செம்மணியில், ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி ஒன்று, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விரு எலும்புக்கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 37 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 25 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 10 ஆவது நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை வரையில் 37 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 34 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 03 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 102 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 115 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version