இலங்கையர்களுக்கு டிஜிட்டல் ஆளடையாள அட்டையை விநியோகிப்பதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. இலங்கையர்களுக்கான தேசிய அடையாள அட்டையை ஆட்பதிவுத் திணைக்களமே விநியோகிக்க வேண்டும்.

இலங்கையின் தரவு கட்டமைப்பை இந்தியாவுக்கு தாரைவார்க்க முடியாது. நாங்கள் அதற்கு இடமளிக்க போவதில்லை. சட்டத்தின் ஊடாக உரிய நடவடிக்கை எடுப்போம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு வழங்கியுள்ளதை சவாலுக்குட்படுத்தி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது நேற்று உயர்நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டது.

இந்த மனு தொடர்பில் புதன்கிழமை (27) உயர்நீதிமன்றத்தில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டதாவது,

தேசிய அடையாள அட்டை கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற்காகவும், டஜிட்டல் அடையாள அட்டை விநியோக திட்டத்துக்காகவும் ஆட்பதிவுத் திணைக்களம் 5.5 பில்லியல் ரூபா செலவழிக்கப்பட்டு திட்டம் 99 சதவீதம் நிறைவுறும் தருவாயில் இருந்தது.

இவ்வாறான நிலையில் தான் இலங்கையர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை விநியோகிக்கும் திட்டத்தை இந்த அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்கியது.

இலங்கை பிரஜைகளின் தனிப்பட்ட தரவுகளை இந்தியாவுக்கு வழங்குவதால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டி இந்த திட்டத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினோம்.

இலங்கையர்களுக்கு டிஜிட்டல் ஆளடையாள அட்டையை விநியோகிப்பதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. இலங்கையர்களுக்கான தேசிய அடையாள அட்டை ஆட்பதிவுத் திணைக்களமே விநியோகிக்க வேண்டும்.

இலங்கையின் தரவு கட்டமைப்பை இந்தியாவுக்கு தாரைவார்க்க முடியாது.நாங்கள் அதற்கு இடமளிக்க போவதில்லை. சட்டத்தின் ஊடாக உரிய நடவடிக்கை எடுப்போம்.

இந்தியாவுக்கு எதிரான கொள்கையை கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை காட்டிலும் இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளது என்பதை மாத்திரம் குறிப்பிட வேண்டும்.

இலங்கையர்களுக்கு அடையாள அட்டையை விநியோகிக்கும் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவதால் ஏற்படும் பாதிப்புக்களை அரசாங்கம் ஆலோசிக்கவில்லையா?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்காக நாங்கள் ஒன்றிணையவில்லை.

அவரது அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைக்கும், எமது அரசியல் கொள்கைக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசியலமைப்புடனான சர்வாதிகாரத்தை செயற்படுத்த அரசாங்கத்துக்கு இடமளிக்க முடியாது என்ற காரணத்தால் நாங்கள் ஒன்றிணைந்தோம் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version