

“ஈரானின் பதிலடியை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனாலும், இது தக்க பதிலடியாகத் தெரியவில்லை. ஈரானுக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்று போர் நிறுத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்.

’ஈரான், அணு ஆயுதங்களைத் தயாரிக்க முடியாத அளவுக்கு அதன் தொழில்நுட்பங்களை அழித்துவிட்டோம்’ என்று அமெரிக்கா சொல்கிறது.

ஆனால், அது எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை. இந்தப் போருக்குப் பின்னால், ‘அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து (என்.பி.டி- Non Proliferation treaty) ஈரான் வெளியே வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இதற்கு முன்பு என்.பி.டி-யில் கையெழுத்திட்டுவிட்டு, பின்னர் வெளியே வந்த நாடாக வட கொரியா இருக்கிறது.

அதுபோல, தற்போது ஈரானும் என்.பி.டி-யிலிருந்து வெளியேறும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி அவர்கள் வெளியேறினால், ஈரானின் அணுசக்தி தொடர்பான பணிகளுக்குச் சுதந்திரம் கிடைத்ததுபோல ஆகிவிடும்.

அதன் பிறகு, அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பாக ஈரான் நாட்டை யாரும் கேள்வி கேட்க முடியாத நிலை ஏற்படும்.

ஈரான் – இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தாலும், காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அங்கு பாதிப்புகள் கூடிக்கொண்டே போகின்றன. உயிரிழப்புகளும் நின்றபாடில்லை. இதுவரை அங்கு குழந்தைகள் மட்டுமே 20,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப் பிரச்னை முடிவுக்கு வர வேண்டுமென்றால், பல நாடுகளும் கோரி வருவது போல, பாலஸ்தீனம் உருவாக வேண்டும்.

ஆனால், மேற்கு கரை, காஸா என எல்லா பகுதிகளையும் தங்கள் நாடு தான் என்று இஸ்ரேல் சொல்லிவருகிறது.

அந்த வரைபடத்தைத்தான் அமெரிக்காவிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காண்பித்தார்.

ஒருவேளை, பாலஸ்தீனத்தை தங்களுடைய நாடு என்று இஸ்ரேல் அபரிகத்துக்கொண்டால், பாலஸ்தீனியர்களை அவர்கள் எப்படி நடத்துவார்கள் என்பது தெரியவில்லை.

பாலஸ்தீனியர்களுக்கு குடியுரிமை கொடுத்து, யூதர்களுக்கு இருக்கும் உரிமைகள் அனைத்தையும் இவர்களுக்கும் கொடுப்பார்களா, அல்லது, இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவார்களா என்பது தெரியவில்லை.

பாலஸ்தீன ஆக்கிரமிப்பிலிருந்து இஸ்ரேல் வெளியேறி, காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் முழுமையான நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதைத் தொடர்ந்து, பாலஸ்தீனம் உருவாவதற்கான முயற்சியை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும். இன்றைக்கு அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி!

 

Share.
Leave A Reply

Exit mobile version