கணக்கு பாடத்துக்கு டியூஷன் படிக்கப்போன மாணவியை, ஒருதலையாகக் காதலித்த டியூஷன் ஆசிரியர், அந்தப் பெண்ணுக்குத் திருமணமான பிறகும் 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார்.

ஒருகட்டத்துக்கு மேல் தாங்கிக்கொள்ள முடியாத அந்தப் பெண் போலீஸில் புகார் கொடுக்கவே, சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார் ஆசிரியர்!

வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி காவல் நிலையத்துக்கு, கடந்த ஜூலை 24-ம் தேதி கைக்குழந்தையுடன் கர்ப்பிணி ஒருவர் சென்றிருக் கிறார்.

இன்ஸ்பெக்டர் வானுமாமலையைச் சந்தித்த அவர், “நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு டியூஷன் எடுத்த மணிகண்டன் என்பவர்,

15 ஆண்டுகளுக்குப் பிறகும் என்னுடைய வீட்டைக் கண்டுபிடித்து வந்து எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கிறார்.

அவரின் தொல்லையிலிருந்து தப்பிக்க இரண்டு வீடுகள், ஐந்தாறு செல்போன் நம்பர்களை மாற்றிவிட்டேன்.

ஆனாலும், எப்படியோ கண்டுபிடித்து வந்து என்னை டார்ச்சர் செய்கிறார்’’ எனக் கண்ணீர்மல்க கூறியதோடு, தன்னிடம் அந்த ஆசிரியர் போனில் பேசிய எட்டு நிமிட ஆடியோ ஆதாரத்தையும் கொடுத்திருக்கிறார்.

ஆதாரத்துடன் வழக்கு பதிந்த போலீஸார், மணிகண்டனைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

</p>.<p>“சாரி சார். உங்களை என் குருவாக மதிக்கிறேன்..!”

என்ன நடந்தது என ஓட்டேரி போலீஸாரிடம் விசாரித்தோம். “எங்களிடம் புகார் கொடுத்த பெண், 2009-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்திருக்கிறார்.

கணக்கு பாடத்துக்காக மணிகண்டன் என்ற ஆசிரியரிடம் டியூஷனுக்குப் போயிருக்கிறார். இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவதற்காக அந்தப் பெண் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூவிலும் மணிகண்டனிடமே தொடர்ந்து படித்திருக்கிறார்.

ஆசிரியர் என்ற மரியாதையுடன் அந்தப் பெண் பழகிவர, மணிகண்டனோ அவரை ஒருதலையாகக் காதலித்திருக்கிறார்.

பள்ளிப் படிப்பை முடித்த அந்தப் பெண், கல்லூரிப் படிப்புக்காக வெளியூருக்குச் சென்றபோதும் மணிகண்டன் அவருடன் போனில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

இந்தச் சூழலில், அந்த மாணவியின் பிறந்தநாளன்று நேரில் சந்திக்க விரும்பிய மணிகண்டன், அவர் படிக்கும் கல்லூரிக்கே சென்றிருக்கிறார்.

கேக் வெட்டிக் கொண்டாடிய பிறகு, அந்தப் பெண்ணிடம், `நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என மணிகண்டன் கூறியிருக்கிறார்.

அதைக் கேட்ட அந்தப் பெண், `சாரி சார். உங்களை என் குருவாக மதிக்கிறேன்’ எனக் கூறி, காதலை நிராகரித்திருக்கிறார்.

ஆனாலும், மணிகண்டன் அந்தப் பெண்ணுக்கு லவ் டார்ச்சரைத் தொடர்ந்து கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகாரளிக்க, மணிகண்டனை அழைத்து போலீஸார் விசாரித் திருக்கிறார்கள்.

`இனிமேல் அந்தப் பெண்ணுக்கு எந்தவிதத் தொந்தரவும் கொடுக்க மாட்டேன்’ என எழுதிக்கொடுத்ததால், மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து அனுப்பியிருக்கிறது போலீஸ்.

“குழந்தை பிறந்ததும் என்னுடன் வந்துவிடு…!

தன் செல்போன் நம்பரை மாற்றிய பெண், கல்லூரிப் படிப்பையும் முடித்து சென்னையிலுள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்து விட்டார்.

அதன் பிறகு அவருக்குத் திருமணமும் நடந்து 3 வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது. தற்போது 9 மாதக் கர்ப்பிணியாகவும் இருக்கிறார்.

இந்த நிலையில், `எந்தத் தொந்தரவும் கொடுக்க மாட்டேன்’ என்று எழுதிக்கொடுத்த மணிகண்டன்,

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண்ணின் செல்போன் நம்பரைக் கண்டறிந்து பேசியதுடன், அவரின் வீட்டுக்கே சென்று பாலியல் தொல்லை தந்திருக்கிறார்

அதிர்ந்துபோன அந்தப் பெண், நிம்மதியிழந்து தவித்திருக்கிறார். மனைவியின் முகம் வாட்டமாக இருந்ததைக் கண்டு விசாரித்த கணவரிடம், மணிகண்டனின் டார்ச்சர் குறித்துக் கூறி அழுதிருக்கிறார்.

ஆறுதல் கூறிய அவரின் கணவர், செல்போன் நம்பரை மாற்றியதோடு அவர் குடியிருந்த வீட்டையும் மாற்றியிருக்கிறார்.

அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் எந்தத் தொந்தரவுமின்றி வாழ்ந்துவந்த அந்தப் பெண்ணின் நம்பரை, ஆதார் மூலம் கண்டறிந்து அழைத்த மணிகண்டன், `நீ எனக்கு வேணும். உன்னை அடையாமல் விட மாட்டேன்’ என்று அடம்பிடித்திருக்கிறார்.

அதற்கு அந்தப் பெண், `நான் ஏற்கெனவே ஒரு குழந்தைக்குத் தாய். இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறேன். புரிந்துகொள்ளுங்கள்…’ என்று கெஞ்சியிருக்கிறார்.

அதற்கு, `குழந்தை பிறந்ததும் என்னுடன் வந்துவிடு. நாம் சந்தோஷமாக இருக்கலாம்’ என்று அழைத்து சங்கடப்படுத்தியிருக்கிறார்.

மணிகண்டன் பேசிய ஆடியோ ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. அதை வைத்துத்தான் மணிகண்டனைக் கைதுசெய்திருக்கிறோம்’’ என்றனர்.

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். “டியூஷன் படிக்கச் சென்றபோது அந்தப் பெண்ணுக்கு வயது 15. மணிகண்டனுக்கோ 24. தென்மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், சென்னையில் டியூஷன் சென்டர் நடத்திவந்திருக்கிறார்.

அவருக்கும் திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். டியூஷன் சென்டர் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் மணிகண்டன்,

அந்தப் பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் செல்போன் நம்பரை ஆதார் கார்டு மூலம் கண்டறிந்த மணிகண்டன், அவரின் இருப்பிடத்தை செல்போன் டவர் லொகேஷன் மூலம் அறிந்து, கடந்த 24-ம் தேதி பெண்ணின் வீட்டுக்கே சென்றிருக்கிறார்.

அந்தப் பெண்ணும் தானும் சேர்ந்து கொண்டாடிய பிறந்தநாள் போட்டோக்களை அவரின் கணவருக்கும், குடும்பத்தினருக்கும் அனுப்பி மிரட்டி வந்திருக்கிறார்.

இப்படி டார்ச்சர் கொடுத்தால், அந்தப் பெண் தன்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளச் சம்மதிப்பார் என மணிகண்டன் தப்புக்கணக்கு போட்டிருக்கிறார்.

கடைசியில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். அவரிடம் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்துவந்திருக்கின்றனர். அவர்களிடமும் மணிகண்டன் தவறான எண்ணத்தில் பழகினாரா என்று விசாரித்துவருகிறோம்’’ என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version