80 ஆயிரம் புறாக்களை பறக்கவிட்டு, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 80 ஆவது ஆண்டு வெற்றி விழா, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், இதன் நேரடி ஒளிபரப்பு கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் ஏற்பாட்டில் சீனத் தூதுவரின் தலைமையில் இன்று புதன்கிழமை (3) காலை சினமன் லைப் ஹோட்டலில் இடம்பெற்றது.

 

 

 

சீனாவில் இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்டம் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மற்றும் ஈரான், கியூபா உள்ளிட்ட 26 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக சீனா பெற்ற வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

சீனாவின் முக்கிய இராணுவ அணிவகுப்பில் பங்கேற்பதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) குண்டு துளைக்காத ரயில் மூலம் பெய்ஜிங் சென்றடைந்தார்.

“வரலாற்றை நினைவில் கொள்வோம், தியாகிகளை நினைவு கூர்வோம், பிரகாசமான எதிர்காலத்திற்காக அமைதியைப் போற்றுவோம்” என்ற முக்கிய கருப்பொருளில் சுமார் 70 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த வெற்றிக்கொண்டாட்டத்தின் போது, சீன இராணுவம் தனது அணு ஆயுத பலத்தை தரை, கடல் மற்றும் வான்வழி என மூன்று தளங்களிலும் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்தியது.

தியான்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு மரியாதையை சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் பார்வையிட்டார்.

“நீதி வெல்லும்” , “அமைதி வெல்லும்” மற்றும் “மக்கள் வெல்லும்” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளைச் சுமந்துகொண்டு ஹெலிக்கொப்டர்கள் தியான்மென் சதுக்கத்திற்கு மேல் பறந்தன.

5 ஆவது தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், சீனாவின் அதிநவீன இராணுவ தளவாடங்கள், புதிய ரக டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் விமானங்கள் அணு ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

வான்வழி நீண்ட தூர அணு ஏவுகணை, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணை, தரைவழி சார்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணை மற்றும் புதிய DF-31BJ தரைவழி சார்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. அத்துடன் DF-5C திரவ கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டது. இந்த ஏவுகணை, உலகின் எந்த இலக்கையும் தாக்கும் திறன் கொண்டது என சீனா இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்போது ஒய்ஜே-21 (YJ-21), டிஎஃப்-17 (DF-17) மற்றும் டிஎஃப்-26டி (DF-26D) போன்ற புதிய தலைமுறை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த ஏவுகணைகள் மிக அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவை. மேலும், இவை எதிரிகளின் பாதுகாப்பு அரண்களை ஊடுருவி, இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கும் சக்தி வாய்ந்தவை ஆகும்.

ஆளில்லா தரைப்படை, ஆளில்லா கடல்சார் போர்ப் படை மற்றும் ஆளில்லா விமானப் படை ஆகியவற்றின் அணிவகுப்புக்கள் இடம்பெற்றன. சமாதானத்தை வெளிப்படுத்தும் முகமாக 80 ஆயிரம் புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய சீன ஜனாதிபதி சீ ஜின் பிங்,

80 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற வெற்றி, நவீன காலத்தில் சீனா வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பெற்ற முதல் முழுமையான வெற்றி. போர் மீண்டும் நிகழாமல் இருக்க, போருக்கான அடிப்படைக் காரணத்தை ஒழிக்க வேண்டும் என்று அவர் உலக நாடுகளை வலியுறுத்தினார்.

மிகப் பிரம்மாண்டமான முறையில் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு, அமைதியான வளர்ச்சியின் பாதையைத் தொடர அதன் உறுதியையும், தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான அதன் வலுவான ஆர்வத்தையும், உலக அமைதியைப் பாதுகாப்பதற்கான அதன் சிறந்த திறனையும்  எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.

இந்த ராணுவ அணிவகுப்பில் 10,000க்கும் மேற்பட்ட சீன இராணுவ வீரர்கள், 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான போர் வாகனங்கள் பங்கேற்றன. ஆளில்லா உளவு மற்றும் எதிர்ப்பு- ஆளில்லா கருவிகள், அதிவேக ஏவுகணைகள், இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஆற்றல் கொண்ட ஆயுதங்கள், மின்னணு  அமைப்புகள் மற்றும் உலகளாவிய தாக்குதல் திறன் கொண்ட மூலோபாய ஆயுதங்கள் போன்ற அதிநவீன ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்ற சீன வீரர்கள் முதன்முறையாக இந்த வெற்றி தின அணிவகுப்பில் அணிவகுத்துச் சென்றனர்.

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் பங்களித்த சர்வதேச நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் சிறப்பு அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன. சீனாவில் வெற்றி தினத்தைக் கொண்டாடும் வகையில் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் இன்று இரவு (செப்டம்பர் 3) சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version