வன்னி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்படாத வகுப்பறை கட்டிடங்களினை நிறைவு செய்ய தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.

பிரதமரின் பாராளுமன்ற அலுவலகத்தில் தொழிலாளர் கட்சியின்  வன்னி மாவட்ட எம்.பி. யான காதர் மஸ்தான் மற்றும் பிரதிநிதிகள் சிலர்  பிரதமரை சந்தித்து வன்னி மாவட்டத்தின் கல்வி நடவடிக்கை, அக்கரைப்பற்று நுரைச்சோலை சவூதி அரேபிய வீட்டுத் திட்டம் மற்றும் விடுவிக்கப்படாமல் இருக்கும் குர்ஆன் பிரதிகள் தொடர்பாக கலந்துரையாடியபோதே பிரதமர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் காதர் மஸ்தான் எம்.பி. கூறுகையில்,

வன்னி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்படாத வகுப்பறை கட்டிடங்களை நிறைவு செய்தல் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கல்வி அமைச்சு ஆலோசனைக் குழு கூட்டத்திலும்  கலந்துரையாடப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக பிரதமரிடம் கூறியபோது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் இவ்வருட நிதிகளிலிருந்து வன்னி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்படாத வகுப்பறை கட்டிடங்களினை நிறைவு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யவும் உறுதியளித்தார்.

அத்துடன் அக்கரைப்பற்று நுரைச்சோலை சவூதி அரேபிய வீட்டுத் திட்டம் தொடர்பாக தாம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவும் நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடி இதனை முன்கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் விடுவிக்கப்பட்டாமல் சுங்கத்தில் தேங்கி இருக்கும் குர்ஆன் பிரதிகள் தொடர்பாகவும் கலாசார அமைச்சருடன் கலந்துரையாடி அதனை  விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதாக பிரதமர்  உறுதியளித்தார்.

வன்னி மாவட்ட கல்வி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை வவுனியாவில் நடத்த வேண்டும் என்று கோரிய போது விரைவாக அதற்கான திகதியை அறிவிப்பதாகவும் பிரதமர் உறுதியளித்தார் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version