ஆதிப் அபு காதர். 17 வயது வளரிளம் பருவ இளைஞன். காஸாவில் யுத்தம் தொடங்குவதற்கு முன்னர், திடகாத்திரமான உடற்கட்டுடன் இருந்தவர்.
இன்று ஆதிப் காஸாவின் வடக்கில் உள்ள வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகிறார். உடற்கட்டு சீர்குலைந்து, எலும்பும் தோலுமாக இருக்கிறார்.
தமது பிள்ளையின் உடலில் சிகிச்சை எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தந்தையின் ஆதங்கம். மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளுடன் காஸா நகரில் வசிக்கும் அவர் குடும்பம்.
நான்கு கம்பங்களை ஊன்றி, அதன் மேலே படுக்கை விரிப்பையொன்றை செருகி, அதற்குள் எப்படியாவது அடுத்த நாளை கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.
வருமானம் இல்லை. உணவு கிடையாது. எப்போது துப்பாக்கி ரவைகள் உடலைத் துளைக்கும் என்பதை அனுமானிக்க முடியாது. உணவுக்காக தொலைதூரம் செல்லலாம். கையேந்தி நிற்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால், ஒரு பொட்டலம் கிடைக்கும். உயிருடன் திரும்பி வரலாம் என்ற உத்தரவாதம் தான் கிடையாது.
ஆதிப், நோய்க்காகவோ, காயமடைந்தோ அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவில்லை. போஷாக்கின்மைக்காக சிகிச்சை பெறுகிறார். காஸாவின் சமகால நிலைவரம் துயரக்கடல் என்றால், ஆதிப்பின் கதை ஒரு துளி மாத்திரமே.
போர் வெறி பிடித்த அராஜகர்களால், கொலைக்களமாக மாற்றப்பட்ட நிலப்பரப்பு. அங்கு யுத்தம் விளைவித்துக் கொண்டிருக்கும் பேரழிவைத் தொடர்ந்து, பசியும் பட்டினியும் பெருநோயாக மாறியள்ளது.
சுமார் 365 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பிற்குள் வேலி போட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 20 இலட்சம் மக்களுக்கு போதிய உணவு இல்லை. நீர் கிடையாது. மருந்து வகைகளுக்கு தீவிர பற்றாக்குறை.
ஒட்டுமொத்த சனமும் எதுவித பாதுகாப்பின்றி அல்லற்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கையிடுகிறது.
இவர்களில் 470,000 பேர், அதாவது ஐவரில் ஒருவர், அடுத்த வேளை உணவு கிடையாமல் மிகவும் மோசமான பட்டினியால் வாடுவதாக யுனிசெப் புள்ளி விபரங்களை வெளியிடுகிறது.
பாதிப்புகள் இவை மாத்திரமல்ல. ஐந்து வயதிற்கு உட்பட்ட 71,000 இற்கு மேலான பிள்ளைகளும், கர்ப்பிணிகளான அல்லது பாலூட்டும் 17,000 இற்கு மேலான தாய்மாரும் தீவிர போஷாக்கின்மையால் அவதிப்படுகிறார்கள்.
கடந்த மார்ச் 2ஆம் திகதி இஸ்ரேலியப் படைகள் காஸாவுக்கான உணவு விநியோகத்தை முடக்கியதை அடுத்து, ஐந்து வயதுக்கு உட்பட்ட 57 பிள்ளைகள் போஷாக்கின்மையால் உயிரிழந்ததாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
காஸா நிலப்பரப்பு முழுவதிலும் பட்டினியுடன் தொடர்புடையதாக 875 மரணங்கள் நிகழ்ந்ததாக ஆவணப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறுகின்றன.
காஸா மக்களுக்கு உணவுப் பண்டங்களையும், நிவாரணங்களையும் அனுப்ப இரு வழிகள் இருக்கின்றன.
சர்வதேச மட்டத்திலான தொண்டு நிறுவனங்கள் வாகனத் தொடரணிகள் மூலம் கொண்டு வரும் பொருட்களை எல்லை நுழைவாயில்கள் ஊடாக விநியோகிக்கும் முறை. இது பழையது.
காஸா மனிதாபிமான ஸ்தாபனம் (Gaza Humanitarian Foundation- – GHF) என்ற அமைப்பின் ஊடாக பொருட்களை விநியோகிப்பது இரண்டாவது முறை. இது கடந்த மாதம் மார்ச் 2ஆம் திகதிக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட முறை.
இந்த ஜி.எச்.எவ். என்பது அமெரிக்க, இஸ்ரேலிய அரசுகளின் உதவியில் இயங்கும் ஸ்தாபனம். ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் முறையை முற்றுமுழுதாக முடக்குவதற்காக ஜி.எச்.எவ். ஏற்படுத்தப்பட்டது.
இதில் யார் யாரெல்லாம் வேலை செய்கிறார்கள், எந்த வகையில் உணவு விநியோகிக்கப்படுகிறது என்பதெல்லாம் மர்மமாகவே தொடர்கிறது. பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, விபரங்களை வெளியிட முடியாதென அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஜி.எச்.எவ் ஊடாக ஸ்தாபிக்கப்பட்ட நான்கு ஸ்தானங்களில் உணவுக்காக வரிசையில் நின்ற மக்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்த சம்பவங்கள் நிகழ்ந்தன.

இந்த ஸ்தானங்களில் ஹமாஸ் இயக்கம் வன்முறையைத் தூண்டி விட்டதாகவும், இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்துவதைத் தவிர வேறு வழியில்லையெனவும் இஸ்ரேலிய தரப்பு சாக்குப் போக்கு சொல்கிறது.
ஆனால், ஜி.எச்.எவ். ஸ்தாபிக்கப்பட்ட நோக்கம் வேறு. பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கு ஆலோசனை வழங்க சில போர் வெறியர்கள் உள்ளனர். அவர்களுக்கு காஸா பற்றியும் தெரியாது. பலஸ்தீன மக்கள் பற்றிய அறிவும் கிடையாது.
எப்படியாவது காஸா பலஸ்தீனர்களிடம் இருந்து ஹமாஸ் இயக்கத்தைத் தனிமைப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் ரோமன் கொவ்மன் என்பவர் ஸ்தாபித்தது தான், ஜி.எச்.எவ். இந்த மனிதர் நெதன்யாஹுவின் இராணுவ அலுவல்களுக்கான செயலாளர்.
பலஸ்தீனர்களது சகல உரிமைகளையும் முடக்கி விட்டு, உயிர் வாழ்வற்கான சூழலையும் இல்லாதொழித்து விட்டு, இந்த மக்களுக்காக போராடும் இயக்கமொன்றை – அதுவும் மக்களால் தம்மை ஆட்சி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட அமைப்பொன்றை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்த முயல்வது எவ்வளவு பெரிய மூடத்தனம்?
ஊழல் மோசடிகளிலும் சம்பந்தப்பட்ட மக்கள் மத்தியில் வெறுப்பை சந்தித்து வரும் நெதன்யாஹுவிற்கு அரசியல் ரீதியாக பிழைத்திருத்தல் முக்கியமானது. இதற்காக, பெஸாலல் ஸ்மொட்ரிச், இட்டமார் பென் கிவிர் ஆகியோரது துணையை நாடுகிறார். இவர்களில் ஒருவர் நிதியமைச்சர், மற்றவர் பாதுகாப்பு அமைச்சர். இவர்களின் ஆதரவு இன்றி நெதன்யாஹுவின் கூட்டணி அரசாங்கம் நிலைத்திருக்க முடியாது.
பிரச்சினை யாதெனில், இவ்விருவரும் காஸா மக்கள் பட்டினியால் சாக வேண்டும் என்று விரும்பும் அளவிற்கு தீவிர போர் வெறியர்களாக இருப்பது தான். காஸாவிற்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படக்கூடாது என்பதை இருவரும் பல தடவைகள் பகிரங்கமாக கூறியிருக்கிறார்கள்.
பெஸாலெல், பென்-கிவிர் ஆகியோரது எண்ணக்கருவில் உதித்தது தான், ஜி.எவ்.எவ். என்ற அமைப்பை ஸ்தாபித்து, ஐ.நா. நிவாரண விநியோக முறைமையை முடக்கும் திட்டம்.
இத்தகைய இன்னொரு திட்டமும் உண்டு. இதன் பெயர் மனிதாபிமான நகர். காஸாவில் வாழும் சகல பலஸ்தீனர்களையும் கான்-யூனுஸ், ரஃபா ஆகிய இடங்களுக்குள் உள்ள சிறிய நிலப்பரப்பிற்குள் முடக்கி வைத்து, அதற்கு மனிதாபிமானம் என்று பெயர் சூட்டுவது. இது இனச்சுத்திகரிப்பின் வரைவிலக்கணங்களுக்குள் இலகுவாக பொருந்தக்கூடியது.
ஒரு மக்கள் கூட்டத்தை பட்டினி போடுதல் என்பது போர்முறை உத்தியாயின், அது சர்வதேச மனிதாபிமான சட்டத்தில் வெளிப்படையான குற்றமாகும்.
ஜெனீவா பிரகடனத்தின் முதலாவது சமவாயத்தின் 54 ஆவது ஷரத்தில், இது தெளிவாக எழுதப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஸ்தாபிக்க வழிவகுத்த ரோமன் சட்டத்தின் (ஷரத்து 8) கீழ், இது போர்க் குற்றத்திற்கு ஒப்பானது.
ஹமாஸ் இயக்கத்தை மாத்திரமன்றி, காஸா பள்ளத்தாக்கின் ஒட்டுமொத்த மக்களையும் தண்டிக்கும் வகையில், இஸ்ரேலிய அரசாங்கம் உணவு விநியோகத்தை முடக்கி, அடிப்படை வசதிகள் கிடைப்பதைத் தடுக்கிறது.
தாம் செய்யாத குற்றத்திற்காக ஒருவரைத் தண்டிக்கும் இத்தகைய கூட்டுத்தண்டனை’ நான்காவது ஜெனீவா பிரகடனத்தின் 33ஆவது ஷரத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.
ஒரு நெருக்கடியின்போது, எதுவித தடையும் இன்றி மனிதாபிமான உதவிகள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சர்வதேச சட்டம் கோருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் ட்ரக் வண்டிகளையும், உணவு விநியோகிக்கப்படும் பாதைகளையும் முடக்கி வைத்தல் என்பது, இதன் அடிப்படையில், சர்வதேச சட்டத்தை மீறுவதாகும்.
இஸ்ரேலியப் படைகள் காஸா மக்களை பூண்டோண்டு அழித்து விடுவதற்காக முன்னெடுக்கும் படை நடவடிக்கைகள் மாத்திரமல்ல. ஒரு சனக்கூட்டத்தை முற்றுழுழுதாக இல்லாதொழிப்பதற்காக வேண்டுமென்று பட்டினி போடுவதும் இனச் சுத்திகரிப்பாக வரையறுக்கக்கூடியது தான்.
இனச்சுத்திகரிப்பு என்ற குற்றச்சாட்டுடன் தென்ஆபிரிக்கா தாக்கல் செய்த வழக்கொன்று சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) விசாரிக்கப்பட்டு வருகிறது.
போர் வெறி கொண்ட இஸ்ரேலியத் தலைவர்களுக்கு சட்டங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. இஸ்ரேலிய மக்கள் மத்தியிலும் வெறுப்பும், அதிருப்தியும் பரவத் தொடங்கியிருப்பதை அவர்கள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.
காஸா மக்கள் எத்தனை துயரங்களை அனுபவிக்கிறார்கள், அவை எந்தளவு மோசமானவை என்பதை பார்க்கையில், அங்கு மனிதம் எந்தளவு தரம் தாழ்ந்துள்ளது என்று அனுமானிக்கலாம். அதையும் தாண்டி, எவ்வளவு மோசமான குற்றச்செயல்கள் நிகழ்கின்றன என்பதையும் ஆராயலாம்.
இந்தக் குற்றங்கள் பற்றிய ஆதாரங்களைத் திரட்டி, அவற்றை சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, முறையான விசாரணை நடத்தக்கூடிய அரசியல் நோக்கம் சமகால உலக அரசியல் ஒழுங்கில் சாத்தியப்படுமா என்பது சந்தேகம் தான்.
ஆனால், காஸா விவகாரத்தில் இந்தக் கட்டுரையை எழுதிய நானும், இதனை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் கூட, குற்றவாளிகளை கூண்டுக்குள் நிறுத்த திராணியற்ற, தார்மீக பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாத உலகப் பிரஜைகளகாக இருக்கிறோம் என்பதே தவிர்க்க முடியாத உண்மை.
-சதீஷ் கிருஷ்ணபிள்ளை-