சென்னை: பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில், ‘பிடிவாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் டில்லியில் கைது செய்யப்பட்டு, டில்லி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நடிகையும், ‘மாடல்’ அழகியுமான மீரா மிதுன், 34, பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில், ‘வீடியோ’ வெளியிட்டார். இது தொடர்பாக, பல்வேறு அமைப்புகள், அவர் மீது போலீசில் புகார் அளித்தன.

இப்புகார் குறித்து விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கடந்த 2021 ஆகஸ்டில் கைது செய்தனர். பின், இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின்போது, மீரா மிதுன் தொடர்ந்து ஆஜராகவில்லை. இதையடுத்து, 2022 ஆக., 6ல் மீரா மிதுனுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத, ‘வாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டது. பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்து, மூன்று ஆண்டுகளான நிலையில், தனிப்படை போலீசாரால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

‘மீரா மிதுன் அடிக்கடி தங்குமிடத்தை மாற்றி வருவதால், கைது செய்ய முடியவில்லை. அவரது மொபைல் போன் ‘ஆப்’ செய்யப்பட்டு உள்ளது’ என, போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ‘பிடிவாரன்ட்’ உத்தரவை நிறைவேற்றாத போலீசாரின் நடவடிக்கைக்கு, நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், தன் மகளை கண்டுபிடித்து தரக்கோரி, மீரா மிதுனின் தாய் சியாமளா கடந்த 2022 அக்டோபரில் அளித்த புகார் குறித்தும் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், மீரா மிதுனின் தாய் தரப்பில், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், டில்லி தெருக்களில் தன் மகள் சுற்றி வருவதாகவும், அவரை மீட்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வாயிலாக, டில்லி சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு தகவல் தெரிவித்து, மீரா மிதுனை மீட்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் ஆஜராகி, “டில்லி போலீசார் உதவியுடன், டில்லி சட்டப் பணிகள் ஆணைக் குழுவால், மீரா மிதுன் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். தற்போது, டில்லி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்,” என்றார்.

இதை பதிவு செய்த நீதிபதி, டில்லியில் உள்ள மீரா மிதுனை கைது செய்து, வரும் 11ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version