பலஸ்தீனம் பற்றியெரிந்து கொண்டிருக்கும் நிலையில் அங்கு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைப்பது எவ்வாறு எனத் தெரியாமல் உலகம் தவித்துக் கொண்டிருக்கிறது.
தட்டிக் கேட்க ஆளில்லாத சண்டப் பிரசண்டனாக இஸ்ரேல் செயற்பட்டுவரும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.
காஸா பிராந்தியத்தில் எஞ்சியுள்ள ஹமாஸ் அங்கத்தவர்கள் அனைவரையும் அழித்தொழிப்பது மாத்திரமன்றி, அங்கு வாழும் மக்கள் அனைவரையும் வெளியேற்றி, அந்தப் பிரதேசம் முழுவதையும் ஆக்கிரமித்துவிட இஸ்ரேல் துடியாய்த் துடிக்கிறது.
முடிவின்றித் தொடரும் காஸா மக்களின் துயரை முடிவுக்குக் கொண்டுவர வழி தெரியாத கையறு நிலையில் மனிதாபிமானம் கொண்ட உலக மக்கள் பரிதவித்து வருகின்றார்கள்.
இத்தகைய பின்னணியில் பலஸ்தீனத்தை ஒரு தேசமாக அங்கீகரிக்கும் முடிவை எடுத்திருப்பதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோன் அறிவிப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பரில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை மதித்து நடக்கும் உலக நாடுகளில் இந்த அறிவிப்பு பெரு வரவேற்பைப் பெற்றுள்ள போதிலும், இஸ்ரேலும், அமெரிக்காவும் அதனைக் கண்டித்துள்ளன.
சர்வதேசத்தினால் பலஸ்தீனமாக அங்கீகரிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலேம் உள்ளிட்ட மேற்குக் கரை மற்றும் காஸா பிராந்தியம் ஆகியவை இதனுள் அடங்கும் என இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வருட இறுதிக்குள்ளாகவே 78 உலக நாடுகள் பலஸ்தீனத்தை ஒரு தனித் தேசமாக ஏற்றுக் கொள்ளும் அறிவிப்பை வெளியிட்டிருந்தன.
நீண்டகால மோதலாகக் கருதப்படும் பலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்குடன் பலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும், இஸ்ரேல் அரசாங்கத்துக்கும் இடையில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விளைவாக 1993 இல் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தாகியது.
தொடர் பேச்சுக்களின் விளைவாக 1995இல் சுயாட்சி கொண்ட பலஸ்தீன அதிகார சபை உருவாக்கப்பட்டது. இந்த அதிகார சபையின் ஆட்புலத்தின்கீழ் பலஸ்தீனத்தின் 40 சதவீத நிலம் அடங்கியுள்ளது.
2025 மார்ச் மாத புள்ளிவிபரங்களின் படி 193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா. சபையில் உள்ள 147 நாடுகள் பலஸ்தீன தேசத்தை அங்கீகரித்து உள்ளன.
இதில் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ள ரஷ்யா மற்றும் சீனா ஆகியவையும் அடங்கும்.
அந்த வரிசையில் தற்போது மற்றொரு பாதுகாப்புச் சபை உறுப்பு நாடான பிரான்ஸும் இடம்பிடிக்க உள்ளது.
2023 அக்டோபரில் தற்போதைய காஸா மோதல் ஆரம்பமான பின்னர் பார்படோஸ், ஜமைக்கா, ட்ரினாட் மற்றும் டுபேகோ, பஹாமாஸ், ஸ்பெயின், நோர்வே, அயர்லாந்து, ஸ்லோவேனியா, ஆர்மேனியா, மெக்ஸிக்கோ ஆகிய 10 நாடுகள் பலஸ்தீனத்தை தனித் தேசமாக அங்கீகரித்து உள்ளன.
பிரான்ஸின் அறிவிப்பு தற்போதைய கள நிலைமையில் உடனடி மாற்றம் எதனையாவது ஏற்படுத்தும் என யாராவது நம்பினால் அது அறிவிழிவு.
உலகின் பலம் பொருந்திய நாடாக உள்ள அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனவழிப்பு நடவடிக்கைகள் இந்த ஒற்றை அறிவிப்பினால் முடிவுக்குக் கொண்டுவரப்படும் வாய்ப்பு கிஞ்சித்தும் கிடையாது.
அதேவேளை, பிரான்ஸின் அறிவிப்பு காரணமாக இராஜதந்திர நடவடிக்கைகள் ஓரளவேனும் முடுக்கி விடப்படுமானால் மெக்ரோனின் அறிவிப்புக்குக் கிடைத்த வெற்றியாக அதனைக் கருத முடியும்.
ஜனாதிபதி மெக்ரோன், தற்போது தனது இரண்டாவதும் இறுதியுமான பதவிக் காலத்தில் உள்ளார்.
அவரது பதவிக் காலம் முடிவடைய இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ளன. வரலாற்றில் தனது பெயரை ஒரு ஜனநாயகவாதியாகப் பதிவு செய்து கொள்ள இந்த அறிவிப்பு அவருக்கு உதவக் கூடும். 2017 மே 14 முதல் பொறுப்பில் இருந்துவரும் மெக்ரோன் தனது இதுவரை கால பதவிக் காலத்தில் ஏன் இத்தகைய முடிவை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுவது நியாயமானதே.
நீண்ட நெடுங்காலமாக இஸ்ரேலின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிக்கும் நிலைப்பாட்டையே பிரான்ஸ் கடைப்பிடித்து வந்திருக்கிறது.
மெக்ரோனின் தற்போதைய அறிவிப்பு கூட 1988இல் கைச்சாத்தான ஒஸ்லோ பிரகடனத்தை அடியொற்றியதே. புதிதாக ஒரு நிலைப்பாட்டை எடுத்து மெக்ரோன் விடுத்துள்ள அறிவிப்பாக இதனைக் கருதிவிட முடியாது.
அதேவேளை, ஓர் அணுவாயுத வல்லரசு, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவத்தைக் கொண்ட ஒரு நாடு, பொருளாதாரத்தில் பலமிக்க நாடுகளின் ஜி-7 அமைப்பில் இடம்பிடித்துள்ள ஒரு நாடு, அது மாத்திரமன்றி ஐரோப்பாவில் உள்ள பலமிக்க நாடுகளுள் ஒன்று என்ற வகையில் பிரான்ஸின் இந்த அறிவிப்பு கவனத்தில் கொள்ளத்தக்கதே. அது மாத்திரமன்றி ஐரோப்பிய நாடுகளுள் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடாகவும், யூதர்கள் அதிகமாக வாழும் நாடாகவும் பிரான்ஸ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இரண்டாவது தடவை பதவியேற்று உள்ளதன் பின்னான உலக அரசியல் சூழலில், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பல்வேறு விடயங்களில் முரண்பாடுகள் தோன்றியுள்ள நிலையில் பிரான்ஸும் பிரித்தானியாவும் இணைந்து செயற்படும் பாங்கு ஒன்று உருவாகி உள்ளதை அவதானிக்க முடிகின்றது. அந்த வகையில் பிரான்ஸைத் தொடர்ந்து பிரித்தானியாவும் பலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க முடிவு செய்துள்ளது.
பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்
இது தொடர்பிலான அழுத்தங்கள் பிரித்தானியாவில் ஏற்கெனவே உருவாகியுள்ள நிலையில், செப்டெம்பரில் பலஸ்தீனத்தை தனித் தேசமாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதாக பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். எனினும், இரண்டு தரப்புகளும் மோதல்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்துள்ளார்.
அவரது அறிவிப்பை வழக்கம் போலவே ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட உலக நாடுகள் வரவேற்றுள்ளன. அதேவேளை, இஸ்ரேல் தரப்பில் இருந்து கண்டனங்கள் வெளிவந்துள்ளன.
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடான பிரித்தானியாவும் பலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க முன்வந்துள்ள நிலையில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளுள் அமெரிக்கா மாத்திரம் தனித்து விடப்பட்டுள்ளது.
ஜி-7 அங்கத்துவ நாடாகவும், அணுவாயுத வல்லரசாகவும் பிரித்தானியா விளங்கிவரும் நிலையில் இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்கா மீதான அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தடையாக பன்னாட்டு வணிக நிறுவனங்களின் அழுத்தம் இருக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம். அத்தகைய அழுத்தங்களையும் மீறி காஸா மோதல் முடிவுக்கு வருமா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் வழங்கும் அழுத்தம் காரியசித்தியாகுமா என்பதை அடுத்துவரும் நாட்களில் பார்க்க முடியும்.
காஸா மோதல்களில் இதுவரை 60,000 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் மோதல் முடிவடைவதற்கு இடையில் இன்னும் எத்தனை ஆயிரம் மக்கள் தமது உயிரைத் தியாகம் செய்ய வேண்டி இருக்குமோ என நினைக்கும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.
மனித உயிர்கள் பெறுமதியானவை என நினைப்பவர்களுக்கு மாத்திரம்தான் இது தொடர்பில் வேதனை இருக்கும். அரசியல், பொருளாதாரக் கணக்குகளில் பலியாடுகளாக மாத்திரம் மக்களை நோக்குவோருக்கு அத்தகைய எந்தக் கவலையும் இருக்காது என்பதே கசப்பான யதார்த்தம்.
சுவிசிலிருந்து சண் தவராஜா