ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் கடந்த புதன்கிழமை திருத்தங்களின்றி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
சட்டம் நிறைவேற்றப்பட்ட தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு கிடைத்ததும் உடனடியாகவே அவர் தங்கியிருந்த கொழும்பு விஜேராம இல்லத்திலிருந்து வெளியேறுதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டிருந்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு வருகை தந்திருந்த பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், ஜோன்சன் பெர்னாண்டோ, ரோஹித்த அபேகுணவர்த்தன உள்ளிட்டவர்கள் உடனடியாகவே நாமல் ராஜபக் ஷவுக்கு அழைப்பெடுத்து விடயத்தினை தெரிவித்தனர்.
அதன்பின்னர், அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை, உடனடியாக விஜேராம இல்லத்திலிருந்து வெளியேறிச்செல்லக்கூடாது என்றும், மறுநாள் வியாழக்கிழமை காலையில் வெளியேறுமாறும் அன்புக்கட்டளை போட்டனர்.
அவர்களது உரையாடல் நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் தான் சீனத்தூதுவர் கீ சென்ஹொங் மறுநாளான வியாழக்கிழமை சந்திப்பதற்கு நேரில் வருகை தரவுள்ளார் என்ற தகவல் பரிமாற்றப்பட்டது.
இதனையடுத்து, மஹிந்த ராஜபக் ஷ தனது முடிவினை மாற்றி சீனத்தூதுவரின் சந்திப்பினை நிறைவு செய்ததன் பின்னர் தங்கல்லைக்குச் செல்வதாக தீர்மானித்தார்.
அத்துடன் தனது உடைமைகளை முழுமையாக விஜேராம இல்லத்திலிருந்து அகற்றுவதற்காக ஒருவார கால அவகாசத்தினையும் கோருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.
இதனையடுத்து கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை காலையிலேயே முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன, ஜோன்சன் பெர்னாண்டோ, சாகர காரியவசம், டி.வி.சாணக்க, இந்திக்க அனுருத்த, சி.பி.ரத்நாயக்க, உள்ளிட்ட பலரும் ஒன்றுகூடினர்.
இச்சமயத்தில் மஹிந்தவின் மூன்றாவது புதல்வர் ரோஹித்த ராஜபக் ஷ விஜேராமவிலிருந்து வெளியேறிச் சென்றிருந்தார். அதனையடுத்து, மஹிந்த ராஜபக் ஷவுடன் அங்கு பிரசன்னமாகியிருந்த அரசியல் பிரமுகர்கள் உரையாடலொன்றை தேநீர் விருந்துபசாரத்துடன் நடத்த ஆரம்பித்தனர்.
அப்போது, மஹிந்த தான் முதலில் உரையாடலை ஆரம்பித்தார். ‘ஏன் எல்லோரும் தொய்ந்துபோன முகத்துடன் இருக்கின்றீர்கள், என்ன பிரச்சினை என்று புன்னகையுடன் கேட்டார்.
அதற்கு ரோஹித்த அபேகுணவர்தன, ‘உங்களை விஜேராமவில் இருந்து வெளியேற்றுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையை எண்ணித்தான் கவலையாக இருக்கின்றோம்’ என்றார்.
அப்போது ஜோன்சன் பெர்னாண்டோவைப் பார்த்து, ‘ஜோனி உங்களுக்கு என்ன பிரச்சினை’ என்றார் மஹிந்த. ஜோன்சன் பெர்னாண்டோவும், ‘வீட்டை விட்டு வெளியேற்றுவது தான் பிரச்சினையான விடயமாக உள்ளது’ என்றார்.
அச்சமயத்தில் மஹிந்த, ‘என்னை வீட்டை விட்டு வெளியேற்றுவது தான் அரசாங்கத்துக்கு மகிழ்ச்சி என்றால் அதனைச் செய்யட்டும். நான் மகிழ்ச்சியாகவே இருக்கின்றேன். எனது சொந்த ஊருக்குப் போகப்போகின்றேன்’ என்று கூறு புன்னகைத்தார்.
அப்போது ஜோன்சன் பெர்னாண்டோ ‘நீங்கள் நாட்டில் போரை முடித்த தலைவர் என்பதைக்கூட….. என்று கூறி குறுக்கிட்டபோது, ‘ஜோனி உங்களுக்கு ஒன்று தெரியுமா, இந்த நேரத்தில் எனக்கொரு பழைய நினைவு வருகின்றது’ என்று குறிப்பிட்ட மஹிந்த,
‘பிரபாகரன் என்னை இந்த உலகத்திலிருந்து அனுப்பவே திட்டமிட்டார். நான் அப்போது அஞ்சவில்லை. ஆனால், கவனமாக இருந்தேன். அதன் பின்னர் கெப்பிற்றிக்கொல்லாவவில் 2006இல் குண்டுவெடிப்பு நடைபெற்ற தருணத்தில் நான் அங்கு நேரே சென்றிருந்தேன்.
‘குண்டு வெடிப்பு நடைபெற்ற அந்தப்பகுதியை பார்த்தேன். அப்போது தான் நாட்டில் குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டகவே கூடாது. இதற்கொரு முடிவுகட்ட வேண்டும் என்று அந்த இடத்திலேயே தீர்மானித்தேன். அதனை உங்களின் உதவியுடன் செய்து முடித்தேன். என்னை அனுப்ப வேண்டுமென்ற பிரபாகரன் எனக்கு முன்னதாகவே சென்றுவிட்டார்’ என்றார் மஹிந்த.
அனைவரும், மஹிந்தவின் மீள் நினைவுபடுத்தல் கதையை கேட்டுக்கொண்டிருந்த தருணத்தில், சீனத் தூதுவர் விஜேராம வளாகத்துக்குள் வந்துகொண்டிருக்கின்றார் என்ற தகவல் சொல்லப்பட்டது.
அச்சமயத்தில் பூங்கொத்துடன் வந்த சீனத்தூதுவர் நேரடியாகவே மஹிந்தவிற்கு கைலாகுகொடுத்து சுகநலன்களை விசாரித்தவாறு உரையாடலை ஆரம்பித்தார்.
அங்கே குழுமியிருந்தவர்களுக்கு முன்பதாக ஒரு பத்து நிமிடங்கள் வரையிலான உரையாடல் இடம்பெற்றதன் பின்னர் மஹிந்த ராஜபக் ஷவுக்கும், சீனத் தூதுவருக்கும் இடையில் பிரத்தியேக உரையாடலொன்று நடைபெற்றிருந்தது.
அதன்பின்னர், சீனத்தூதுவர் விஜேராமவில் இருந்து வெளியேறிச் சென்றார். அதனையடுத்து, சொற்ப நேரத்தில் மஹிந்தவும் அவரது துணைவியார் ஷிரந்தி ராஜபக் ஷவும் வெயியேறி தங்கல்லைக்குச் சென்றிருந்தனர்.
அதேநேரம், மஹிந்த வெளியேறும்போது ஆதரவாளர்களை அமைதியாக இருக்குமாறும், தான் சென்றுவருவதாகவும் கையசைத்தவாறே வெளியேறிருந்தமை குறிப்பிடத்தக்கது.