அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரத்தில், நேற்று (ஆகஸ்ட் 28) ஒரு கத்தோலிக்க தேவாலயத்தின் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் மீது, தேவாலயத்தின் ஜன்னல்கள் வழியாக ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இந்தத் தாக்குதலில் 8 மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறார்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

தேவாலயப் பகுதியில் ஒரு பள்ளியும் அமைந்துள்ளதால், புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நடந்தபோது, தேவாலயம் மாணவர்களால் நிரம்பியிருந்தது. காயமடைந்த 17 பேரில் 14 பேர் சிறார்கள் .

Robin Westman

தாக்குதல் நடத்திய 23 வயதான ராபின் வெஸ்ட்மேன்,(Robin Westman) சம்பவ இடத்திலேயே தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்துவிட்டார் என்றும், அவருக்கு ‘குறிப்பிடத்தக்க குற்றவியல் பின்னணி’ இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

“வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அப்பாவி குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு எதிராக வேண்டுமென்றே நடத்தப்பட்ட ஒரு வன்முறைச் செயல்” என்று காவல்துறைத் தலைவர் பிரையன் ஓ’ஹாரா செய்தியாளர்களிடம் கூறினார்.

“குழந்தைகள் நிறைந்த ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பின்னால் இருக்கும் கொடூரமும் கோழைத்தனமும் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாதது,” என்றும் அவர் கூறினார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை. இது ஒரு உள்நாட்டு பயங்கரவாதச் செயலாகவும், கத்தோலிக்கர்களுக்கு எதிரான வெறுப்பு அடிப்படையிலான குற்றமாகவும் விசாரிக்கப்பட்டு வருவதாக எஃப்பிஐ (FBI) இயக்குனர் காஷ் படேல் கூறினார்.

புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 08:00 மணிக்கு சில நிமிடங்கள் முன்பு துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசாருக்கு தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கின.

தாக்குதல் நடத்தியவர் கட்டிடத்தின் பக்கவாட்டில் இருந்த தேவாலய ஜன்னல்கள் வழியாக, ஒரு ரைஃபிள், ஒரு ஷாட் கன் மற்றும் ஒரு பிஸ்டல் என மூன்று துப்பாக்கிகளைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடுகளை நடத்தினார். சம்பவ இடத்தில் ஒரு புகை குண்டையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

தேவாலயத்திற்கு உள்ளே தோட்டாக்களின் உறைகள் (Bullet casing) எதுவும் காணப்படவில்லை என்பதைக் குறிப்பிட்ட அதிகாரிகள், அவர் கட்டிடத்திற்குள் சுட்டாரா அல்லது தேவாலயத்திற்கு வெளியே இருந்து மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என்று விசாரித்து வருகின்றனர்.

“‘பூம், பூம், பூம்’ என்று ஏதோ சத்தத்தை என்னால் கேட்க முடிந்தது, அது ஒரு துப்பாக்கிச் சூடு என எனக்குப் உடனே புரிந்தது” என்று தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் பி.ஜே. மட், வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் கூறினார்.

பின்னர் தேவாலயத்திற்கு ஓடிய பி.ஜே. மட், அங்கு தரையில் மூன்று தோட்டா காட்ரிட்ஜ்களை கண்டார்.

தாக்குதலில் இருந்து தப்பிய 10 வயது சிறுவன் ஒருவன், சிபிஎஸ் செய்தி முகமையிடம், “தன் நண்பன் தன் மேல் படுத்து, தோட்டாக்களிலிருந்து தன்னைக் காப்பாற்றியதாகக்” கூறினான்.

“நான் கண்ணாடி ஜன்னலிலிருந்து இரண்டு இருக்கைகள் தொலைவில் இருந்தேன், என் நண்பன் விக்டர் என் மேல் படுத்து என்னைக் காப்பாற்றினான், ஆனால் அவனுக்கு காயம் ஏற்பட்டது.” என்று அந்தச் சிறுவன் கூறினான்.

“என் நண்பன் முதுகில் அடிபட்டது, அவன் மருத்துவமனைக்குச் அழைத்துச் செல்லப்பட்டான். நான் அவனுக்காக மிகவும் பயந்தேன், ஆனால் இப்போது அவன் நலமாக இருக்கிறான் என்று நினைக்கிறேன்,” என்றும் அந்தச் சிறுவன் கூறினான்.

தெற்கு மினியாபோலிஸின் ஒரு குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில் 5 முதல் 14 வயது வரையிலான மாணவர்கள் படிக்கின்றனர்.

2016ஆம் ஆண்டின் பள்ளி செய்திமடலின்படி, தாக்குதல் நடத்தியவரின் தாயார் மேரி கிரேஸ் வெஸ்ட்மேன், முன்பு அந்தப் பள்ளியில் பணிபுரிந்துள்ளார். ஒரு ஃபேஸ்புக் பதிவு, அவர் 2021 இல் அந்தப் பணியில் இருந்து ஓய்வு பெற்றதாகக் கூறுகிறது.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில், குற்றம்சாட்டப்பட்ட நபர் சம்பவம் குறித்து ஆன்லைனில் பதிவேற்ற தயாராக வைத்திருந்த ஒரு செய்தியை போலீசார் கண்டுபிடித்தனர். அதை நீக்க அதிகாரிகளுக்கு எஃப்பிஐ உதவியது.

அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் தங்கள் ‘ஆழ்ந்த இரங்கலை’ தெரிவித்து, உதவிகளை வழங்கியதாக மாகாண ஆளுநர் டிம் வால்ஸ் கூறினார்.

“மினசோட்டாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இதே நிலை தான். இதுபோன்ற ஒரு நாளை எந்த சமூகமோ அல்லது பள்ளியோ ஒருபோதும் சந்திக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெள்ளை மாளிகையில் அமெரிக்கக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version