மீரிகம, பல்லேவெல பகுதியில் சிகை அலங்கரிப்பு நிலையமொன்றை சுற்றிவளைத்த போது,போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (14) சிகை அலங்கரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தலை சுற்றி வளைப்பின் போதே கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சிகை அலங்கரிப்பு நிலையத்தை நடத்திவந்த கல்ஏலிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சுற்றிவளைப்பின்போது, 300 கிராம் ஐஸ், 100 கிராம் ஹெரோயின், ஒரு மின்னணு அளவீட்டு சாதனம், விளையாட்டு துப்பாக்கி, பல்வேறு வடிவங்களில் பல கத்திகள், பல வங்கி அட்டைகள், 46,060 ரூபா பணத்தொகை, 3 கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஒரு மடிக்கணினி என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களின் மதிப்பு 7.5 மில்லியனுக்கும் அதிகமாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

துபாயில் மறைந்திருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள “கெமுனு” என்ற நபருடன் இணைந்து இந்த போதைப்பொருள் கடத்தல் மேற்கொள்ளப்பட்டது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

குறித்த நபர் மீரிகம, ஹாபிடிகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் துபாய்க்கு தப்பிச் செல்வதற்கு முன்பு, நாட்டில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share.
Leave A Reply

Exit mobile version