புவனேஸ்வர்: ஒடிஷாவில் ஊழியர்களின் அலட்சியத்தால் பள்ளியில் தனித்து விடப்பட்ட சிறுமி, தப்பிக்க முயன்ற போது ஜன்னல் கம்பி இடையே தலை சிக்கி விடிய விடிய தவித்ததால் படு காயம் அடைந்தார்.
ஒடிஷாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, நேற்று முன்தினம் வழக்கம் போல் வகுப்புகள் இயங்கின.
பின், மாணவர்கள் அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டனர். அங்கு, இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி, வகுப்பறையிலேயே துாங்கிய நிலையில், அதை கவனிக்காமல் பள்ளி பூட்டப்பட்டது.
துாங்கி எழுந்த சிறுமி வகுப்பறைக்குள் சிக்கியுள்ளதை அறிந்தவுடன் பதற்றம் அடைந்தார். ஜன்னல் கம்பி வழியே வெளியேற முயன்றபோது அவரது தலை இரு கம்பிகளுக்கு இடையே சிக்கியது.
தலையை வெளியே எடுக்க முடியாமல் தவித்தார். விடிய விடிய ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கி தவித்ததில் படுகாயம் அடைந்தார்.
சிறுமி வீட்டுக்கு வராததால் கவலையடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடினர். அவர் படித்த பள்ளிக்கு நேற்று காலை சென்றனர்.
அப்போது, பள்ளி வளாகத்தில் உள்ள ஜன்னலில், தலை சிக்கியபடி சிறுமி தவித்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பல கட்ட போராட்டத்துக்கு பின், படுகாயங்களுடன் சிறுமி மீட்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அ ளிக்கப் படுகிறது.
சிறுமி நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து சிறுமி படித்த பள்ளி ஆசிரியை சஞ்சிதா கூறுகையில், ”வகுப்பறைகளை சோதனையிட்டு பூட்டும் பணியை பள்ளி சமையல்காரர் வழக்கமாக செய்வார். பலத்த மழை காரணமாக, அவர் அன்று பள்ளிக்கு வரவில்லை. ஏழாம் வகுப்பு மாணவர்களிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
”வகுப்பறையில் சிறுமி மேஜைக்கு அடியில் துாங்கியதால், மாணவர்கள் அதை கவனிக்கவில்லை. தவறு நேர்ந்துவிட்டது,” என்றார்.
இதற்கிடையே, சிறுமி ஜன்னல் கம்பியில் சிக்கி தவித்த ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவி, மாவட்டம் முழுதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
‘அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.