டெல்லி: ஏமன் நாட்டில் கேரளச் செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

இருப்பினும், கடைசிக் கட்ட முயற்சியின் பலனால் இந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

மத்திய அரசே கைவிட்ட நிலையில், இந்தியாவின் கிராண்ட் முஃப்தி என்று அழைக்கப்படும் காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் முயற்சியால் இது நடந்துள்ளது.

யார் இந்த அபூபக்கர் முஸ்லியார் இவரது பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.

ஏமன் நாட்டை சேர்ந்த ஒருவரைக் கொலை செய்த வழக்கில் கேரளச் செவிலியர் நிமிஷா பிரியா மரண தண்டனையை எதிர்கொண்டிருந்தார். நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் மரண தண்டனையை நிறுத்த பல முயற்சிகளை எடுத்தனர்.

இருப்பினும், ஏமன் சுப்ரீம் கோர்ட் மரண தண்டனையை உறுதி செய்தது. சட்ட ரீதியாக இருந்த எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது.

 மத்திய அரசு முயன்றும் முடியவில்லை

மத்திய அரசும் கூட இந்த விவகாரத்தில் தன்னால் முடிந்த வரை முயற்சி செய்தது. ஆனால், எதுவுமே பலன் தரவில்லை.

சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கிலும் கூட மத்திய அரசு தன்னால் முடிந்த அனைத்தையுமே செய்ததாகவும் இருந்தாலும் ஏமன் நாட்டில் இருந்தது எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என்றே மத்திய அரசு கூறியது.

நாளை அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அது ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசே தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டோம்.. இனிமேல் முடியாது எனச் சொல்லிவிட்ட சூழலில் கடைசி நேரத்தில் இந்த விவகாரத்தில் தலையிட்டு நிமிஷா பிரியாவை காப்பாற்றி இருக்கிறார் காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார்..

யார் இவர்.. இவரது பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.

இந்தியாவின் கிராண்ட் முஃப்தி

இந்தியாவின் கிராண்ட் முஃப்தி என்று அழைக்கப்படும் முக்கிய சன்னி முஸ்லீம் தலைவரான காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் 1931ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்தார்.

சிறு வயதில் இருந்தே அவருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாக இருந்துள்ளது. இவர் மட்டுமின்றி இவரது குடும்பத்தில் இருந்த அனைவருமே ஆன்மிகத்தில் நட்டமுள்ளவர்களாகவே இருந்துள்ளனர்.

இதன் காரணமாகவே தொடக்கம் முதலே இவரும் ஆன்மீக பாதையில் சென்றுள்ளார்.

ஏகப்பட்ட கல்வி நிறுவனங்கள்

கல்வி மேம்பாட்டின் மூலம் சமூகத்தை உயர்த்த முடியும் என்று நம்பிய அவர் பல பள்ளி கல்லூரிகளைக் கட்ட உதவியிருக்கிறார்.

1978-ல் நிறுவப்பட்ட புகழ்பெற்ற ஜாமியா மர்கஸ் உட்பட பல நிறுவனங்களைச் சொல்லலாம். அவரது இந்த முயற்சி மூலம் பல லட்சம் பேர் இலவசக் கல்வியையும் பெற்றதுள்ளதாக அவர்களின் இணையதளம் குறிப்பிடுகிறது.

மேலும், அவரது முயற்சியால் இப்போது 12,232 ஆரம்பப் பள்ளிகள், 11,010 மேல்நிலைப் பள்ளிகள், 638 கல்லூரிகள் இயங்குவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி குடும்ப ஆதரவு இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் இருப்போருக்கும் ஆதரவளித்து வருகிறார்.

 

1960களில் முதலில் கேரளாவில் 25 பேரைத் தத்தெடுத்து வளர்த்திருக்கிறார். அதன் பிறகு கைவிடப்பட்டோர் பலருக்கும் அபூபக்கர் முஸ்லியார் ஆதரவளித்ததாகச் சொல்லப்படுகிறது.

நிறுத்தி வைக்கப்பட்டது எப்படி!

இந்த அபூபக்கர் முஸ்லியார் எடுத்த முயற்சி காரணமாகவே இப்போது ஏமனில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

94 வயதான ஷேக் அபூபக்கர் இது தொடர்பாக முதலில் ஏமனில் உள்ள மத அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

ரத்தப் பணத்தை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கொடுக்கும்படி மஹ்தி குடும்பத்தினரைச் சமாதானப்படுத்தும் முயற்சியை அவர் இறங்கினார்.

ஷேக் அபூபக்கர் அகமது தலையிட்ட பிறகே மஹ்தி குடும்பத்தினர் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளனர்.

இதுவரை மஹ்தி குடும்பத்தினர் நேரடியாகப் பேச்சுவார்த்தைக்கே வராமல் இருந்துள்ளனர்.ஷேக் அபூபக்கர் எடுத்த முயற்சியாலேயே பேச்சுவார்த்தைக்காக வந்துள்ளனர். அதைத் தொடர்ந்தே மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version