கிராமிய பேச்சு வழக்கில், ‘ஆடிய கால்கள் சும்மா இருக்காது’ என்பார்கள்.
சண்டை செய்தே பழக்கப்பட்ட மனதும் அப்படித் தான் என்று சொல்லத் தோன்றுகிறது, இஸ்ரேலைப் பார்க்கையில்.
காஸாவை ஆக்கிரமித்து பேரழிவை ஏற்படுத்தி, உலகின் வெறுப்பை சம்பாதித்தாயிற்று.
ஈரானைத் தாக்குகிறேன் பேர்வழியென மூக்குடைபட்டு, பெருத்த அவமானத்தையும் ஈட்டியாயிற்று.
இப்போது, இஸ்ரேலின் போர்வெறி சிரியாவின் மீது பாயத் தொடங்கியிருக்கிறது.
இம்முறை இஸ்ரேல் போட்டிருப்பது, சிரியாவைச் சேர்ந்த த்ரூஷ் சிறுபான்மை மக்களின் ஆபத்பாந்தவன் என்ற வேஷம்.
(இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல் நடத்துவது ஏன்? யார் இந்த ட்ரூஸ் மக்கள்?)
இஸ்ரேலில் வாழும் த்ரூஷ் சமூகத்தவர்களை ( Druze People!) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு எனது சகோதரர்களே என்று விளிக்கிறார்.
சிரியாவின் த்ரூஷ் சகோதரர்களைப் பாதுகாத்து, சிரிய ஆட்சியிலுள்ள கும்பல்களை ஒழித்துக் கட்டப் போவதாகவும் பிரதமர் சூளுரைக்கிறார்.
இதை நெதன்யாஹு தொலைக்காட்சியில் தோன்றி சொல்லிக் கொண்டிருக்கையில், இஸ்ரேலியப் படைகள் சிரிய தலைநகரில் குண்டு போட்டுக் கொண்டிருக்கின்றன.
த்ரூஷ் சமூகத்தவர்கள் மீது இஸ்ரேலியப் பிரதமருக்கு அப்படியென்ன அக்கறை?
Druze People!
இஸ்லாமிய வரலாற்றில் இஸ்மாயிலின் வழி சென்ற பிரிவில் இருந்து 10ஆம் நூற்றாண்டு அளவில் கிளைத்தெழுந்த துணைப் பிரிவாக த்ரூஷ் சமூகத்தவர்களைக் கூறலாம்.
இவர்கள் ஏகத்துவத்தை நம்புகிறார்கள். ஆனாலும், மறுபிறவி போன்ற கோட்பாடுகளையும் ஏற்பதால், பிரதான நீரோட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களிடம் இருந்து பிரிந்து நிற்கிறார்கள்.
இதன் காரணமாக, சுன்னத்துல் ஜமாத் பிரிவைச் சேர்ந்தவர்களின் வெறுப்புக்கு உள்ளானவர்களாகவும் த்ரூஷ் சமூகத்தவர்கள் உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னதாக பஷார் அல்-அசாத் தலைமையிலான அரசாங்கம் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, அஹமத் அல்-ஷாரா இடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதியாக தெரிவானார்.
அல்-கொய்தா இயக்கத்திற்காக ஆயுதமேந்திப் போராடியவர் தான் அல்-ஷாரா. எனினும், புதிய ஆட்சியில் இனரீதியான, மதரீதியான சிறுபான்மை மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
ஆனாலும் கூட, அல்-ஷாராவின் ஆட்சியில் சுன்னத்துல் ஜமாஅத் பிரிவைச் சேர்ந்த ஆயுதபாணி குழுக்கள், ஏனைய மதப்பிரிவுகளைச் சார்ந்தவர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து வருகின்றன.
இப்போது அதிகாரம் மாறியிருப்பதால், சுன்னத்துல் ஜமாஅத் பிரிவை சேர்ந்த கடும்போக்கு அமைப்புகள், அலவி பிரிவை சேர்ந்தவர்களையும், த்ரூஷ் சமூகத்தவர்கள் அடங்கலாக ஏனைய குழுக்களையும் பழிவாங்குவதாக கருத முடியும்.
இஸ்ரேலிய பிரதமர் த்ரூஷ் மக்களைப் பாதுகாக்க நினைப்பது, அந்த சிறுபான்மையினர் மீதான அக்கறையினால் அல்ல.
நெதன்யாஹு உண்மையான அக்கறை கொண்டிருந்தால், செய்திருக்க வேண்டியது த்ரூஷ் மக்களுக்கு ஏனைய கடும்போக்கு குழுக்களில் இருந்து பாதுகாப்பு வழங்குவதே தவிர, அல்-ஷாராவின் ஆட்சி நிர்வாகத்திலுள்ள பாதுகாப்பு அமைச்சு அலுவலகத்தை தாக்குவது அல்ல.
இங்கு இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டியுள்ளது. உலகெங்கிலும் த்ரூஷ் சமூகத்தைச் சேர்ந்த சுமார் பத்து இலட்சம் பேர் வாழ்கிறார்கள்.
இவர்களில் ஏழு இலட்சம் பேர் சிரியாவிலும், ஒன்றரை இலட்சம் பேர் இஸ்ரேலிலும் உள்ளனர்.
1967ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத்தில் இஸ்ரேல் சிரியாவிடம் இருந்து கைப்பற்றி, 1981ஆம் ஆண்டு தமது நாட்டுடன் இணைந்து கொண்ட கோலான் மேட்டு நிலத்திலும் த்ரூஷ் மக்கள் உள்ளனர்.
பஷார் அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, இடைக்கால அரசாங்கத்தின் அரச படைகளுக்கும் துருஷ் கிளர்ச்சி இயக்கத்திற்கும் இடையில் சண்டை நடந்தது. இந்த சண்டையில் பலர் கொல்லப்பட்டார்கள்.
சிறு சம்பவத்தின் அடிப்படையில், துருஷ் மக்களுக்கும், பெதுயின் என்ற பழங்குடி சமூகத்திற்கும் இடையில் மோதல் தலைதூக்கியதை அடுத்து அரச படைகள் தலையிட நேர்ந்தது.
அப்படியானால், இஸ்ரேல் சிரியாவின் பாதுகாப்பு அமைச்சு கட்டடத்தை குண்டு போட்டு தகர்ப்பதன் நோக்கம் என்ன?
புதிய நிர்வாகத்தின் ஆட்சியை சீர்குலைத்து, சிரியாவில் இன வன்முறையைத் தூண்டி, துருஷ் சிறுபான்மை மக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வைத் தூண்டி விடுவது தான்.
இஸ்ரேலில் வாழும் துருஷ் சமூகத்தவர்கள், இஸ்ரேலியப் படைகளில் உயர் பதவிகளை வகிக்கிறார்கள். தம்மை சிரிய தேசத்தவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பிய போதிலும், அவர்கள் இஸ்ரேலிய தேசத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் சமூகத்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
அப்படியானால், இஸ்ரேல் என்ன செய்திருக்க வேண்டும்? இந்த சமூகத்தவர்களை முறையாக அங்கீகரித்து, அரவணைத்துக் கொண்டிருக்க வேண்டாமா?
ஆனால், பெஞ்சமின் நெதன்யாஹு செய்தது யாதெனில், 2018 இல் ‘யூத தேச இராஜ்ஜியம்’ என்ற சர்ச்சைக்குரிய சட்டத்தை நிறைவேற்றியது தான்.
இந்த சட்டம் இஸ்ரேலை யூதர்களுக்கு மாத்திரமே உரிய தேசமாக மாற்றியது. ஏனைய சிறுபான்மை மக்களைப் புறக்கணித்தது, இந்த சிறுபான்மையினரில் த்ரூஷ் சமூகத்தவர்கள் முக்கியமானவர்கள்.
சொந்த நாட்டில் வாழும் த்ரூஷ் சமூகத்தவர்களுக்கு உரிமை வழங்காத இஸ்ரேலியப் பிரதமர், சுவெய்தா மாநிலத்தில் வாழும் த்ருஷ் மக்களைப் பாதுகாப்பதற்காக சிரியத் தலைநகரில் குண்டு போடும் தாற்பர்யம் என்ன?
இந்த நோக்கத்தில் மறைந்திருப்பது முற்றுமுழுதான சந்தர்ப்பவாதம் தான்.
சிரியாவில் வாழும் த்ரூஷ் மக்களுக்கு உறுதியான அரசியல் தலைமைத்துவம் கிடையாது. இவர்களில் சிலர் இஸ்ரேலை எதிரியாக பார்க்கிறார்கள். இந்த சமூகத்தவர்களின் சில தலைவர்கள் இஸ்ரேலுக்கு நெருக்கமாக செயற்பாடுகிறார்கள்.
சிரியாவின் த்ரூஷ் சமூகத்தவர்கள் தமது எதிர்காலம் எப்படி இருக்குமென தெரியாதவர்களாக இருக்கிறார்கள். சிலர் கிளர்ச்சி செய்து ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். சிலர் புதிய அரசாங்கத்துடன் அனுசரித்து செல்ல வேண்டும் என கருதுகிறார்கள்.
சிரியாவின் இடைக்கால அரசாங்கம், 23 அமைச்சர்களைக் கொண்டிருக்கிறதென்றால், விவசாய அமைச்சர் த்ரூஷ் சமூகத்தவராக இருக்கிறார். அரசாங்கத்துடன் பேரம் பேசி கூடுதலான உரிமைகளை வென்றெடுக்கலாம் என்று கருதுபவர்களும் உண்டு.
இடைக்கால அரசாங்கத்தின் மீது த்ரூஷ் மக்களின் நம்பிக்கையை வளரவிடாமல் தடுத்து, வெறுப்பைத் தூண்டி விட்டு, சண்டையில் குளிர்காய்வது இஸ்ரேலின் முற்றுமுழுதான நோக்கம்.
சிரியாவின் அரச படைகளின் துணையுடன் பூர்வீக பழங்குடி குழுவொன்று சுவெய்தாவில் வாழும் த்ருஷ் மக்கள் மீது பெரும் அட்டூழியங்களை கட்டவிழ்த்து விட்டதாக பெஞ்சமின் நெதன்யாஹு குற்றம் சுமத்துவாராயின், இதற்கு முன்னர் நிகழ்ந்த தாக்குதல்களின் போது அவர் எங்கே இருந்தார் என்பதையும் கேட்க வேண்டும்.
2018ஆம் ஆண்டில் ‘இஸ்லாமிய இராஜ்ஜிய’ ஆயுதபாணி இயக்கம் ஸ்வெய்தா மாநிலத்தில் த்ரூஷ் சமூகத்தவர்கள் மீது மோசமான வன்முறையைக் கட்டவிழ்த்து, நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்தது. பலரை பணயக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது. அப்போது நெதன்யாஹு என்ன செய்தார்? அதே ஆண்டில் தான் ‘யூத தேச இராஜ்ஜியம்’ என்ற சட்டத்தை நிறைவேற்றினார்.
சிரியாவில் புதிதாக ஆட்சி நிர்வாகத்தைப் பொறுப்பேற்றிருக்கும் அரசாங்கம், நாட்டின் தென்பகுதியில் தமது கட்டுப்பாட்டை நிலைநாட்ட பிரயத்தனம் செய்கிறது.
அது பொது எல்லைக்கு அருகில் அமைந்துள்ள பிரதேசம் என்பதால், அங்கு சிரியாவின் அரச படைகள் குவிக்கப்படுவது இஸ்ரேலுக்குப் பிடிக்கவில்லை.
இந்தப் பிராந்தியத்தில் எப்படியாவது ஆதிக்கம் செலுத்த முனைகிறது. இதற்காக இரண்டு தந்திரங்களை கையாள்கிறது.
இங்கு போர் சூன்யப் பிரதேசங்களை ஏற்படுத்துவதாகக் கூறுவது முதல் தந்திரம். இங்கு வாழும் த்ருஷ் மற்றும் குர்திஷ் சமூகத்தவர்களின் ஆதரவை வென்று அவர்களின் ஆபத்பாந்தவர்களாக காட்டிக் கொண்டு, சிரிய படைகளை எதிர்க்கச் செய்வது அடுத்த தந்திரோபாயம்.
இன்னொரு விடயத்தையும் வலியுறுத்த வேண்டும். பெஞ்சமின் நெதன்யாஹுவிற்கு போர் செய்து கொண்டிருப்பதைத் தவிர, யுத்தங்களின் மூலம் தமது இமேஜைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறெதுவும் தெரியாது.
தம்மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்தும், சரிந்து வரும் வெகுஜன ஆதரவில் இருந்தும், வீழ்ச்சி கண்டு வரும் அரசியல் செல்வாக்கில் இருந்தும் மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்கு எதையாவது செய்தே ஆக வேண்டும்.
தவிரவும், அயலில் உள்ள பகைமை தேசம் சிதறியிருக்கும் வரை அது நெதன்யாஹுவிற்கு நன்மை பயக்கும். அது எப்போது ஒன்றுபடுகிறதோ, அப்போது தம்மை இன்னொரு சனிபிடிக்கும் என்பதை அவர் அறிவார்.
எனவே, சிரியாவை ஐக்கிய தேசமாக கட்டியெழுப்பும் முயற்சிகளை சீர்குலைத்து, தமது தோல்விகள் மீதான பார்வையை திசை திருப்பும் நோக்கில், தமது பழக்கப்பட்ட போர்வெறிக்குள் இஸ்ரேலியப் பிரதமர் மீண்டும் தஞ்சம் கோரியிருக்கிறார் என்று இப்போதைக்கு சொல்லலாம்.
-சதீஷ் கிருஷ்ணபிள்ளை-