இ ந்திய- அமெரிக்க வர்த்தக மோதல் தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது. ஓகஸ்ட் மாதத்தின் முதல் நாளிலிருந்து இந்திய பொருட்களுக்கான வரி 25 சதவீதமாக இருக்குமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இரு நாட்டுக்குமான பொருளாதார உறவு மட்டுமின்றி அரசியல் உறவிலும் இராணுவ ரீதியான நெருக்கத்திலும் அதிக முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.
இந்திய பொருளாதாரத்தை அழிந்து போன பொருளாதாரம் என்றும், இந்தியா, பாகிஸ்தானிடமிருந்து பெற்றோலியத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் இந்தியா மீதான அவமதிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கான பதிலை இந்திய ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சியினர் முன்வைப்பதை விட, ஊடகங்களே அதிக எதிர்ப்பையும் அதிருப்தியையும் முன் வைத்திருக்கின்றன. இக்கட்டுரையும் அமெரிக்க − இந்திய அரசியல், பொருளாதார உறவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியையும் அதன் விளைவையும் தேடுவதாக உள்ளது.
உலகமயவாக்கத்தை, நலனுக்கும் பொருளாதார இலாபங்களுக்கும் வடிவமைத்த அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் அத்தகைய கொள்கையை பிற நாடுகள் பின்பற்றி வளர்ச்சியடைவதை ஏற்க முடியாத நிலைக்குள் மாற்றுக் கொள்கைக்குள் நகரத் தொடங்கியுள்ளன.
பிற சக்திகள் அதனை பயன்படுத்தி வளர்ச்சி அடைகின்றன என்பதே அமெரிக்காவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் ஏற்பட்டிருக்கும் சவாலாகும்.
அத்தகைய சவாலை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில் மெக்ஸ்சிகோவுடன் சுவர் எழுப்பி வரையறுத்துக் கொண்ட அமெரிக்கா, வரியின் மூலம் உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் வர்த்தகச் சுவர் அமைப்பதில் வெற்றி பெற்று வருவதாக கருதுகிறது.
தற்போது கூட இந்தியாவுடனான வர்த்தகவரிக் கொள்கையில் இந்தியாவின் ஏற்றுமதிப் பொருட்களில் 50 சதவீதத்திற்கு மட்டுமே வரி இறுப்பினை மேற்கொண்டுள்ளது.
ஆனால் தனது நட்பு சக்திகளுடன் நெருக்கமான உறவைப் பேணும் அமெரிக்கா, பிரிக்ஸ் நாடுகளை அந்நியப்படுத்தும் விதத்தில் அணுகுமுறைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
அது ஒரு வகையில் பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார, வர்த்தக, இராணுவ பலப்படுத்தலுக்கு அத்திவாரமாக அமையும் என்ற விமர்சனம் கவனத்தில்கொள்ளப்பட வேண்டும்.
குறிப்பாக, இந்தியா மீதான பொருளாதார தடைகளை அதேபோன்று வரியின் உயர்வினை நிர்ணயிக்கும் போது, அமெரிக்காவின் சந்தை பலவீனம் அடைகிறது என்பதை அமெரிக்கா கருத்தில் கொள்ள தவறவில்லை.
ஏற்கனவே சீனாவுடனான சந்தை குறைந்திருக்கும் நிலையில், தற்போது இந்தியாவுடனும், பிரேசிலுடனும் அதன் சந்தைக் கட்டமைப்பு பலவீனம் அடைய தொடங்கியிருக்கிறது.
இந்தியாவில் தடைகளை இரண்டு பிரதானமான தளத்தில் அமெரிக்கா முன்மொழிந்திருக்கிறது. அது ஒருவகையில் அரசியல், பொருளாதார ரீதியான போட்டித் தன்மையின் பிரதிபலிபாகவே தெரிகிறது. இதனை ஆழமாக புரிந்து கொள்வது அவசியமானது.
முதலாவது இந்தியா மீது வரி இறுப்பை அமெரிக்க அதிகரிக்கின்ற போது பிரகடனப்படுத்திக் கொண்ட பிரதான விடயம் ரஷ்யா மீதான இந்திய நட்புறவை அடிப்படையாகக் கொண்டதாகும்.
வெளிப்படையாகவே உக்ரைன்- − ரஷ்யப் போரில் ரஷ்யா ஈடுபடுவதற்கு இந்தியாவுடன் பொருளாதார வர்த்தக உறவும் காரணம் என விவாதித்துக் கொண்டது.
ரஷ்யப் பொருட்களையும், ஆயுத தளபாடங்களையும் இந்தியா கைவிடும் வரை, இந்தியாவின் மீதான வரிவிதிப்பு அதிகமானதாக காணப்படும் என்பதை ரொனால்ட் ட்ரம்ப் வெளிப்படுத்தியிருந்தார்.
குறிப்பாக ரஷ்யாவின் பெற்றோலிய ஏற்றுமதியை ஐரோப்பா தடை செய்த போதும் இந்தியா − சீனா உடனான ரஷ்யாவின் பரிவர்த்தனை ரஷ்யப் பொருளாதாரம், ஏற்றுமதியின் மூலம் சாதகமான விளைவை எட்டி வருகிறது என்று மேற்குலகம் கருதுகிறது.
அதனாலேயே இந்தியா மீதான வரி அறவீட்டை அதிகரிப்பதற்கு அமெரிக்கா முனைந்துள்ளது. உக்ரைன் ரஷ்யப் போரை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் திணறும் மேற்குலகம், பாரிய பொருளாதார இழப்பீட்டையும் எதிர்கொண்டு வருகிறது.
ஊக்ரைன் மீதான போரை ரஷ்யா நீடிப்பதன் மூலம் ஐரோப்பிய பொருளாதரத்தை திணறடிக்க செய்துள்ளது.
இதுவே அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஏற்பட்டிருக்கும் பிரதான சவாலாகும். ஆகவே அதனை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவோடு நேரடியாக மோதுவதற்கு உத்தியற்ற மேற்குலகம், சீனா, இந்தியா ஊடாக ரஷ்யாவை தகர்த்துவிடலாம் என்று திட்டமிடுகிறது.
ஆனால் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான நட்பு என்பது நீண்டதும் வரலாற்று ரீதியானதும் பலமானதாகவும் உள்ளது. இன்றைய இந்திய பாதுகாப்பின் தகவல்களின் படி ரஷ்யாவின் இராணுவ ஆயுதங்களும் தளபாடங்களுமே இந்திய இராணுவத்தின் இராணுவ கொள்திறனாக காணப்படுகிறது.
1971 ஆம் ஆண்டு இரு நாடுகளும் செய்து கொண்ட பாதுகாப்பு உடன்படிக்கையிலிருந்து அத்தகைய உறவு வலிமை அடைந்துள்ளது.
அது மட்டுமின்றி புவிசார் அரசியல் நிலையிலும் ரஷ்யாவின் விளிம்புநிலை நாடுகளாக சீனாவும் இந்தியாவும் காணப்படுவது.
இதன் இருப்புக்கு இன்னோர் வலுச்சேர்க்கும் விடயமாகும். அதனால் அமெரிக்கா கருதுவது போல் இலகுவில் இந்தியா ரஷ்யாவின் உறவை நிராகரித்து விட்டு அமெரிக்காவிடம் சரணடையும் எனக் கருதி விட முடியாது.
ஆனால் பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் அது அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை எடுப்பதில் இரு வேறு முரண்பாடுகளை கொண்டிருக்கின்றது.
இந்தியாவை ஆளுகின்ற பிராமணர்கள் ஒரு பக்கமாகவும் கேரளாக்காரர்கள் இன்னொரு பக்கமாகவும் இந்திய கொள்கை வகுப்பில் செல்வாக்கு செலுத்துகின்றனர். இதன் விளைவு இந்தியாவின் நடுநிலைவாதம் அல்லது அணிசேராவாதம் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இரண்டாவது அமெரிக்க அரசாங்கம் இந்தியாவின் ஆறு கம்பனிகள் மீது பொருளாதார தடை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கான காரணம் ஈரானுடைய பெற்றோலியத்தை அதிகம் தங்கி இருக்கும் வர்த்தகத்தை மேற்கொள்ளும் இந்திய நிறுவனங்கள் மீதான அணுகுமுறையாக காணப்படுகிறது.
ஈரான் அமெரிக்க- இஸ்ரேலிய கூட்டின் நலன்களை பிராந்தியத்தில் தோற்கடிப்பதாகவும் அதற்கான பொருளாதார அடிப்படைகள் மேற்குறித்த ஆறு கம்பெனிகள் ஊடாக பெறுகிறது என்றும் பயங்கரவாதத்தை தூண்டும் விதத்தில் இஸ்ரேலியர்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் தடை மீதான நியாயப்பாடுகளை வெளிப்படுத்த முயலுகிறது.
ஈரான் அணு ஆயுதத்தை கைவிடுவதோடு மேற்காசியாவில் தாக்குதல்களை நிறுத்தும் வரை தடை நீடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகின்றது.
இரு நாடுகளுக்குமான உறவை பிற நாடுகளுடனான உறவினூடாக அமெரிக்கா வரையறுக்க முயலுகிறது. இது நாடுகள் சார்ந்த அரசியலில் புதிய உபாயமாக இருப்பதோடு மேறகுலகின் கையறு நிலையாகவும் தெரிகிறது.
அதனால் ஈரானுடனான இந்தியாவின் நட்புறவு என்பது பொருளாதார தளத்திலோ அரசியல் இராணுவ தளத்தினாலோ கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை அமெரிக்காவே தீர்மானிக்கும் என்பதே டொனால்ட் ட்ரம்ப்ன் கொள்கையாக உள்ளது.
இத்தகைய போக்கு வெட்பாலியா உடன்படிக்கைக்குப் பின்னரான உலக நியதிகளையும், சர்வதேச விதிகளையும் முற்றாக நிராகரிக்கும் ஒரு அணுகுமுறையாக தெரிகின்றது.
அரசுகளின் நிலைமையும் சுயாதிபத்தியமும், வர்த்தகத்தினால் அல்லது பொருளாதாரக் குறிகாட்டிகளினால் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை அடையாளப்படுத்துகிறதாகவே தெரிகிறது.
மூன்றாவது அமெரிக்க அரசாங்கம் முன்வைத்திருக்கும் பொருளாதாரத் தடைகளை இந்திய எதிர்க்கட்சியான காங்கிரஸ் விமர்சனங்களோடு அங்கீகரிப்பதாக குறிப்பிடுகிறது. ஆனால் இந்திய பொருளாதாரத்தின் மறுசீரமைப்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டது.
முன்னாள் பிரதமர்களான நரசிம்மராவும் மன்மோகன்சிங்கும் கட்டமைத்த இந்திய அரசியல் பொருளாதரத்தின் மறுசீரமைப்பிலேயே பாரதிய ஜனதா கட்சி பயணிக்கின்றது. பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் விமர்சனங்கள் உண்டு என்பதற்காக இந்திய தேசத்தை அவமதித்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையே காங்கிரஸ் தலைமைகள் புரிந்து கொள்ளத் தவறுகின்றன.
இந்திய தேசம் உலகத்துக்கே அதிக போதனைகளையும் எண்ணங்களையும் நடைமுறை சார்ந்த நியாயாதிக்கங்களையும் வெளிப்படுத்திய தேசம். அவ்வாறான தேசத்தை அமெரிக்கர்கள் அவமதிக்கும் போது அது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் அவமானமாக கருதப்பட வேண்டும்.
இந்தியா பொருளாதார ரீதியில் அழிந்து போகும் என்பதை விட பாகிஸ்தானிடம் இருந்து பெற்றோலியத்தை இந்தியா இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும் என்பது அமெரிக்க- பாகிஸ்தானிய உறவு மட்டுமன்றி ரஷ்யா பற்றிய மதிப்பீடு அமெரிக்கர்களிடம் எவ்வாறு உள்ளது என்பதையே கோடிட்டுக் காட்டுகிறது.
எனவே உலகம் அமெரிக்காவின் விருப்புக்கும் நலனுக்கும் மறைமுகமாக கட்டுப்பட்டு வந்த நிலை தற்போது வெளிப்படையாக அம்பலப்படுத்தப்படுகிறது.
அமெரிக்க நலன்களுக்குள்ளே உலக நாடுகள் ஒவ்வொன்றும் நகர வேண்டும் என்ற எண்ணத்தை அமெரிக்கா நேரடியாகவே வெளிப்படுத்த தொடங்கியுள்ளது.
நாடுகளுக்கு இடையில் நிலவும் நலன்களும், அதிகாரமும் உறவும் கொடுக்கல் வாங்கல்களும் அமெரிக்காவின் நலனுக்கு உட்பட்டது என்பதை இந்திய ரஷ்ய உறவிலும் இந்திய ஈரானிய உறவிலும் அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் இத்தகைய வெளிப்பாடு இன்னோர் அத்தியாயத்தை உலக அரங்கில் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பைக் கொடுத்திருக்கின்றது.
அத்தகைய வாய்ப்பினை இந்தியா சரியாக கட்டமைக்குமாயின் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகத்தின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும். அரசுகளின் நிலைமை வர்த்தகத்தாலும் பொருளாதாரத்தாலும் சந்தைகளாலும் கட்டமைக்கப்படுகிறது என்ற நியாயப்பாட்டை அல்லது கருத்துகளை இக்காலப் பகுதி அதிகம் பிரதிபலிக்கின்றது.
ஆனால் அதனையும் கடந்து கீழைத்தேசங்களின் அரசியல் பொருளாதார இருப்பை நிராகரித்து விட்டு, உலகம் இயங்க முடியாது என்பதை கீழைத்தேசங்கள் அனைத்தும் வர்த்தக ரீதியில் ஒன்றிணைகின்ற சூழலை ஏற்படுதுவதன் மூலம் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும்.