இலங்கையின் பொருளாதாரத்துக்கு, ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு முக்கியமான சாதகமான செய்தியாக, அமெரிக்கா இலங்கைக்கான வரியை 30 வீதத்திலிருந்து 20 வீதமாக குறைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது இலங்கைக்கு பெருமூச்சு விடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்களின் வயிற்றில் குறிப்பிட்டளவு பாலை வார்க்கும் வகையிலேயே இந்த வரி குறைப்பு செய்தி அமைந்துள்ளது.
இது குறித்து அறிவித்துள்ள நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, பிராந்திய சந்தையில் இலங்கையின் போட்டித்தன்மையை நிலைநிறுத்திக் கொண்டு, எவ்வாறு முன்னோக்கிச் செல்வது என்பதே முதன்மை இலக்காக இருந்தது.
இந்த பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கம், வரி சதவீதம் மட்டுமல்ல, இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு சந்தைப் பங்கைத் தக்கவைப்பதாகும். ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் போட்டித்தன்மையை உறுதி செய்வது பேச்சுவார்த்தைகளின் மையமாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில், டொனால்ட் டிரம்ப் தனது புதிய வர்த்தகக் கொள்கையின் ஒரு பகுதியாக இலங்கைக்கு 44 வீத வரியை விதித்தார். எனினும் அந்த அறிவிப்பானது 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.
தொடர்ந்து இலங்கையும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தைகளை நடத்தின. இலங்கையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு வொஷிங்டனுக்கு விஜயம் செய்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மெய்நிகர் வழியாகவும் அமெரிக்கத் தரப்புடன் இலங்கை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து மூன்று மாத நிறைவில் ஜூலை மாதம் 2ஆம் திகதி இலங்கை அமெரிக்காவுக்கு செய்கின்ற ஏற்றுமதிக்கு 30 வீத வரி அறவிடப்படும் என அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 44 வீத வரி 30 வீதமாகக் குறைக்கப்பட்டது. ஆனால் அதனையும் தம்மால் தாங்கிக் கொள்ள முடியாது என்று இலங்கையின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவுடன் தொடர்ந்து இலங்கை தரப்பினர் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். ஒருகட்டத்தில் இலங்கையும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக உடன்படிக்கையை செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
தொடர் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர ரீதியிலான நகர்வுகளை அடுத்து தற்போது இலங்கை அமெரிக்காவுக்கு செய்கின்ற ஏற்றுமதிகளுக்கு 20 வீத வரி அறவிடப்படுவதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.
அதாவது ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட 44 வீத வரியானது ஒரு கட்டத்தில் 30 வீதமாக குறைந்து தற்போது பல்வேறு கட்டங்களின் பின்னர் பல்வேறு பேச்சுவார்த்தைகளையடுத்து 20 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை வியாழக்கிழமை இரவு தனது புதிய வரித் திட்டத்தை வெளியிட்டது. உலகளாவிய இறக்குமதி வரி 10 வீதமாக ஆக இருக்கும் அதே வேளையில், இலங்கை பொருட்களுக்கான வரி 20 ஆகக் குறைக்கப்படும் என்று அமெரிக்க நிர்வாகம் அறிவித்தது.
மிகப்பெரிய ஆறுதல்
புதிய வரி விகிதம், 2025 ஆகஸ்ட் 7 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். இந்த வரிக் குறைப்பு, 44 வீதம் என்ற பெரும் சுமையிலிருந்து இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலை அளித்துள்ளது. இது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இலங்கையின் இந்த வரிக் குறைப்பு, பிராந்தியத்தில் அதன் போட்டித்தன்மையை நிலைநிறுத்த உதவுகிறது. தற்போது, வியட்நாம் (20%), பங்களாதேஷ் (20%) இந்தோனேஷியா (19 வீதம்) போன்ற நாடுகளுடன் இலங்கை சமமான வரி விகிதங்களைப் பெற்றுள்ளது.
அதே சமயம், இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் 19% வரியை பெற்று, சில துறைகளில் சிறிதளவு போட்டித்தன்மையை அதிகரித்துள்ளன. இந்த புள்ளிவிவரங்கள், ஆடைத் துறையில் அதிக அளவில் போட்டியிடும் இலங்கைக்கு ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், வரிகளைத் தவிர்ப்பதற்காக மூன்றாம் நாடுகள் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 40 வீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. எனவே, மூன்றாம் நாடுகள் வழியாகப் பொருட்களை அனுப்பும் இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள், அமெரிக்க சுங்க விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது கட்டாயமாகிறது.
இதேவேளை அமெரிக்காவின் திருத்தப்பட்ட பரஸ்பர வரி கட்டமைப்பின் கீழ், இலங்கைக்கு விதிக்கப்பட்ட 20 வீத வரியை ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் வரவேற்றுள்ளது. இந்த வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகவும், பின்னர் 20% ஆகவும் குறைப்பதற்கு உதவிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.
வொஷிங்டனில் நடந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றிய அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்கவிற்கு ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் சிறப்பு நன்றியைத் தெரிவித்துள்ளது.
வெளியே வந்த இலங்கை
இதன்மூலம் இலங்கையின் ஏற்றுமதி துறை தப்பிபிழைத்துக்கொண்டுள்ளது என்பது புலனாகிறது. ஏற்படவிருந்த மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து இலங்கை வெளியே வந்துள்ளது. இலங்கை தற்போது ஒரு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறது.
2021-22 ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான நெருக்கடிக்குப் பிறகு, நாடு படிப்படியாக முன்னேறி வருகிறது. இத்தகைய சூழலில், அமெரிக்காவின் வரிக் குறைப்பு ஒரு தற்காலிக ஆறுதலை அளித்துள்ளது. 44% இலிருந்து 20% ஆகக் குறைக்கப்பட்டிருப்பது ஒரு முன்னேற்றகரமான விடயமாகவே கருதப்படுகிறது.
இலங்கையின் ஏற்றுமதியும் அமெரிக்க சந்தையும்
இலங்கை வருடத்துக்கு கிட்டத்தட்ட 12 பில்லியன் டாலர் ஏற்றுமதி வருவாயைப் பெற்று வருகிறது.
இதில் 5 முதல் 6 பில்லியன் டாலர்கள் ஆடைத் துறையிலிருந்து கிடைக்கின்றன. ரப்பர் மற்றும் தேயிலை மூலம் 2 பில்லியன் டாலர்கள் வருமானம் கிடைக்கிறது.
இதில், அமெரிக்காவுக்கு மட்டும் இலங்கை ஆண்டுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இது மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 25% ஆகும். மேலும், அமெரிக்காவுக்கு இலங்கை செய்யும் ஏற்றுமதியில் 80% ஆடை உற்பத்திகளாகும். இந்த சூழ்நிலையில், அமெரிக்காவில் வரி அதிகரித்தால், இலங்கை பொருட்களின் விலை உயர்ந்து, அவற்றின் தேவை குறைந்து, நாட்டின் ஏற்றுமதி வருமானத்தைப் பாதிக்கும். இதனால், ஆடைத் தொழிலில் ஈடுபட்டுள்ள முதலீட்டாளர்கள், ஊழியர்கள் மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம்.
எதிர்காலத்திற்கான பாதை
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அமெரிக்காவின் வரிக் குறைப்பை வரவேற்றுள்ளார். ” 20% ஆக இருப்பதில் மகிழ்ச்சி, இதன் மூலம் நாம் பிராந்திய அளவில் தொடர்ந்து போட்டித்தன்மையுடன் இருக்க முடியும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த வரிக் குறைப்பை மட்டும் நம்பி இருக்காமல், இலங்கை எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு நீண்டகாலத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியஹள்ளார். இந்நிலையில் அடுத்து இலங்கை என்ன செய்யலாம் என்பது முக்கியமாகும். காரணம் இலங்கை புதிய சந்தைகளை நோக்கி நகர வேண்டும். ஆனால் அது இலகுவான விடயமல்ல. இதற்கு நீண்டகால திட்டங்கள் அவசியமாகும்.
முன்னரே கணித்த ஹர்ஷ எம்.பி.
அண்மையில் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா, அமெரிக்கா இலங்கைக்கு விதித்த 30 வீத வரி 15 வீதமாக ஆகக் குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்து அப்போது விவாதப் பொருளாக மாறியது.
தற்போது, அமெரிக்கா இந்த வரியை 20 வீதமாக ஆகக் குறைத்துள்ள நிலையில், ஹர்ஷ டி சில்வாவின் கணிப்பு சரியாக அமைந்திருக்கிறது. அவர் 30% இலிருந்து 20% அல்லது 15% அளவில் வரி குறையும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் பின்னணியில், அவரது கருத்து தற்போது உறுதியானதாகக் கருதப்படுகிறது.
முதலில் 44 வீத தீர்வை எவ்வாறு விதிக்கப்பட்டது?
இலங்கை அமெரிக்காவுக்கு வருடமொன்றுக்கு கிட்டத்தட்ட 3000 மில்லியன் டொலர்களுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஆனால், அமெரிக்காவிலிருந்து இலங்கை கிட்டத்தட்ட 350 மில்லியன் டொலர்களுக்கு இறக்குமதி செய்கிறது. இதன் ஏற்றுமதி இறக்குமதி வித்தியாசம் 88 வீதமாகக் காணப்படுகிறது. அதை இரண்டாகப் பிரித்து 44 வீத தீர்வையை இலங்கைக்கு அமெரிக்கா விதித்தது. எனினும் அதனை தற்போது 20 வீதமாக குறைக்க முடிந்துள்ளமை முக்கியமாகும்.
என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கும்?
இலங்கைக்கு வருடமொன்றுக்கு கிடைக்கின்ற 12 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தில் 5 பில்லியன் டொலர்கள் ஆடைமூலம் கிடைக்கிறது. இதில் 3 பில்லியன் டொலர்கள் அமெரிக்காவுக்கு செய்கின்ற ஆடை உற்பத்தி ஏற்றுமதி உற்பத்திகள் மூலம் கிடைக்கின்றன.
எனவே, இந்த ஆடைத்துறை ஊடான ஏற்றுமதி வருமானம் பாதிக்கப்பட்டால் அது இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் தாக்கம் செலுத்தும். ஏற்கனவே இலங்கை பாரிய டொலர் பற்றாக்குறையில் இருக்கிறது. இன்னும் ஏற்றுமதி வருமானம் குறையும் பட்சத்தில் அது தாக்கம் செலுத்தும்.
இலங்கையில் கிட்டத்தட்ட ஆடைக் கைத்தொழில் துறையில் 3 இலட்சம் பேர் நேரடியாக தொழில் செய்கின்றனர்.
அவர்களில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கி வாழ்கின்றனர். சிறியளவிலான ஆடைக் கைத்தொழில் நிறுவனங்களும் இலங்கையில் செயற்படுகின்றன.
30 வீத வரி அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த நிறுவனங்கள் ஒன்று தமது உற்பத்திகளை குறைக்க வேண்டி வரும். அல்லது நிறுவனங்களை மூட வேண்டிய அழுத்தம் கூட ஏற்படலாம். தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டிருக்கலாம். இது ஒட்டுமொத்த பொருளாதாரத்தை பாதிக்கும். இவ்வாறான நெருக்கடிமிக்க அபாய நிலையிலிருந்து இலங்கை தப்பி பிழைத்துள்ளது.
இலங்கை என்ன செய்யவேண்டும்?
இலங்கை தனது ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டும் நம்பி இருக்காமல், உலகின் மிகப்பெரிய சந்தைகளான இந்தியா மற்றும் சீனாவுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும்.
இந்தியாவுடன் ஏற்கனவே உள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்திய சந்தைக்குள் நுழைவதற்கான தடைகளை நீக்க வேண்டும். இந்தியா ஐந்து ட்ரில்லியன் டொலர் பெறுமதியான மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி நகர்கிறது.
உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம். விரைவில் மூன்றாவது நிலைக்கு செல்லும். எனவே அதில் இலங்கை நன்மையடையவேண்டும். இந்தியாவே இலங்கையை மீட்கும் வல்லமையை கொண்டுள்ளது என்று அண்மையில் பொருளாதார நிபுணர் டாக்டர் விஜயவர்த்தன குறிப்பிட்டிருந்தார்.
மேலும் சுற்றுலாத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி போன்ற துறைகளை அபிவிருத்தி செய்வது அவசியம். குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்து, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான தடைகளை ஆராய்ந்து, அவற்றை நீக்க வேண்டும். வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமல் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது. ஒற்றைச் சாளர முறைக்குள் பிரவேசித்து வெளிநாட்டு நேரடி முதலீடுகளை இலகுவாக்கவேண்டும்.
ஜி.எஸ்.பி. பிளஸ் திட்டம்:
ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுமதிகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் திட்டத்தை இலங்கை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்ற விமர்சனம் உள்ளது.
இந்தத் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க முடியும். 2027 ஆம் ஆண்டுடன் இது நிறைவடைகிறது.
ஜி.எஸ்.பி. பிளஸ் திட்டத்தை மீண்டும் பெறுவதற்கான அனுகுமுறைகள் அவசியமாகும். இதேவேளை தீர்வை வரி குறைப்பு குறித்து பொருளாதார நிபுணர் தனனாத் பெர்னாண்டோ முக்கிய விடயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.
‘’ தீர்வை வரிகள் பொருளாதாரத்திற்கு எதிரானவை. தீர்வை வரிகளை விதிப்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்.
எந்தவொரு நாடும் தீர்வை வரிகளை விதித்து முன்னேறியதாக வரலாறு இல்லை. அமெரிக்கா வரியை குறைத்துள்ளது. இலங்கையும் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதித்திருக்கும் வரிகளை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ வேண்டும்.
பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் வரி விகிதங்கள் குறைவாகவே உள்ளன. குறிப்பாக, ஆடை ஏற்றுமதித் துறையில் இலங்கையுடன் போட்டி போடும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை சாதகமான நிலையில் இருக்கிறது.
ஆனால் உலகளாவிய மற்றும் அரசியல் சூழ்நிலைகளால் எதிர்காலத்தில் வரி விகிதங்கள் அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளது. எனவே, இலங்கை இத்தகைய நிலைமைகளைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும். இலங்கை கிழக்காசிய நாடுகளின் சந்தைகளை நோக்கி நகரவேண்டும்’’ என்று குறிப்பிடுகிறார் தனனாத் பெர்னாண்டோ.
எப்படி நகர்வது?
இலங்கை தற்போது நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் நிலையில், எதிர்காலப் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள சரியான முறையில் திட்டமிடுவது அவசியம். உலகளாவிய பொருளாதார காரணிகள், உள்நாட்டு சவால்கள் எனப் பல விடயங்கள் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தலாம்.
இவற்றைச் சமாளிப்பதற்கான திட்டங்கள் இப்போது தேவை. ஏற்றுமதி விடயத்தில் ஒரு நாட்டை மட்டும் நம்பி இருக்காமல், பல்வேறு நாடுகளுக்கும் தனது ஏற்றுமதிகளை அனுப்ப வேண்டும்.
நீண்டகாலத் திட்டங்கள், மறுசீரமைப்புகள், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல், ஏற்றுமதியை பல்வகைப்படுத்துதல், சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் கவனம் செலுத்துதல், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்றுமதியை அதிகரித்தல், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்த்தல் போன்ற நடவடிக்கைகளில் இலங்கை கவனம் செலுத்துவதன் மூலமே, எதிர்கால நெருக்கடிகளை வெற்றிகரமாக சமாளிக்க முடியும்.
தற்போது அமெரிக்காவின் வரிக் குறைப்பு ஒரு ஆறுதலான விடயமாக அமைந்திருந்தாலும், இதுவே இறுதி வெற்றி அல்ல. இலங்கையின் அடுத்தகட்ட நகர்வு எவ்வாறு அமையப் போகிறது என்பதிலேயே அதன் எதிர்காலம் தங்கியுள்ளது.
ரொபட் அன்டனி