உலகத் தலைவர்களின அரசியல் நகர்வுகள் பற்றிய செய்திகள் ஒரு பக்கம் என்றால், அவர்களைப் பற்றிய அந்தரங்கச் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி அதிர்வலைகளைக் கிளப்பத்தான் செய்கின்றன.
அப்படித்தான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் `ரகசிய’ மகளாக அறியப்படும் எலிசவெட்டா க்ரிவோனோகிக், டெலிகிராமில் வெளியிட்ட ஒரு பதிவு, உலக அரங்கில் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது!
`ரகசிய’ மகளும் மகன்களும்
ரஷ்ய அதிபர் புதினுக்கு, லியுட்மிலா என்ற பெண்ணுடன் 1983-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2014-ல் விவாகரத்து செய்துகொண்ட இவர்களுக்கு, இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இவர்களைத் தவிர புதினுக்கு ரகசியமாக இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருப்பதாகக் கடந்தகாலங்களில் புலனாய்வு செய்து ரஷ்ய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.
Alina Kabaeva,
ரஷ்யாவைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவாவுடன் புதின் நீண்டகாலம் ரகசியத் தொடர்பிலிருந்ததாகவும், அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருப்பதாகவும் பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.
ஸ்விட்சர்லாந்தில் பிறந்த இந்த இரு மகன்களும், தற்போது ரஷ்யாவிலேயே ரகசியமாக வாழ்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதேபோல `2003-ம் ஆண்டு, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் பிறந்த எலிசவெட்டாவும், புதினின் மகள்தான்’ எனச் செய்திகள் உலவிக்கொண்டிருக்கின்றன.
2020-ம் ஆண்டு, `Proekt Media’ என்ற ரஷ்ய ஊடகம் புலனாய்வு செய்து, முதன்முதலில் இந்தச் செய்தியை வெளியிட்டது.
Elizaveta Krivonogikh: Vladimir Putin’s “Secret” Daughte
2000-களில், தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்த ஸ்வெட்லானா என்ற பெண்ணுடன் புதின் ரகசிய உறவிலிருந்ததாகவும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைதான் எலிசவெட்டா என்றும் அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டது.
எலிசவெட்டா, புதின் ஆகியோரிடையே இருக்கும் முக ஒற்றுமையை மேற்கோள் காட்டி இந்தச் செய்தியை வெளியிட்டது அந்த நிறுவனம்
மேலும், “2003-ம் ஆண்டு வரை, சாதாரணப் பணிப்பெண்ணாக இருந்த ஸ்வெட்லானா, அடுத்தடுத்த ஆண்டுகளில் பெரும் பணக்காரராக மாறினார்.
அவருக்கு ரஷ்யாவின் பிரதான தனியார் வங்கியான Rossiya வங்கியில் பங்குகள் இருக்கின்றன. ஸ்வெட்லானாவின் தற்போதைய சொத்து மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டிருக்கிறது’’ என்றும் Proekt Media செய்தி வெளியிட்டது.
2023-ம் ஆண்டு, ஸ்வெட்லானாவின் ரஷ்ய அரசுத் தலைமையுடனான தொடர்புகளை மேற்கோள் காட்டி பிரிட்டன் அரசு, அவருக்கு எதிராகச் சில பொருளாதாரத் தடைகளை விதித்தது.
எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னி,
தடைசெய்யப்பட்ட ஊடகம்... கொலைசெய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்?
`ரகசிய மகள்’ பற்றிய தகவல்களைப் புதின் தரப்பில் மறுக்கவில்லை என்றாலும், `Proekt Media ஒரு அவதூறு பரப்பும் ஊடகம்’ என்று, அடுத்த சில மாதங்களில் அந்த ஊடகம் தடை செய்யப்பட்டது.
இதையடுத்து, புதின், எலிசவெட்டாவின் புகைப்படங்களை ஒன்று சேர்த்து, இருவருக்குமிடையேயான ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டி சர்வதேச ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டன.
2021-ம் ஆண்டு, ரஷ்யாவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னி, லூய்சா என்ற பெயரில் எலிசவெட்டா வைத்திருந்த இன்ஸ்டாகிராம் கணக்கை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தினார்.
அந்தக் கணக்கில் எலிசவெட்டா, பிரைவேட் ஜெட்களில் பறப்பதும், நைட் கிளப்புகளில் ஆட்டம் போடுவதுமான சொகுசு வாழ்க்கை குறித்த புகைப்படங்கள் ஏராளமாக இருந்தன.
“எலிசவெட்டாவின் சொகுசு வாழ்க்கைக்குப் பின்னாலிருப்பது புதின்தான்’’ என்றார் நாவல்னி.
தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் புதினுக்குக் குடைச்சல் கொடுத்த நாவல்னி கைதுசெய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.
பிறகு, சிறையிலேயே உயிரிழந்தார். “பொய் வழக்குகளில் கைதுசெய்யப்பட்ட நாவல்னியை, சிறையில்வைத்துக் கொலைசெய்துவிட்டார் புதின்’’ என்ற விமர்சனங்கள் கிளம்பின.
ஓவியரின் விமர்சனம்… தந்தைக்கு எதிர்ப்பு?
2022-ம் ஆண்டு, உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்புக்குப் பின்னர், இன்ஸ்டாகிராம் கணக்கை டெலிட் செய்துவிட்டு மாயமானார் எலிசவெட்டா.
2024-ல், அவர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள கலைக் கல்லூரி ஒன்றில் பட்டம் பெற்றதை, சர்வதேச ஊடகங்கள் கண்டுபிடித்தன.
“புதினின் ரகசிய மகள், போர்களால் பாதிக்கப் பட்டவர்கள் குறித்த ஓவியங்களை வரைந்து விற்பனை செய்யும், பாரிஸிலுள்ள இரண்டு ஓவியக் காட்சிக் கூடங்களில் பணிபுரிந்துவருகிறார்’’ என்றும் செய்தி வெளியிட்டன.
ரஷ்யாவைச் சேர்ந்த ஓவியர் நஸ்தியா, “போர்க் குற்றம் புரிந்துகொண்டிருக்கும் ரஷ்யத் தலைமையுடன் பயாலாஜிக்கலாகவோ, வேறெந்த வகையிலோ தொடர்புடைய நபருக்கு, போரில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை வெளிப்படுத்தும் இந்த ஓவியக் காட்சிக் கூடங்களில் இடமளிக்கக் கூடாது’’ என்று சொல்லி, அந்த இரு ஓவியக் காட்சிக் கூடங்களுடனான தனது தொடர்பை முறித்துக்கொண்டார்.
எலிசவெட்டாவுக்கு ஆதரவாகப் பேசும் சிலர், “அவர் புதினைப்போல இருக்கிறார்… இன்னும் பல பேர் புதினைப்போல இருக்கலாம். டி.என்.ஏ பரிசோதனை செய்யாமல் எப்படி முடிவுக்கு வருகிறார்கள்?’’ என்று கேள்வியெழுப்பினர்.
ஆனால் எலிசவெட்டாவோ, “நான் சொல்வதைக் காதில்கூட வாங்கிக்கொள்ளாத என் குடும்பத்தினரின் செயல்பாடுகளுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?’’ என்றிருந்தார்.
இந்த பதில், `எலிசவெட்டா, புதினின் மகள்தான்’ என்பதைக் கிட்டத்தட்ட உறுதிசெய்தது.
தற்போது டெலிகிராம் செயலியிலுள்ள தனது சேனலில், “எனது வாழ்க்கையை அழித்த அந்த நபர், பல லட்சம் மக்களின் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறார்’’ என்று பதிவிட்டிருப்பதாக, ஜெர்மன் நாளிதழான `BILD’ செய்தி வெளியிட்டிருக்கிறது.
எலிசவெட்டா, புதின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், `உக்ரைன் போரில் லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த புதினுக்கு எதிரான கண்டனப் பதிவுதான் இது’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
உலகத் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று போரை நிறுத்தாத புதின், தன் ரகசிய மகளின் கண்டனப் பதிவுக்குப் பிறகாவது போரை நிறுத்துவாரா?!