சென்னை: சாய் பல்லவி கடைசியாக அமரன் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
படத்தின் வெற்றியை தாண்டி சாய் பல்லவியின் நடிப்பு ஏகத்துக்கும் கொண்டாடப்பட்டது. அடுத்ததாக அவர் ஹிந்தியில் ராமாயணம் படத்தில் நடித்துவருகிறார்.
அந்தப் படத்தின் மீது இந்தியாவில் பெரும்பாலானோருக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் சாய் பல்லவியை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்திருக்கின்றனர்.
பிரேமம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னதாகவே தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டான்ஸ் ஷோவில் போட்டியாளராக பங்கேற்றார்.
ஆனால் அதில் அவரால் டைட்டிலை அடிக்க முடியவில்லை. அதற்கு பிறகு அமைதியாக இருந்த அவர் பிரேமம் படத்தில் தனது சிறந்த நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தமிழில் சிறப்பு பெற்ற மலர் டீச்சர்: மலையாளத்தில் அறிமுகமாகி தமிழுக்கு வந்த தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சாய் பல்லவி கோலிவுட்டிலும் தனது முத்திரை நடிப்பை வெளிப்படுத்தினார்.
கிளாமர் ரோல் எதுவும் ஏற்காமல் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தெளிவாக இருக்கிறார்
அவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அவர் நடித்த படங்களில் சாய் பல்லவியின் கேரக்டர் எப்போதும் முக்கியமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமரன் சாய் பல்லவி: தமிழில் அவருக்கு ஏற்கனவே நல்ல பெயர்தான் இருக்கிறது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் அந்தப் பெயரை மேலும் உயரத்துக்கு கொண்டு சென்றது.
தமிழில் தனக்கு பெரிய பெயரை அமரன் பெற்றுக்கொடுத்ததால் சாய் பல்லவியும் ஹேப்பி மோடில்தான் இருக்கிறார்.
ஹிந்தியில் சாய் பல்லவி: இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் கலக்கிவந்த அவர் இப்போது ஹிந்தியிலும் தடம் பதித்திருக்கிறார்.
அந்தவகையில் அவர் ராமாயணம் என்ற படத்தில் சீதையாக நடிக்கிறார். படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
கண்டிப்பாக இதில் சாய் பல்லவிக்கு இந்திய அளவில் பெயர் கிடைக்கும் என்று அவரது ரசிகர்கள் இப்போதே ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
முக்கியமாக இந்தப் படத்துக்கு பிறகு ஹிந்தியிலேயே அவருக்கு வாய்ப்புகள் குவிய வாய்ப்புகள் இருப்பதாகவும் பலர் கருதிக்கொண்டிருக்கிறார்கள்.
4,000 கோடி ரூபாய் பட்ஜெட்?: இந்நிலையில் ராமாயணம் படத்தின் பட்ஜெட் குறித்து அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பாட்காஸ்ட் ஒன்றில் பேசியிருக்கிறார்.
அந்த பாட்காஸ்ட்டில் அவர், “ராமாயணம் படத்தின் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து மொத்தம் 4,000 கோடி ரூபாய்க்கும் மேல் பட்ஜெட் போகும்.
இதை கேட்டு பலரும் என்னை பைத்தியம் என்று சொன்னார்கள். எந்தவொரு இந்திய படத்தின் பட்ஜெட்டும் இதன் அருகில்கூட இல்லை.
இது ஒரு மகா காவியம். உலகம் முழுக்க இருக்கும் மக்கள் இந்த மகா காவியத்தை பார்க்க வேண்டும்” என்றார்.
ரசிகர்கள் ஆச்சரியம்: இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் அடுத்த வருட தீபாவளிக்கும், இரண்டாவது பாகம் 2027ஆம் ஆண்டு தீபாவளிக்கும் ரிலீஸாகவிருக்கின்றன.
இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜிம்மர் ஆகியோர் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. 4,000 கோடி பட்ஜெட் படத்தில் சாய் பல்லவி நடிப்பதை தெரிந்த அவரது ரசிகர்கள்; கண்டிப்பாக இனி பல்லவியின் மார்க்கெட் உச்சத்துக்குத்தான் போகப்போகிறது என்று உறுதியோடு கூறுகிறார்கள்.