ஆதிப் அபு காதர். 17 வயது வள­ரிளம் பருவ இளைஞன். காஸாவில் யுத்தம் தொடங்­கு­வ­தற்கு முன்னர், திட­காத்­தி­ர­மான உடற்­கட்­டுடன் இருந்­தவர்.

இன்று ஆதிப் காஸாவின் வடக்கில் உள்ள வைத்­தி­ய­சா­லையின் அவ­சர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறு­கிறார். உடற்­கட்டு சீர்­கு­லைந்து, எலும்பும் தோலு­மாக இருக்­கிறார்.

தமது பிள்­ளையின் உடலில் சிகிச்சை எது­வித மாற்­றத்­தையும் ஏற்­ப­டுத்­த­வில்லை என்­பது தந்­தையின் ஆதங்கம். மனைவி மற்றும் ஐந்து பிள்­ளை­க­ளுடன் காஸா நகரில் வசிக்கும் அவர் குடும்பம்.

நான்கு கம்­பங்­களை ஊன்றி, அதன் மேலே படுக்கை விரிப்­பை­யொன்றை செருகி, அதற்குள் எப்­ப­டி­யா­வது அடுத்த நாளை கழிக்க வேண்­டிய நிர்ப்­பந்தம்.

வரு­மானம் இல்லை. உணவு கிடை­யாது. எப்­போது துப்­பாக்கி ரவைகள் உடலைத் துளைக்கும் என்­பதை அனு­மா­னிக்க முடி­யாது. உண­வுக்­காக தொலை­தூரம் செல்­லலாம். கையேந்தி நிற்­கலாம். அதிர்ஷ்டம் இருந்தால், ஒரு பொட்­டலம் கிடைக்கும். உயி­ருடன் திரும்பி வரலாம் என்ற உத்­த­ர­வாதம் தான் கிடை­யாது.

ஆதிப், நோய்க்­கா­கவோ, காய­ம­டைந்தோ அவ­சர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. போஷாக்­கின்­மைக்­காக சிகிச்சை பெறு­கிறார். காஸாவின் சம­கால நிலை­வரம் துய­ரக்­கடல் என்றால், ஆதிப்பின் கதை ஒரு துளி மாத்­தி­ரமே.

போர் வெறி பிடித்த அரா­ஜ­கர்­களால், கொலைக்­க­ள­மாக மாற்­றப்­பட்ட நிலப்­ப­ரப்பு. அங்கு யுத்தம் விளை­வித்துக் கொண்­டி­ருக்கும் பேர­ழிவைத் தொடர்ந்து, பசியும் பட்­டி­னியும் பெரு­நோ­யாக மாறி­யள்­ளது.

சுமார் 365 சதுர கிலோ­மீற்றர் நிலப்­ப­ரப்­பிற்குள் வேலி போட்டு அடைத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் 20 இலட்சம் மக்­க­ளுக்கு போதிய உணவு இல்லை. நீர் கிடை­யாது. மருந்து வகை­க­ளுக்கு தீவிர பற்­றாக்­குறை.

ஒட்­டு­மொத்த சனமும் எது­வித பாது­காப்­பின்றி அல்­லற்­ப­டு­வ­தாக உலக சுகா­தார ஸ்தாபனம் அறிக்­கை­யி­டு­கி­றது.

இவர்­களில் 470,000 பேர், அதா­வது ஐவரில் ஒருவர், அடுத்த வேளை உணவு கிடை­யாமல் மிகவும் மோச­மான பட்­டி­னியால் வாடு­வ­தாக யுனிசெப் புள்ளி விப­ரங்­களை வெளி­யி­டு­கி­றது.

பாதிப்­புகள் இவை மாத்­தி­ர­மல்ல. ஐந்து வய­திற்கு உட்­பட்ட 71,000 இற்கு மேலான பிள்­ளை­களும், கர்ப்­பி­ணி­க­ளான அல்­லது பாலூட்டும் 17,000 இற்கு மேலான தாய்­மாரும் தீவிர போஷாக்­கின்­மையால் அவ­திப்­ப­டு­கி­றார்கள்.

கடந்த மார்ச் 2ஆம் திகதி இஸ்­ரே­லியப் படைகள் காஸா­வுக்­கான உணவு விநி­யோ­கத்தை முடக்­கி­யதை அடுத்து, ஐந்து வய­துக்கு உட்­பட்ட 57 பிள்­ளைகள் போஷாக்­கின்­மையால் உயி­ரி­ழந்­த­தாக உலக சுகா­தார ஸ்தாபனம் அறி­வித்­துள்­ளது.

காஸா நிலப்­ப­ரப்பு முழு­வ­திலும் பட்­டி­னி­யுடன் தொடர்­பு­டை­ய­தாக 875 மர­ணங்கள் நிகழ்ந்­த­தாக ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்கள் கூறு­கின்­றன.

காஸா மக்­க­ளுக்கு உணவுப் பண்­டங்­க­ளையும், நிவா­ர­ணங்­க­ளையும் அனுப்ப இரு வழிகள் இருக்­கின்­றன.

சர்­வ­தேச மட்­டத்­தி­லான தொண்டு நிறு­வ­னங்கள் வாகனத் தொட­ர­ணிகள் மூலம் கொண்டு வரும் பொருட்­களை எல்லை நுழை­வா­யில்கள் ஊடாக விநி­யோ­கிக்கும் முறை. இது பழை­யது.

காஸா மனி­தா­பி­மான ஸ்தாபனம் (Gaza Humanitarian Foundation- – GHF) என்ற அமைப்பின் ஊடாக பொருட்­களை விநி­யோ­கிப்­பது இரண்­டா­வது முறை. இது கடந்த மாதம் மார்ச் 2ஆம் திக­திக்குப் பின்னர் ஸ்தாபிக்­கப்­பட்ட முறை.

இந்த ஜி.எச்.எவ். என்­பது அமெ­ரிக்க, இஸ்­ரே­லிய அர­சு­களின் உத­வியில் இயங்கும் ஸ்தாபனம். ஐக்­கிய நாடுகள் சபையின் ஊடாக நிவா­ரணப் பொருட்­களை விநி­யோ­கிக்கும் முறையை முற்­று­மு­ழு­தாக முடக்­கு­வ­தற்­காக ஜி.எச்.எவ். ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

இதில் யார் யாரெல்லாம் வேலை செய்­கி­றார்கள், எந்த வகையில் உணவு விநி­யோ­கிக்­கப்­ப­டு­கி­றது என்­ப­தெல்லாம் மர்­ம­மா­கவே தொடர்­கி­றது. பாது­காப்பு கார­ணங்­களை முன்­னிட்டு, விப­ரங்­களை வெளி­யிட முடி­யா­தென அதி­கா­ரிகள் கூறு­கி­றார்கள்.

ஜி.எச்.எவ் ஊடாக ஸ்தாபிக்­கப்­பட்ட நான்கு ஸ்தானங்­களில் உண­வுக்­காக வரி­சையில் நின்ற மக்கள் துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி மர­ணித்த சம்­ப­வங்கள் நிகழ்ந்­தன.

 

Palestinians carry aid supplies that entered Gaza through Israel, in Beit Lahia, northern Gaza Strip, July 27, 2025. REUTERS/Mahmoud Issa

இந்த ஸ்தானங்­களில் ஹமாஸ் இயக்கம் வன்­மு­றையைத் தூண்டி விட்­ட­தா­கவும், இந்த வன்­மு­றை­களைக் கட்­டுப்­ப­டுத்த துப்­பாக்கிச் சூடு நடத்­து­வதைத் தவிர வேறு வழி­யில்­லை­யெ­னவும் இஸ்­ரே­லிய தரப்பு சாக்குப் போக்கு சொல்­கி­றது.

ஆனால், ஜி.எச்.எவ். ஸ்தாபிக்­கப்­பட்ட நோக்கம் வேறு. பெஞ்­சமின் நெதன்­யா­ஹு­வுக்கு ஆலோ­சனை வழங்க சில போர் வெறி­யர்கள் உள்­ளனர். அவர்­க­ளுக்கு காஸா பற்­றியும் தெரி­யாது. பலஸ்­தீன மக்கள் பற்­றிய அறிவும் கிடை­யாது.

எப்­ப­டி­யா­வது காஸா பலஸ்­தீ­னர்­க­ளிடம் இருந்து ஹமாஸ் இயக்­கத்தைத் தனி­மைப்­ப­டுத்தி விட வேண்டும் என்ற நோக்­கத்­துடன் ரோமன் கொவ்மன் என்­பவர் ஸ்தாபித்­தது தான், ஜி.எச்.எவ். இந்த மனிதர் நெதன்­யா­ஹுவின் இரா­ணுவ அலு­வல்­க­ளுக்­கான செய­லாளர்.

பலஸ்­தீ­னர்­க­ளது சகல உரி­மை­க­ளையும் முடக்கி விட்டு, உயிர் வாழ்­வற்­கான சூழ­லையும் இல்­லா­தொ­ழித்து விட்டு, இந்த மக்­க­ளுக்­காக போராடும் இயக்­க­மொன்றை – அதுவும் மக்­களால் தம்மை ஆட்சி செய்­வ­தற்­காக தெரிவு செய்­யப்­பட்ட அமைப்­பொன்றை மக்­க­ளிடம் இருந்து அந்­நி­யப்­ப­டுத்த முயல்­வது எவ்­வ­ளவு பெரிய மூடத்­தனம்?

ஊழல் மோச­டி­க­ளிலும் சம்­பந்­தப்­பட்ட மக்கள் மத்­தியில் வெறுப்பை சந்­தித்து வரும் நெதன்­யா­ஹு­விற்கு அர­சியல் ரீதி­யாக பிழைத்­தி­ருத்தல் முக்­கி­ய­மா­னது. இதற்­காக, பெஸாலல் ஸ்மொட்ரிச், இட்­டமார் பென் கிவிர் ஆகி­யோ­ரது துணையை நாடு­கிறார். இவர்­களில் ஒருவர் நிதி­ய­மைச்சர், மற்­றவர் பாது­காப்பு அமைச்சர். இவர்­களின் ஆத­ரவு இன்றி நெதன்­யா­ஹுவின் கூட்­டணி அர­சாங்கம் நிலைத்­தி­ருக்க முடி­யாது.

பிரச்­சினை யாதெனில், இவ்­வி­ரு­வரும் காஸா மக்கள் பட்­டி­னியால் சாக வேண்டும் என்று விரும்பும் அள­விற்கு தீவிர போர் வெறி­யர்­க­ளாக இருப்­பது தான். காஸா­விற்கு நிவா­ரணப் பொருட்கள் அனுப்­பப்­ப­டக்­கூடாது என்­பதை இரு­வரும் பல தட­வைகள் பகி­ரங்­க­மாக கூறி­யி­ருக்­கி­றார்கள்.

பெஸாலெல், பென்-­கிவிர் ஆகி­யோ­ரது எண்­ணக்­க­ருவில் உதித்­தது தான், ஜி.எவ்.எவ். என்ற அமைப்பை ஸ்தாபித்து, ஐ.நா. நிவா­ரண விநி­யோக முறை­மையை முடக்கும் திட்டம்.

இத்­த­கைய இன்­னொரு திட்­டமும் உண்டு. இதன் பெயர் மனி­தா­பி­மான நகர். காஸாவில் வாழும் சகல பலஸ்­தீ­னர்­க­ளையும் கான்-­யூனுஸ், ரஃபா ஆகிய இடங்­க­ளுக்குள் உள்ள சிறிய நிலப்­ப­ரப்­பிற்குள் முடக்கி வைத்து, அதற்கு மனி­தா­பி­மானம் என்று பெயர் சூட்­டு­வது. இது இனச்­சுத்­தி­க­ரிப்பின் வரை­வி­லக்­க­ணங்­க­ளுக்குள் இல­கு­வாக பொருந்­தக்­கூ­டி­யது.

ஒரு மக்கள் கூட்­டத்தை பட்­டினி போடுதல் என்­பது போர்­முறை உத்­தி­யாயின், அது சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டத்தில் வெளிப்­ப­டை­யான குற்­ற­மாகும்.

ஜெனீவா பிர­க­ட­னத்தின் முத­லா­வது சம­வா­யத்தின் 54 ஆவது ஷரத்தில், இது தெளி­வாக எழு­தப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தை ஸ்தாபிக்க வழி­வ­குத்த ரோமன் சட்­டத்தின் (ஷரத்து 8) கீழ், இது போர்க் குற்­றத்­திற்கு ஒப்­பா­னது.

ஹமாஸ் இயக்­கத்தை மாத்­தி­ர­மன்றி, காஸா பள்­ளத்­தாக்கின் ஒட்­டு­மொத்த மக்­க­ளையும் தண்­டிக்கும் வகையில், இஸ்­ரே­லிய அர­சாங்கம் உணவு விநி­யோ­கத்தை முடக்கி, அடிப்­படை வச­திகள் கிடைப்­பதைத் தடுக்­கி­றது.

தாம் செய்­யாத குற்­றத்­திற்­காக ஒரு­வரைத் தண்­டிக்கும் இத்­த­கைய கூட்­டுத்­தண்­டனை’ நான்­கா­வது ஜெனீவா பிர­க­ட­னத்தின் 33ஆவது ஷரத்தின் கீழ் தடை செய்­யப்­பட்­டுள்­ளது.

ஒரு நெருக்­க­டி­யின்­போது, எது­வித தடையும் இன்றி மனி­தா­பி­மான உத­விகள் பொது­மக்­க­ளுக்கு கிடைப்­பதை உறுதி செய்ய வேண்டும் என்று சர்­வ­தேச சட்டம் கோரு­கி­றது.

ஐக்­கிய நாடுகள் சபையின் ட்ரக் வண்­டி­க­ளையும், உணவு விநி­யோ­கிக்­கப்­படும் பாதை­க­ளையும் முடக்கி வைத்தல் என்­பது, இதன் அடிப்­ப­டையில், சர்­வ­தேச சட்­டத்தை மீறு­வ­தாகும்.

காஸா மக்­க­ளுக்குத் தேவை­யான அத்­தி­யா­வ­சியப் பொருட்­களை ஏற்றிக் கொண்டு நிற்கும் ஆறா­யி­ரத்­துக்கு மேற்­பட்ட ட்ரக் வண்­டிகள், எல்­லைக்கு அப்பால் முடக்­கப்­பட்­டுள்­ளன.

இஸ்­ரே­லியப் படைகள் காஸா மக்­களை பூண்­டோண்டு அழித்து விடு­வ­தற்­காக முன்­னெ­டுக்கும் படை நட­வ­டிக்­கைகள் மாத்­தி­ர­மல்ல. ஒரு சனக்­கூட்­டத்தை முற்­று­ழு­ழு­தாக இல்­லா­தொ­ழிப்­ப­தற்­காக வேண்­டு­மென்று பட்­டினி போடு­வதும் இனச் சுத்­தி­க­ரிப்­பாக வரை­ய­றுக்­கக்­கூ­டி­யது தான்.

இனச்­சுத்­தி­க­ரிப்பு என்ற குற்­றச்­சாட்­டுடன் தென்­ஆ­பி­ரிக்கா தாக்கல் செய்த வழக்­கொன்று சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் (ICJ) விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றது.

போர் வெறி கொண்ட இஸ்ரேலியத் தலைவர்களுக்கு சட்டங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. இஸ்ரேலிய மக்கள் மத்தியிலும் வெறுப்பும், அதிருப்தியும் பரவத் தொடங்கியிருப்பதை அவர்கள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.

காஸா மக்கள் எத்தனை துயரங்களை அனுபவிக்கிறார்கள், அவை எந்தளவு மோசமானவை என்பதை பார்க்கையில், அங்கு மனிதம் எந்தளவு தரம் தாழ்ந்துள்ளது என்று அனுமானிக்கலாம். அதையும் தாண்டி, எவ்வளவு மோசமான குற்றச்செயல்கள் நிகழ்கின்றன என்பதையும் ஆராயலாம்.

இந்தக் குற்றங்கள் பற்றிய ஆதாரங்களைத் திரட்டி, அவற்றை சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, முறையான விசாரணை நடத்தக்கூடிய அரசியல் நோக்கம் சமகால உலக அரசியல் ஒழுங்கில் சாத்தியப்படுமா என்பது சந்தேகம் தான்.

ஆனால், காஸா விவகாரத்தில் இந்தக் கட்டுரையை எழுதிய நானும், இதனை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் கூட, குற்றவாளிகளை கூண்டுக்குள் நிறுத்த திராணியற்ற, தார்மீக பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாத உலகப் பிரஜைகளகாக இருக்கிறோம் என்பதே தவிர்க்க முடியாத உண்மை.

-சதீஷ் கிருஷ்ணபிள்ளை-

Share.
Leave A Reply

Exit mobile version