“நாய் நாயின் வேலையைச் செய்யவேண்டும், பூனை பூனையின் வேலையைச் செய்யவேண்டும்….” என்று கூறும் வழக்கம் எமக்கு எல்லோருக்கும் தெரியும்.

இதை யாரையும் நாயாகவும், பூனையாகவும் குறிப்பிட்டதாக மல்லுக்கட்டத் தேவையில்லை. இதன் அர்த்தம் அவரவர் அவரவருக்குரிய, அவர்களின் துறைசார்ந்த, நிபுணத்துவ சிந்தனை செயற்பாடுகளை சமூகத்திற்காக செய்யவேண்டும் என்பதாகும்.

இதன் வழிதான் உலகில் தொழில்பிரிவு, தொழில்தேர்ச்சி சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் தனித்துவமாக அடையாளப்படுத்தப்படுகிறது.

விரும்பியவர்கள் எல்லாம் சமூகநலன் என்ற போர்வையில் பிரித்ஓதவும், பூசை செய்யவும், திருப்பலி கொடுக்கவும் முடியுமா? இல்லை என்றால் அரசியலில் மட்டும் அது எப்படி சாத்தியமாகும்?

 எந்த விடயத்தை பேச விளைகிறது என்பது உங்களுக்கு இப்பவே புரிந்திருக்கும். சுதந்திரத்திற்கு பின்னரான ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றில் பௌத்த சாமியார்களின் மகத்தான பஞ்சசீல கரு(று)மங்களால் கிழித்தெறியப்பட்ட ஒப்பந்தங்கள் பல.

பேரினவாதச் சிங்கள, பௌத்த அரசை ஒரு சமாதானத் தீர்வுக்கு வரமுடியாது தடுக்கும் வல்லமையை பௌத்தபீடங்கள் கொண்டுள்ளன. அவற்றின் சாமியார்களின் பௌத்தத்திற்கு விரோதமான செயற்பாடுகளை சிறுபான்மை தேசிய இனங்கள் எப்போதும் விமர்சித்தே வந்துள்ளன.

இலங்கை அரசியலில் பௌத்த மதத்தின் அதுவும் அரச மதம் என்ற அந்தஸ்துதுடன் அதன் அளவுக்கு மீறிய அரசியல் தலையீட்டை தமிழ், முஸ்லீம் மக்கள் எப்போதும் கண்டித்து வந்துள்ளனர்.

முன்மாதிரி அற்ற கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலான இந்த அரசியல் தலையீடே இலங்கையின் இன்றைய சமூக, பொருளாதார, அரசியலில் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கான காரணமாகவும் குற்றம் சாட்டப்பட்டு வந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை அரசியலுக்கும் மதத்திற்கும் இடையே போதுமான அளவு இடைவெளியை பேணிய கிறிஸ்தவ, இஸ்லாமிய, சைவ மடலாயங்கள் பொதுவாகவும், குறிப்பாக தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரு குடையின் கீழ் அணிதிரண்டும் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

அத்துடன் அரசியலில் பௌத்த மடாலயங்களினதும், பௌத்த துறவிகளினதும் தலையீட்டையும் இந்த அடிப்படையில் விமர்சனம் செய்தும், கண்டித்தும் வந்த வரலாறு தமிழ்பேசும் மக்களின் அரசியலுக்கு இருக்கிறது.

ஆனாலும் எதிர்மறையாக ஆயுதப்போராட்டம் இந்த மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. எல்லாச் சமூகங்களினதும் அரசியலிலும் சமயம் புகுந்து கொண்டது. அரசியல் கணிசமான அளவுக்கு மதமயமாக்கப்பட்டது.

புலிகளின் காலத்தில் வேறு எந்த மாற்று மதத்தலைவர்களுக்கும் இல்லாத முன்னுரிமை அளவுக்கு அதிகமாக கிறிஸ்தவ திருச்சபைக்கு குறிப்பாக தமிழர்கள் சார்ந்த திருச்சபைக்கு வழங்கப்பட்டது.

இதன் மூலம் புலிகள் மேற்கு உலகிற்கு சேவகம் செய்கின்ற ஆயுத அரசியலை செய்தும் தோற்றுப் போனார்கள்.

சகோதர இஸ்லாமிய சமூகத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல்களால் முஸ்லீம் சமூகத்தையும் மத அரசியலுக்கு தள்ளினார்கள்.

பௌத்தத்திற்கு எதிரான செயற்பாடுகளால் ஏற்கனவே இருந்த பௌத்தத்தின் அரசியல் தலையீட்டை மேலும் அதிகரிக்க, சிங்கள சமூகம் அங்கீகரிக்க காரணமானார்கள். சைவக்குருக்கள்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இந்த குறுந்தேசிய, மதவாதத்தின் விளைவுகளை தமிழ்பேசும் சமூகங்களே இன்று அறுவடை செய்கின்றன.

இந்த, அளவுக்கு மீறிய அரசியல் தலையீடும், புலிகள் வளர்த்து விட்ட கிறிஸ்தவ மத நிறுவனங்களுக்கான விசேட அங்கீகாரமும் இன்று மன்னார் ஆயர் அந்தோனிப்பிளை ஞானப்பிரகாசத்தை சிறுபான்மைத்தேசிய இனங்களின் அடிப்படை அரசியல் உரிமையான அதிகாரப்பகிர்வுக்கு எதிராக பேசவைத்துள்ளது.

இது தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்தில் கிறிஸ்தவ பாதிரியார்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதல்ல.

சிவசேனா சச்சுதானந்தன்

சிவசேனா சச்சுதானந்தன் காவியுடுத்து ஹர்த்தாலை எதிர்த்தார். எம்.ஏ. சுமந்திரன் ஹர்த்தால் விடயமாக பேசச்சென்ற போது ஆயர் சந்திக்க மறுத்தார்.

வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அறிவிக்கப்பட்டிருந்த 2025, ஆகஸ்ட் 18ம்திகதி, திங்கட்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் ஆயருக்குமான சந்திப்பு நடந்தது. தமிழ்த்தேசிய அரசியலுக்கு குறுக்கே காய்கள் இப்படி நகர்த்தப்படுகின்றன.

மன்னார் மாவட்ட மற்றைய பிரச்சினைகளை ஜனாதிபதியுடன் பேசியதுடன், மாகாணசபை நிர்வாகத்தின் கீழ் உள்ள மன்னார் பொது வைத்தியசாலையை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஆயர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது ஜனாதிபதி செயலகம் திரிபுபடுத்தி வெளியிட்ட செய்தியல்ல. மாறாக ஆயர் இல்ல குருவானவர் ஒருவரே அறிவித்த செய்தி என்பது துரதிஸ்டவசமானது.

இந்த செய்தியின் தாற்பரியம் இன்றைய காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் அரசியலில் மிக,மிக முக்கியமானது.

1. அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய மாகாணசபை தேர்தலை நடாத்தாமல் பல்வேறு சாக்குப்போக்குகளை சொல்லி இழுத்தடிக்கிறது.

2. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாணசபையின் முதலும், கடைசியுமான முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் இலங்கை வந்து மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளார்.

3. ஈ.பி.ஆர்.எல்.எப் இன் ஏற்பாட்டில் வடக்கில் அதிகாரப்பகிர்வு குறித்து துறைசார்ந்த நிபுணர்களைக்கொண்டு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

4. தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தன்னைத்தானே வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

5. ஈ.பி.ஆர்.எல்.எப் . பொருத்தமான பொது வேட்பாளர் ஒருவரை தேடும் முயற்சியில் மந்திராலோசனைகளை நடாத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

6. என்.பி.பி. அரசாங்கம் தேர்தலை அறிவிப்பதற்கு முன்னர் வடக்கு, கிழக்கில் குறிப்பாக வடக்கில் தன்னை அரசியலில் ரீதியாக – அபிவிருத்தி ஊடாக பலப்படுத்தும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது. தமிழ்த்தேசிய அரசியலின் பலவீனங்களை பயன்படுத்தியும், ஓட்டைகளை தேடித்தேடி அடைத்தும் வருகிறது.

7 .தென்னிலங்கையில் எதிர்க்கட்சிகளும் மாகாணசபை தேர்தலுக்கான கோரிக்கையை முன்வைத்துளளன.

8. விமல்வீரவன்ச, உதயகம்பன்வல, சரத்வீரசேகர போன்ற எதிர்த்தரப்பினரும், ஜே.வி.பி.யின் ரில்வின் சில்வா – பிமல் இரத்நாயக்க தீவிர அணியினரும் அதிகாரப்பகிர்வுக்கு எதிராக அல்லது மட்டுப்படுத்துவதற்காக களத்தில் நிற்கின்றனர். பொதுஜன பெரமுனவும் இதில் பங்காளியாகலாம். சில பௌத்த குருமாரும் இதில் அடங்கும்.

9. இந்தியா இந்த ஒப்பந்தத்தின் ஒரு பங்காளி என்றபோதும், யுத்தத்தின் பின்னரான கடந்த 16 ஆண்டுகளாக இது விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து, தமிழ் தரப்பு “சமஷ்டி” கோரியதால் சலிப்படைந்து நீங்களும், உங்கள் இனப்பிரச்சினை தீர்வும் என்றும், சமஷ்டி தந்தால் இருகரங்களாலும் வாங்கிக்கொள்ளுங்கள் என்றும் விட்டு விட்டது. இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து தனது பொருளாதார இலக்குகளை இழக்கவும், இலங்கையை மேலும் சீனாவின் பக்கம் தள்ளிவிடவும் அது தயாராயில்லை.

10. ஐ.நா. கூட்டத்தொடர்களில் அதிகாரப்பகிர்வு பேசு பொருளாக்கப்படும்

என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு நிலையில் ஒரு பத்திரிகை குறிப்பிட்டிருப்பது போன்று மன்னார் வைத்தியசாலை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு “கொள்ளி எடுத்துக்கொடுத்து இருக்கிறார் ” ஆயர் ஞானப்பிரகாசம்.

ஆயர் அ.ஞானப்பிரகாசம் அவர்கள் ஜனாதிபதியுடன் மன்னார் மாவட்ட பிரச்சினைகள் தொடர்பாக பேசியிருக்கிறார்.

கனிய மணல் அகல்வு, காற்றாலை திட்டம் என்பன முக்கியமானவை. அதற்கான தொடர் மக்கள் போராட்டம் இருபது நாட்களை எட்டுகிறது.

அதை அரசியலுக்கு அப்பால் மறைமாவட்டமே முன்னின்று நடாத்துவதாக அறிய வருகிறது. அப்படியானால் தமிழ்த்தேசிய அரசியல் ஒத்துழைப்பு அதற்கு கிடைக்கவில்லையா? இது ஆயரின் மன உளைச்சலுக்கு காரணமா? செல்வம் அடைக்கலநாதன் ஹர்த்தாலை ஆதரித்தார்.

ஹர்த்தாலில் ஆயர் கொழும்பில் ஜனாதிபதியுடன் பேசினார். ஆயரின் கருத்து குறித்து செல்வம் இன்னும் திருவாய்மலரவில்லை. எல்லா மாவட்டங்களிலும் எம்.பி.க்களை கொண்டுள்ள தமிழரசு கட்சியும் இதுவரை மௌனம் சாதிக்கிறது. எல்லாவற்றிற்கும் முந்திக்கொள்ளும் சுமந்திரனும், சிவஞானமும் ஹர்த்தால் களைப்பில் இருக்கிறார்கள் போலும்.

மன்னார் வைத்தியசாலையில் மட்டும் அல்ல வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பல்வேறு பிரச்சனைகள் உண்டு.

நிதிவளம், ஆளணி, மருத்துவ உபகரணங்கள், இயந்திரங்கள் பற்றாக்குறையுடன், ஊழல், அதிகாரிகளின் தன்னிச்சையான செயற்பாடுகள் என்று நீண்ட குறைபாட்டு பற்றாக்குறை உள்ளது.

அதற்காக கிடைத்த அதிகாரப்பகிர்வு வாய்ப்பை வெறும் குறுங்கால சுய இலாப நோக்கில் மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க ஆயர் வழங்கியுள்ள ஆலோசனை/ கோரிக்கை தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர நீண்ட கால தீர்வு நோக்கில் அப்பட்டமான அவலம்.

நியதிச்சட்ட நடைமுறை அதிகாரங்களின் படி மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாகாணசபை சபை இயங்கத்தொடங்கி அதில் அதிகாரத்தை மத்திய அரசுக்கு தாரைவார்ப்பதாக பெரும்பான்மை ஜனநாயகத்தின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலே அது சாத்தியம் என்று கூறப்படுகிறது.

அல்லது அரசாங்கம் அரசியல் அமைப்பில் மாற்றம் செய்து ஏற்கனவே மீளப் பறிக்கப்பட்ட அதிகாரங்கள் போன்று இதையும் பறிக்க வேண்டும். அது குறித்து சிந்திக்குமாறு அரசாங்கத்திற்கு ஆயரின் ஆலோசனை அமைகிறது.

அதிகாரப்பகிர்வு சட்டியில் இருந்து அடுப்புக்குள் வீழ்கிறது.

இதற்கு தான் சொல்வது நாயின் வேலையை நாயும், பூனையின் வேலையை பூனையும் செய்யவேண்டும் என்று.

ஆக, இது ஆயர் அநுரவுக்கு கொள்ளி எடுத்துக் கொடுத்த கதையன்றி வேறென்ன?

 

— அழகு குணசீலன் —

Share.
Leave A Reply

Exit mobile version