உலக அரசியல் மற்றும் பொருளாதார அதிகார மையம் மெல்ல மேற்கிலிருந்து ஆசியாவிற்கு மாறி வருகிறது.

இந்த மாற்றத்தின் மையத்தில், ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு போன்ற நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு முன்னதாக, ரஷ்யாவும் சீனாவும் முதன்முறையாக ஜப்பான் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடலில் கூட்டு நீர்மூழ்கி ரோந்துப் பணியை மேற்கொண்டன. இந்த ரோந்து நடவடிக்கை உலக அரங்கில் ஒரு பெரும் புவிசார் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய – சீன கூட்டு நீர்மூழ்கி ரோந்து நடவடிக்கை வெறும் இராணுவப் பயிற்சி மட்டுமல்ல, அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், மொஸ்கோவும் பெய்ஜிங்கும் தங்களின் மூலோபாயக் கூட்டாண்மையை ஆழப்படுத்துகின்றன என்பதற்கான ஒரு தெளிவான செய்தியாகும்.

மறுபுறம் இந்த நிகழ்வு, குறிப்பாக இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இருதரப்பு உறவுகள், உலக அரசியல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆகியவற்றை இத்தகைய நடவடிக்கைகள் எப்படி பாதிக்கிறது என்பதை ஆழமாகப் புரிந்துகொள்வது அவசியம்.

Russia, China complete first joint submarine patrol mission

ரஷ்ய – சீன கூட்டு நீர்மூழ்கி ரோந்து: ஒரு புதிய அத்தியாயம்

ரஷ்ய கடற்படை மற்றும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின்; நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆசிய-பசிபிக் பகுதியில் தங்களது முதல் கூட்டு நீருக்கடியிலான ரோந்துப் பணியை மேற்கொண்டன.

இது ஏற்கனவே கூட்டு கடற்படை ரோந்து மற்றும் கூட்டு குண்டுவீச்சுப் பயிற்சிகளை நடத்தும் மொஸ்கோ மற்றும் பெய்ஜிங் இடையேயான இருதரப்பு இராணுவ நடவடிக்கையின் விரிவாக்கத்தைக் குறிக்கிறது.

இரு நாடுகளும் பாரம்பரியமாகப் பகிர்ந்து கொள்ளும் இராணுவ ஒத்துழைப்பை, கடற்படைக்கு அப்பால், நீருக்கடியில் ரோந்துப் பணிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளதைக் காட்டுகிறது.

Russia and China Conduct First-Ever Joint Submarine Patrol in Sea of Japan,

ரஷ்ய பசிபிக் கடற்படை வெளியிட்ட அறிக்கையின்படி, தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலான வோல்கோவ் (பீ-603), அடையாளம் காணப்படாத ஒரு சீன நீர்மூழ்கிக் கப்பலுடன் இணைந்து ரோந்துப் பணியில் பங்கேற்றதாக அறிவித்துள்ளது.

இந்த ரோந்துப் பணியானது, ஜப்பான் கடலில் நடைபெற்ற ‘கடல்சார் தொடர்பு-2025′ பயிற்சி முடிந்த பிறகு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பசிபிக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பலும் சீன கடற்படை நீர்மூழ்கிக் கப்பலும் ஜப்பான் கடல் மற்றும் கிழக்கு சீன கடலில் ஒரு இணக்கமான ரோந்துப் பாதையில் பயணித்தன.

இந்த ரோந்து நடவடிக்கை 2,000 கடல் மைல்களுக்கு மேல் முன்னெடுக்கப்பட்டுள்ளத. மேலும் ரஷ்ய பசிபிக் கடற்படையின் குரோம்கி மற்றும் ஃபோடி க்ரைலோவ் போன்ற ஆதரவு கப்பல்களும் இந்த ரோந்து நடவடிக்கையில் இணைந்திருந்தன.

ரஷ்ய அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனமான டாஸ் (TASS) குறிப்பிடுகையில், ரோந்து நடவடிக்கையின் நோக்கம் ‘இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல், கடல்சார் பகுதியைக் கண்காணித்தல் மற்றும் ரஷ்ய – சீன கடல்சார் பொருளாதார வசதிகளைப் பாதுகாத்தல் ஆகும்.

இது குறித்து சீன இராணுவ விவகார நிபுணரான ஷாங் ஜுன்ஷே தெளிவுப்படுத்திய போது, இந்த முதல் கூட்டு நீர்மூழ்கி ரோந்து சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு உயர் மட்ட மூலோபாய நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

மேலும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பில் இருப்பது அதிக தொழில்நுட்ப நிபுணத்துவத்தை மட்டுமல்ல, ஆழமான பரிமாற்றங்களையும் கோருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த பயிற்சிகள் குறித்து சர்வதேச அளவில் கேள்விகள் எழுப்பப்பட்டபோது, சீன தேசிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கர்னல் ஷாங் சியாகாங கூறுகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பயிற்சிகள் இரு இராணுவங்களின் வருடாந்திர ஒத்துழைப்பு திட்டத்தின் ஒரு பகுதி என்று தெளிவுபடுத்தினார்.

அவை எந்த மூன்றாவது தரப்பினருக்கும் எதிராக இயக்கப்படவில்லை, அல்லது தற்போதைய சர்வதேச அல்லது பிராந்திய சூழ்நிலையுடன் தொடர்புடையவை அல்ல என்றார். ஆனால், உலகளாவிய வல்லரசு போட்டி தீவிரமடையும் வேளையில், இந்த விளக்கங்கள் பெரும்பாலும் வெறும் சம்பிரதாயமாகவே பார்க்கப்படுகின்றன.

உலக அரசியல் சூழலும், இந்தியாவின் நிலைப்பாடும்

இந்தியா மீது 50 வீத இறக்குமதி வரியை அமெரிக்க விதித்துள்ள நேரத்தில் இந்தக் கூட்டு ரோந்து நடவடிக்கை நடந்துள்ளது.

மொஸ்கோவுடனான புது டில்லியின் நீண்டகால பாதுகாப்பு கூட்டாண்மை மற்றும் ரஷ்ய எண்ணெயின் தொடர்ச்சியான கொள்முதல் ஆகியவற்றைக் குறிப்பிட்டே அமெரிக்கா இந்த வரிகளை விதித்தது.

இது, ஒரு காலத்தில் அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாகக் கருதப்பட்ட இந்தியாவின் மீது, டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் எப்படி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துகிறது.

உக்ரைனில் ரஷ்யாவின் குண்டுவீச்சுக்களை நிறுத்த அழுத்தம் கொடுக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ‘இந்தியாவுடன் ஆக்கிரோஷமான பொருளாதார நெம்புகோலை‘ பயன்படுத்தினார் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை, இந்தியாவின் இறையாண்மைக்கு நேரடியாக ஒரு சவாலாக அமைந்தது. அமெரிக்கா தனது ‘முதலில் அமெரிக்கா’ (America First) கொள்கையின் கீழ், தனது சொந்த நலன்களுக்காக எந்தவொரு நாட்டின் மீதும் பொருளாதார அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தயங்காது என்பதை இது தெளிவாகக் காட்டியுள்ளது.

இந்த நெருக்கடியான தருணத்தில், பிரதமர் நரேந்திர மோடி, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவுக்குச் சென்றார்.

இந்த விஜயமானது 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் சீனாவுக்குச் செல்லும் முதல் விஜயம் ஆகும். இந்த மாநாட்டில் அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் பிற தலைவர்களுடன் இணைந்து விரிவான கொள்கை ரீதியிலான கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டிருந்தார்.

அமெரிக்காவின் நடவடிக்கையால் ஏற்பட்ட அதிருப்தி, இந்தியா – ரஷ்யா – சீனா உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

மறுபுறம் அமெரிக்கா – ரஷ்யா – சீனா இடையிலான போட்டியில் இந்தியா சிக்கிக்கொள்ளாமல், தனது சொந்த தேசிய நலன்களைப் பாதுகாக்க ஒரு நடுநிலையான பாதையை உருவாக்குவது அவசியமாகிறது.

ஜப்பானின் இக்கட்டான நிலை

இந்த புவிசார் அரசியல் சூழலில், ஜப்பான் ஒரு பெரும் சவாலை எதிர்கொள்கிறது. அதன் பாதுகாப்பு அமெரிக்காவைச் சார்ந்துள்ளமையினால், அதன் நம்பகத்தன்மை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

அதே நேரத்தில், பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியான சீனா, ஒரு ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக மாறியுள்ளது.

எனவே ஜப்பானின் போருக்குப் பிந்தைய வளர்ச்சிக்கு உதவிய அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்குமுறை தற்போது முடிவை நோக்கி செல்லும் போது, அடுத்து வரவிருப்பது என்ன என்பது நிச்சயமற்றதாகியுள்ளது. அந்த யதார்த்தமான உண்மையை ஜப்பானிய தலைவர்கள் உணர்ந்துள்ளனர்.

இத்தாலிய தத்துவஞானி அன்டோனியோ கிராம்சி குறிப்பிட்டது போல, இது ஒரு ‘இடைக்காலம்’ (Interregnum). பழைய விதிகள் மறைந்துவிட்டன. புதியவை இன்னும் உருவாகவில்லை. டிரம்ப் நிர்வாகத்தின் வரிகள், அரசியல் தலைவர்களின் பகிரங்க கண்டனங்கள் மற்றும் புடினுக்கு அளித்த வரவேற்பு ஆகியவை உலகப் பாதுகாப்பு அமைப்பில் ஆழமான நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளன.

ஆகவே பொருளாதார காரணிகள் சீனாவைக் கட்டுப்படுத்தும் என்றோ, அல்லது அமெரிக்காவின் ஒப்பந்தக் கடமைகள் எப்போதும் நிலைத்திருக்கும் என்றோ ஜப்பானியக் கொள்கை வகுப்பாளர்கள் இனி கருத முடியாது.

இதற்குச் சான்றாக, 2023 ஆம் ஆண்டில் ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்து நீர் வெளியேற்றம் காரணமாக சீனா, ஜப்பானிய கடல் உணவுகளைத் தடை செய்தபோது, பொருளாதார நிர்ப்பந்தம் ஒரு யதார்த்தமாக மாறியது.

மேலும், அமெரிக்க இராணுவத் தளங்களுக்கான செலவை ஜப்பான் ஏற்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் டிரம்ப் வலியுறுத்துவது, அமெரிக்காவுடனான கூட்டணியின் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையை அதிகரிக்கச் செய்கிறது.

மாற்று வழிகளின் தேடலும், ஜப்பானின் எதிர்காலமும்

ஜப்பான் பல மாற்று வழிகளை ஆராய்ந்தாலும், எதுவும் முழுமையான தீர்வல்ல. தென்கிழக்கு ஆசியாவின் ‘பாதுகாத்தல்’ (Hedging) அமெரிக்காவுடன் பாதுகாப்பு உறவுகளையும், சீனாவுடன் பொருளாதார உறவுகளையும் பேணும் இந்த அணுகுமுறை, ஜப்பானின் அளவு மற்றும் வரலாற்று காரணங்களால் அதற்குப் பொருந்தாது.

ஜப்பான் தனது இராணுவச் செலவுகளை அதிகரித்தால், அதை சீனா ‘பாதுகாத்தல்’ (Hedging) என்று பார்க்காமல், சீனாவை அடக்கும் ஒரு முயற்சி (containment) என்று கருதும்.

ஹங்கேரியின் ‘இணைப்பு’ (Connectivity) ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உத்தரவாதங்கள் ஹங்கேரிக்கு உதவுவது போல, ஜப்பானுக்கு அந்த உத்தரவாதங்கள் இல்லை.

சீன கடற்படை பலமடையும்போது, அமெரிக்காவை பகைத்துக்கொள்வது ஜப்பானுக்கு மிகவும் ஆபத்தானது.

Switzerland

சுவிட்சர்லாந்தின் ‘ஆயுதமேந்திய நடுநிலைமை’ (Armed Neutrality). தன்னைச் சுற்றியுள்ள நட்பு நாடுகளால் சூழப்பட்டுள்ள சுவிட்சர்லாந்துக்கு இது பொருந்தும். ஆனால் ஜப்பான், சீனா மற்றும் வட கொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த அணுகுமுறை சாத்தியமற்றது.

இந்த யதார்த்தங்கள் ஜப்பானின் விருப்பங்களைக் கட்டுப்படுத்துகின்றன. அதன் மக்கள்தொகை சரிவு, புவியியல் பாதிப்பு மற்றும் சீனாவுடனான பொருளாதார சார்ந்திருக்கும் தன்மை ஆகியவை பெரும் சவால்களாகம்.

இருப்பினும், ஜப்பானுக்கு பல பலங்கள் உள்ளன. இது தொடர்ந்து உலகின் முதல் 10 பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும். அதன் தொழில்நுட்ப திறன்கள், ஜனநாயக நம்பகத்தன்மை மற்றும் மென் சக்தி (Soft Power) ஆகியவை முக்கியமானவை.

எனவே, ஜப்பான் ஒரு குறிப்பிட்ட எதிர்காலத்திற்குத் தயாராவதற்குப் பதிலாக, ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்திற்கு தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

இது கூட்டாண்மைகளின் தொகுப்பாகும். வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இடையே தேர்வு செய்வதை விடுத்து, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்த முடியும்.

இத்தகைய மூலோபாய நகர்வு அமெரிக்காவின் உதவி குறைந்தால், மாற்று வழிகளை உருவாக்க உதவும். உலகமயமாக்கலின் செயல்திறன் கொள்கைகளுக்குப் பதிலாக, விநியோகச் சங்கிலி பாதுகாப்பு, மூலோபாய இருப்பு மற்றும் முக்கியமான துறைகளில் உள்நாட்டு உற்பத்தித் திறன்களை அதிகரிக்க வேண்டும்.

விதியை வாங்குபவராக (Rule-Taker) இருப்பதை விடுத்து, புதிய உலக ஒழுங்கில் டிஜிட்டல் ஆளுகை மற்றும் உள்கட்டமைப்பு தரநிலைகள் போன்ற துறைகளில் புதிய விதிகளை உருவாக்கும் நாடாக ஜப்பான் செயல்பட வேண்டும்.

ரஷ்யா – சீனா கூட்டு நீர்மூழ்கி ரோந்து, வெறும் ஒரு இராணுவப் பயிற்சி மட்டுமல்ல. இது அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் வகையில், மொஸ்கோவும் பெய்ஜிங்கும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்துகின்றன என்பதற்கான தெளிவான சமிக்ஞையாகும்.

இந்த நடவடிக்கை, இந்தியாவின் மீது அமெரிக்கா விதித்த வரிகள் மற்றும் ஜப்பானின் பாதுகாப்பு குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுடன் இணைத்து பார்க்கும்போது, உலக அரசியல் அரங்கில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என்பதை உணர்த்துகிறது.

இந்தக் கூட்டுப் பயிற்சி, அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்குமுறை முடிவுக்கு வரக்கூடும் என்பதற்கான மற்றொரு அறிகுறி. இது,

இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு, தாங்கள் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிகள் மீது மட்டும் தங்கியிருக்க முடியாது என்ற பாடத்தை உணர்த்துகிறது.

இந்த இடைக்காலத்தில், ஜப்பானின் எதிர்காலம், அமெரிக்காவின் நம்பகத்தன்மை அல்லது சீனாவின் கருணையின் மீது பந்தயம் கட்டுவதில் இல்லை.

மாறாக, அது தனது சொந்த பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பல கூட்டணிகளை உருவாக்கி, தனது சொந்த மூலோபாயத்தை கவனமாக உருவாக்குவதில்தான் உள்ளது.

இது இந்தியாவின் எதிர்காலத்திற்கும் பொருந்தும். உலக வல்லரசுகளின் போட்டியில் சிக்காமல், தங்கள் நலன்களைப் பாதுகாத்து, புதிய உலக ஒழுங்கை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்க இந்த இரு நாடுகளுக்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

(லியோ நிரோஷ தர்ஷன்)

Share.
Leave A Reply

Exit mobile version