“லக்னோ,உத்தர பிரதேச மாநிலம் பாக்பாத் பகுதியை சேர்ந்த இளம்பெண் மணிஷா(வயது 28). இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு நொய்டா பகுதியை சேர்ந்த குந்தன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
ஆடம்பரமாக நடைபெற்ற இந்த திருமணத்திற்காக மணிஷாவின் குடும்பத்தினர் சுமார் ரூ.20 லட்சம் செலவு செய்துள்ளனர்.
அதோடு மாப்பிள்ளைக்கு புதிய மோட்டர்சைக்கிள் ஒன்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கு பிறகு வரதட்சணையாக மேலும் பணம் மற்றும் புதிய கார் வேண்டும் என்று குந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் மணிஷாவை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மேலும், குந்தனின் குடும்பத்தினர் மணிஷா மீது மின்சாரம் பாய்ச்சி அவரை கொலை செய்ய முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் மணிஷா தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.
தொடர்ந்து அவர் தனது பெற்றோர் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காததால், குந்தனிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கான ஏற்பாடுகளை மணிஷாவின் குடும்பத்தினர் செய்யத் தொடங்கினர்.
அதே சமயம், வரதட்சணையாக கொடுக்கப்பட்ட பொருட்களை குந்தனின் குடும்பத்தினர் திருப்பி கொடுக்காத வரை விவாகரத்துக்கு சம்மதிக்க மாட்டேன் என மணிஷா திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மணிஷா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கான காரணத்தை தனது கை, கால் மற்றும் வயிற்றுப் பகுதியில் பேனா மூலம் மணிஷா எழுதிவைத்துள்ளார்.
அந்த குறிப்புகள் இந்தியில் எழுதப்பட்டுள்ளன. அதில், தனது மரணத்திற்கு குந்தன் மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என மணிஷா கூறியுள்ளார். அதோடு, தற்கொலைக்கு முன்பு ஒரு வீடியோவையும் மணிஷா பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில் குந்தனின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னை எப்படியெல்லாம் கொடுமை செய்தார்கள் என்பதை மணிஷா கண்ணீர் மல்க விளக்கமாக கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். “,