இந்த வாரம் பிரதான ஊடகங்கள் முதல் சமூக ஊடகங்கள் வரையில் வைரலான செய்தி “ரிக் ரொக் காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க நகை திருடிய மங்கை” என்பதுதான். அந்தச் சம்பவம் நடந்தது யாழ்ப்பாணத்தில்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது ரிக் ரொக் சமூக வலைத்தளத்தில், முகத்திற்கு மாஸ்க் அணிந்தவாறு பல்வேறு காணொளிகளை பதிவேற்றி, தனக்கான ஒரு இரசிகர்களை உருவாக்கி வந்துள்ளார்.
இளைஞனின் காணொளிகளை பார்த்து இளைஞன் மீது இளம் பெண்ணொருவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில், காணொளிகளுக்கு கருத்து பதிவிட்டு வந்த பெண், பின்னாட்களில், காதல் வயப்பட்டு தனது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
தன் மீது காதல்வயப்பட்ட பெண்ணை பயன்படுத்தி சுக போக வாழ்க்கை வாழ நினைந்த இளைஞன், யுவதியை தவறாக வழிநடத்தி பணத்தினை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், யுவதியின் உறவினர் முறையான பெண்ணொருவர் வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, சாவகச்சேரி பகுதியில் தங்கியிருந்துள்ளார்.
அந்த பெண் தனக்கு உதவி ஒத்தாசைக்காக, இந்த யுவதியை தன்னுடன் தனது வீட்டில் தங்க வைத்துள்ளார்.
ஆனாலும் உறவினர் முறையான பெண் என்பதாலும், பெண்ணின் எதிர்காலம் கருதியும், வீட்டில் நகைகள் காணாமல் போன விடயங்களை பெரிதுபடுத்தாமல், அந்த பெண்ணை தனது வீட்டில் இருந்து வெளியேற்றியிருந்தார்.
வீட்டை விட்டு வெளியேறி சென்ற யுவதி ஓரிரு நாட்களில், மீண்டும் அவ்வீட்டிற்கு வந்து, தனது உடைகள் உள்ளிட்ட சில பொருட்கள் வீட்டில் இருப்பதாகவும், அதனை மீள பெற்றுச் செல்லவே வந்ததாகவும் கூறி உள்ளே சென்றுள்ளார்.
பின்னர் தனது ஆடைகளைக் கொண்டு செல்வதாகக் கூறி ஒரு பையுடன் வீட்டை விட்டு வெளியேறி சென்றார்.
வீட்டில் களவு போன நகை 19 பவுண் எனவும் அவற்றின் தற்போதைய பெறுமதி சுமார் 48 இலட்ச ரூபாய் எனவும் தனது முறைப்பாட்டில் தெரிவித்தார்.
அதனை அடுத்து யுவதியை பொலிஸார் அழைத்து விசாரணைகளை முன்னெடுத்தபோது, முதலில் தான் நகைகளை திருடவில்லை என கூறினாலும், பொலிசாரின் தொடர் விசாரணைகளையடுத்து, குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.
தனது காதலன் அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றினை வாங்க ஆசைப்பட்டதாகவும், அதற்குப் பணம் வழங்கவே நகைகளை திருடியதாகவும் கூறியுள்ளார்.
அதனையடுத்து காதலனான இளைஞனை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தவேளை, யுவதியிடம் வாங்கிய சில நகைகளை வேறு யாரிடமோ கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
அதனையடுத்து திருட்டு நகை களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.
அதேவேளை, நகைகளை திருடிய குற்றச்சாட்டில் யுவதி, அவரது காதலனான இளைஞன், திருட்டு நகைகளை உடைமையில் வைத்திருந்தவர்கள்,
விற்றவர்கள் என 07 பேரை பொலிஸார் கைது செய்தனர். அத்துடன் நகைகளை விற்று, அந்தக் காசில் வாங்கிய மோட்டார் சைக்கிள், அன்பளிப்பாக பெற்ற திருட்டு நகைகள் என அனைத்தையும் பொலிஸார் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட 06 பேரையும் மறுநாள் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் காதலனான இளைஞன், அவனது காதலி மற்றுமொருவர் என மூவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், ஏனைய மூவரையும் பிணையில் செல்ல அனுமதித்தார்
இந்தச் சம்பவத்துடன், தொடர்புடைய நபர்கள் பதின்ம வயதுடையவர்கள். இந்த வயதில் அவர்கள் செய்த செயல் குற்றமாக உள்ளதோடு அவர்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால் இந்தச் செய்தி ஒரு நகைப்புக்குரிய விடயமாகவே பலராலும் பார்க்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்கள் பகிரப்பட்டன.
அதிலும் காதலி திருடி தந்த நகையில் புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி ஆலயத்திற்கு கொண்டு சென்று, அந்த மோட்டார் சைக்கிளுக்கு பூஜை செய்து,
அதனை காணொளியாக ரிக் ரொக் தளத்தில் “ஒருநாள் கனவே…” என பாடலுடன் பதிவேற்றி இருந்தார், காதலன்.
அந்த பாடலையும் அந்த வீடியோவை வைத்தும் பல மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. பல இளைஞர்கள் “இப்படியொரு காதலி எனக்கு கிடைக்கலையே..” என ஆதங்க பதிவுகளையும் பதிவிட்டனர். சமூக வலைத்தளங்களில் ஆபத்து.
சமூக வலைத்தளங்கள் இளையோருக்கு ஆபத்தான ஒன்றாக மாறிவருகின்றது. முன்னைய நாட்களில் நண்பர்கள் யார் என்பது குடும்பத்திற்கு தெரியும்.
தமது பிள்ளைகள், பிள்ளைகளின் நண்பர்கள் யார் என்பதனை பெற்றோர் தெரிந்து வைத்திருப்பார்கள், அந்த நண்பர்களின் நடவடிக்கைகள் குறித்தும் அவதானித்தும் அறிந்தும் வைத்திருப்பார்கள்.
தற்காலத்தில் அவ்வாறில்லை. கையடக்க தொலைபேசிகள் ஊடாக, படுக்கையறை வரையில் நண்பர்கள் எனப்படுவோர் வருகின்றனர். பிள்ளைகளின் நண்பர்கள் யார் என்ன என்பது தொடர்பில் பெற்றோருக்கு எந்த தகவலும் தெரியாது.
பிள்ளை கையில் போனுடன், யாருடன் என்ன அரட்டை அடிக்கிறது, கதைக்கிறது, பழகுகிறது என எதுவும் தெரியாத நிலையிலேயே பெற்றோர் காணப்படுகின்றனர்.
தமது பிள்ளை உறவினர் வீட்டில் நகைகளை களவெடுத்து, யாரோ ஒரு இளைஞன் மோட்டார் சைக்கிள் வாங்க பணம் கொடுத்துள்ளது என்பது, பிள்ளையை பொலிஸார் கைது செய்யும் வரையில் பெற்றோருக்கு தெரியாது.
திருட்டு நகைகளை வாங்கி தமது உடைமையில் வைத்திருந்த பிள்ளையை பொலிஸார் கைது செய்யும் வரையில் அந்த பிள்ளையின் பெற்றோருக்கு எதுவும் தெரியாது.
பிள்ளை அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றினை புதுசாக வாங்கி இருக்கிறான். அதற்கு பணம் யார் கொடுத்தது? எப்படி அவ்வளவு பெரிய தொகை மகனின் கைகளுக்கு கிடைத்தது என்பது தொடர்பில் அந்த இளைஞனின் பெற்றோர் ஆராயவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் பகிரப்பட்ட பல மீம்ஸ்களில் ஒன்று, “2கே கிட்ஸ்” என அழைக்கப்படும் 2000ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்த பிள்ளைகள் உள்ள பெற்றோர், வீட்டில் வைத்திருக்கும் நகைகளை எடுத்து வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதற்காகக் காத்திருப்பது போன்ற ஒரு AI தொழில்நுட்பத்தில் உருவான புகைப்படத்துடனான பதிவு,
நகைச்சுவைக்காக மீம்ஸ் ஆகப் பகிரப்பட்டாலும், அதுதான் தற்போதைய சூழலாக காணப்படுகிறது.
பிள்ளைகள் பெற்றோரின் கண்காணிப்பில் இருந்து கையடக்க தொலைபேசிகளுடன் விலகி தூரவாகச் சென்று விட்டார்கள். அவர்களை அவ்வாறே விட்டுவிட்டால் அவர்கள் பெரும் குற்றவாளிகளாகவும் மாற வாய்ப்புண்டு.
பிள்ளைகள் மீதான கண்காணிப்பை, பிள்ளைகளின் நண்பர்கள் தொடர்பிலான அவதானிப்புக்களை பெற்றோர் தீவிரமாக கண்காணித்தல் மாத்திரமே தமது பிள்ளைகளை காத்துக்கொள்ள முடியும்.