சான்டா பாப்ரா என்ற அமெரிக்க போர் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த நிலையில், அங்கு கருத்துத் தெரிவித்த அமெரிக்கத் தூதர் ஜூலி சங் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமெரிக்கத் தூதர் ஜூலி சங்,
அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான நீடித்த நல்லுறவின் சக்திவாய்ந்த சின்னமாக விளங்கும் U.S.S. Santa Barbara கப்பல், முதல் முறையாக இலங்கைக்கு வருகை தரும் இந்த தருணத்தில், நான் உங்கள் மத்தியில் நிற்பதில் பெருமை கொள்கிறேன்.
கப்பலின் கட்டளைத் தளபதி ஆடம் ஓக்ஸ், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி சம்பத் துயாகொந்தா, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் அவர்களது தொடர்ச்சியான தலைமைத்துவத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் நான் நன்றி கூறுகிறேன்.
வேகம், சுறுசுறுப்பு மற்றும் மேம்பட்ட நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட கடலோரப் போர் கப்பலான U.S.S. Santa Barbara-வின் வருகை வெறும் ஒரு துறைமுக வருகை மட்டுமல்ல.
இது நமது நாடுகளுக்கு இடையே உள்ள வலுவான மற்றும் வளர்ந்து வரும் உறவைப் பிரதிபலிக்கிறது. 75 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவும் இலங்கையும் பொருளாதார வளம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகிய பொதுவான இலக்குகளை முன்னெடுத்துச் செல்ல இணைந்து செயல்பட்டு வருகின்றன.
உலக வர்த்தகத்திற்கு இந்தியப் பெருங்கடல் மிகவும் முக்கியமானது. அதன் மூலோபாய இருப்பிடத்தால், இந்த கடல் வழிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
போதைப்பொருள் கடத்தல், ஆட் கடத்தல் மற்றும் சர்வதேச குற்றங்கள் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராட நாம் இணைந்துள்ளோம். இது பாதுகாப்பான மற்றும் வளமான பிராந்தியத்திற்கு பங்களிக்கிறது.
கடல்சார் பாதுகாப்பிற்கான இலங்கையின் பங்களிப்புகள் ஊக்கமளிக்கின்றன. Santa Barbara கப்பலின் குறிக்கோள் “நெகிழ்வு மற்றும் உறுதிப்பாடு” (“Resilient and Determined”) என்பதாகும். அதேபோல், இலங்கை கடற்படைக்கும் அது பொருந்தும்.
2024-ல் Operation Prosperity Guardian-ன் ஒரு பகுதியாக அரேபிய கடற்பரப்பில் கடற்படை ஈடுபட்டதும், இந்த ஆண்டு Combined Maritime Force – Task Force 154 அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றதும், இப்பிராந்தியத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க இலங்கை கடற்படை தயாராக இருப்பதைக் காட்டுகிறது.
இந்த ஆண்டு இறுதியில், நான்காவது ரோந்து கப்பலை நாங்கள் அன்பளிப்பாக இலங்கைக்கு வழங்குவோம், இது இலங்கையின் கடல்சார் பாதுகாப்பிற்கான திறனை மேலும் வலுப்படுத்தும்.
U.S.S. Santa Barbara கப்பலின் வருகை, நமது நல்லுறவின் வலிமையையும், சுதந்திரமான, திறந்த மற்றும் பாதுகாப்பான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான நமது பொதுவான உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது.
நாம் அனைவரும் இணைந்து இந்த மதிப்புகளைத் தொடர்ந்து நிலைநிறுத்துவோம். மேலும், உலகின் இந்த முக்கியப் பகுதி ஸ்திரத்தன்மை மற்றும் வாய்ப்புகளின் கலங்கரை விளக்கமாக தொடர்ந்து இருப்பதை உறுதி செய்வோம் என்றார்.