ஆப்கானிஸ்தானில் இரண்டாவது தடவையாக தாம் ஆட்சியைக் கைப்பற்றியதன் 4 ஆவது ஆண்டு நிறைவை தலிபான்கள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடினர்.
ஆப்கான் மக்களின் குறிப்பாக பெண்களின் உரிமைகளைப் புறக்கணித்து அடக்கி ஒடுக்கி வருவதாக தலிபான்களின் மீது பல தரப்பினராலும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ரஷ்யா தவிர வேறு எந்த நாடும் தலிபான்களின் அரசாங்கத்தை உத்தியோகபூர்வமாக அங்கீரிக்கவில்லை.
எனினும், தனது ஆட்சியின் 4 ஆவது ஆண்டு பூர்த்தியை கோலாகலமாக தலிபான்கள் கொண்டாடினர்.
தலைநகர் காபூல் உட்பட பல நகரங்களில் இக்கொண்டாட்டங்கள் நடைபெற்றன. தலிபான் அங்கத்தவர்களும் ஆதரவாளர்களும் வாகனங்களில் இருந்து வெளியே எட்டிப் பார்த்து, “ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்” என்ற கறுப்பு-,வெள்ளைக் கொடிகளை அசைத்தனர். ஹெலிகொப்டர்கள் காபூல் மீது வட்டமிட்டு, றோஜா மலர் இதழ்களைத் தூவின.
20 வருடங்களாக, அமெரிக்க தலைமையிலான படைகளுக்கு எதிரான போரின்போது தயாரிக்கப்பட்ட குண்டுகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை குறிக்கும் வகையில் மஞ்சள் நிற எண்ணெய்க் கொள்கலன்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
அதற்கு தலிபான்கள் மறுத்ததால் ஆப்கான் மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் படையெடுத்தன. 2001 நவம்பர் 7 ஆம் திகதியுடன் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் முதலாவது ஆட்சி முடிவுக்கு வந்தது.
அதன்பின் அமெரிக்க ஆதரவுடன் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருந்த நிலையில் 2020 பெப்ரவரி 29 ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்துக்கும் தலிபான்களுக்கும் இடையில் கட்டாரில் ஒப்பந்தமொன்று கையெழுத்திடப்பட்டது. இதன்படி ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் 14 மாதங்களுக்குள் (2021 மே1 ஆம் திகதிக்குள்) வெளியேறுவதற்கு இணக்கம் காணப்பட்டது.
ஜனாதிபதி அஷ்ரப் கனி
இதற்கிணங்க அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானில் தமது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டவுடன் ஜனாதிபதி அஷ்ரப் கனி தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக தலிபான் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தின. ஆப்கான் அரச படைகள் சரணடைந்ததைடுத்து தலிபான்கள் எதிர்பார்க்கப்பட்டதைவிட வேகமாக பிராந்தியங்களைக் கைப்பற்றினர்.
ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பியோடிய நிலையில் 2021 ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் இரண்டாவது ஆட்சி ஆரம்பமாகியது.
எதிர்பார்ப்பு
1996 முதல் 2001 தலிபான்களின் முதலாவது ஆட்சியானது மனித உரிமைகளை ஒடுக்கும் ஆட்சியாகவே அறியப்பட்டிருந்தது.
ஆனால், இரண்டாவது தடவை அவர்கள் ஆட்சியை கைப்பற்றியபோது, அந்த நிலையில் மாற்றம் ஏற்படலாம் எனக் கருதப்பட்டது. குறிப்பாக பெண்கள் விடயத்தில் அவர்கள் முந்தைய நிலையைவிட மிதமான போக்கை பின்பற்றக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
தலிபான்கள் தரப்பிலிருந்தும் இதற்கான சமிக்ஞைகள் அப்போது வெளிப்படுத்தப்பட்டன.
தலிபான்கள் தலைநகர் காபூலை கைப்பற்றி, 2 நாட்களின் பின்னர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய தலிபான் பேச்சாளர் ஸபியுல்லா முஜாஹித், ‘இஸ்லாமிய சட்ட வரையறைக்குள் பெண்கள் கல்வி கற்கவும், வேலை செய்யவும், சமூகத்தில் பங்காற்றவும் அனுமதிக்கப்படுவார்கள். ஷரிஆ சட்டத்துக்குள் பெண்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம்’ என்றார்.
புதிதாக ஆட்சிக்கு வந்த தலிபான் அரசாங்கத்தின் தலைவர்களை பெண் ஊடகவியலாளர்கள் செவ்வி காணும் காட்சிகளும் ஆப்கான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. தலிபான்களின் முதலாவது ஆட்சிக்காலத்தில் வெறும் கற்பனையாக மாத்திரமே இருந்திருக்கக்கூடிய ஒரு விடயம் இது.
பெண் மருத்துவர்களும் தாதியர்களும் தமது பணியை தொடரலாம் என அறிவிக்கப்பட்டது. ஆப்கான் பல்லைக்கழகங்களுக்கு பேராசியர்கள், விரிவுரையாளர்கள், மாணவிகள் என பெண்கள் தொடர்ந்தும் சென்றுகொண்டிருந்தனர்.
ஏமாற்றங்கள்
ஆனால், அந்த சூழல் அதிக காலம் நீடிக்கவில்லை.
சில மாதங்களுக்குள் சிறுமிகளுக்கான 6 ஆம் வகுப்புக்கு மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டன. படிப்படியாக பெண்களுக்கான உயர்கல்வி மற்றும் பெரும்பாலான தொழில்கள் தடைசெய்யப்பட்டன.
ஆண் பாதுகாவலரின் துணையின்றி பெண்கள் பயணம் செய்வது தடுக்கப்பட்டது. 2 வருடங்களுக்குள், பெண்கள் பூங்காக்களுக்கு செல்வது, விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவது, அழகுபடுத்தல் நிலையங்களுக்கு செல்வது போன்றவற்றுக்கும் முற்றாக தடை விதிக்கப்பட்டது.
ஆண் மாணவர்கள் கல்வி கற்பதற்கும் ஆண்கள் வேலைக்குச் செல்லவும் தலிபான்கள் அனுமதித்தனர். ஆனால், ஆண்களுக்கும் முழு உரிமைகள் இல்லை.
பாடசாலைகளில் கலை, சங்கீதம், சமூக விஞ்ஞானம் போன்ற பாடங்கள் நீக்கப்பட்டன. ஆண் மாணவர்களுக்கு ஆசிரியைகள் கல்வி கற்பிப்பதும் தடை செய்யப்பட்டது. இதனால் ஆண் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் 2023 ஆம் ஆண்டில் சுட்டிக்காட்டியிருந்தது.
தலிபான் அமைப்பின் தற்போதைய தலைவரான ஹிபதுல்லா அகுண்ட்ஸாதா, தலிபான்கள் இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்துவதற்காக கடுமையாக போராடி தியாகங்களை செய்ததாகக் கூறினார். தலைமையின் கட்டளைகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவது கட்டாயம் என்றும், இந்த கீழ்ப்படிதலின் எல்லைக்குள் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அவரது ஆதரவாளர்கள், உத்தரவுகளை வெளியிடுவதற்கு அகுண்ட்ஸாதாவின் மேலான மத அதிகாரத்தை வலியுறுத்துகின்றனர். தலிபான் அரசாங்கத்தின் உயர் கல்வி அமைச்சர், கடந்த ஏப்ரல் மாதம் ஒரு படி மேலே சென்று, அகுண்ட்ஸாதாவை விமர்சிப்பது இறைநிந்தனைக்கு ஒப்பானது என்றும், அவருக்கு கீழ்ப்படிவது இறைவனின் கட்டளை என்றும் கூறினார்.
Hibatullah Akhundzada ஹிபதுல்லா அகுண்ட்ஸாதா
ஐ.சி.சி. பிடிவிறாந்து
இந்நிலையில் தலிபான் தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்ஸாதாவையும் ஆப்கானிஸ்தானின் பிரதம நீதியரசர் அப்துல் ஹக்கீம் ஹக்கானியையும் கைது செய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி.) அண்மையில் பிடிவிறாந்து பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
ஹைபதுல்லா அகுண்ட்ஸாதாவும் ஹக்கீம் ஹக்கானியும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான “கல்வி, தனியுரிமை, குடும்ப வாழ்க்கை, நடமாட்டம், வெளிப்பாடு, எண்ணம், மனசாட்சி மற்றும் மதம் ஆகியவற்றின் சுதந்திரங்களை” பறிக்கும் கொள்கைகளை உத்தரவுகளில் வெளிப்படுத்தியமைக்கு “நியாயமான அடிப்படைகள் உள்ளன” என்று தான் நம்புவதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த ஏப்ரல் வரை, ஆப்கானிஸ்தானுக்கு மிகப்பெரிய நன்கொடையாளராக அமெரிக்கா விளங்கியது. ஆப்கான் மக்களில் அரைவாசிக்குமேல் உயிர்வாழ்வதற்கான உதவியை நம்பியுள்ளனர்.
ஆனால், தலிபான்கள் இந்த உதவிகள் மூலம் பயனடைவதாக உள்ளனர் என்ற கரிசனைகளுக்கு மத்தியில் இந்த அவசர உதவியை அமெரிக்கா நிறுத்தத் தீர்மானித்தது.
அரசு சாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்படும்போது அல்லது தங்கள் பணிகளை குறைத்துக்கொள்ளும் போது ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் வேலைகளை இழப்பார்கள். வேலைகள், ஒப்பந்தங்கள் மற்றும் குறைந்து வரும் மனிதாபிமான இருப்பு ஆகியவை தலிபான்களுக்கு வருவாய் இழப்பாகவும் மாறும் எனக் கருதப்படுகிறது.
ஐ.நா. அறிக்கை
இந்நிலையில் ஐ.நா. பெண்கள் அமைப்பு அண்மையில் விடுத்த அறிக்கையொன்றில், “தலிபான்களின் ஆட்சி ஆரம்பமாகி நான்கு வருடங்களாகும் நிலையில் ஆப்கானிஸ்தானில், பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளையும் மாண்பையும் பணிப்புரைகளின் அலைகள் பறித்துள்ளன.
இந்தக் கட்டுப்பாடுகள் தற்காலிகமானவை அல்ல, ஒரு உத்தரவு கூட மீளப் பெறப்படவில்லை. தலிபான்கள், பெண்களை பொது வாழ்க்கையில் இருந்து முற்றிலும் அகற்றும் தங்கள் நோக்கத்தை அடைவதில் மிக நெருங்கியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
“ஆப்கானிஸ்தானில் நிலவும் உலகின் மிக மோசமான பெண்களின் உரிமைகள் நெருக்கடி நிலையானது,
இயல்பாகிவிடும் அபாயத்தில் உள்ளது. பெரும்பாலான பெண்களால் தங்கள் வீட்டில் கூட முடிவுகளை எடுக்க முடியவில்லை.
பெண்கள் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படிப்பதற்கு தடை, நாட்டின் சில பகுதிகளில் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதற்கு தடை, மற்றும் வெளிநாட்டு உதவிகளில் குறைப்பு ஆகியவை, பெண்களுக்கு தேவையான மருத்துவ பராமரிப்பு கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளன.
“இதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்துகின்றன. பெண்கள் குறைவான ஆரோக்கியமான, குறுகிய வாழ்க்கையை வாழ்கின்றனர்.
மகப்பேற்று மரண அபாயங்களும், குழந்தைத் திருமண விகிதங்களும் அதிகரிக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுப்பாடற்று வளர்கின்றன. ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகளின் நிலை, இந்த நாட்டை உலகில் இரண்டாவது மிகப் பெரிய பாலின இடைவெளி கொண்ட நாடாக (யேமனுக்கு அடுத்தபடியாக) ஆக்கியுள்ளது.
“ஆப்கான் பெண்களும் சிறுமிகளும் தொடர்ந்து வலிமை, மீள்தன்மை மற்றும் தைரியத்தை வெளிப்படுத்துகின்றனர்.
சமத்துவம் சாத்தியம் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால், அனைவருக்கும் சிறந்த ஆப்கானிஸ்தானை உருவாக்குவதற்கான இந்த சவால்களை அவர்கள் தனியாக எதிர்கொள்ளக் கூடாது.
உலகம் இப்போது செயல்பட வேண்டும். உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டுமல்ல, அனைத்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கும் சம உரிமைகளுடன் ஒரு தலைமுறையின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஆப்கான் பெண்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்” எனவும் மேற்படி அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
–ஆர்.சேதுராமன்-