காஸாவில் பலஸ்தீன பொதுமக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள வரலாற்றின் இடைக்காலப் பகுதியை ஒத்த சட்டவிரோத காட்டுமிராண்டித்தனத்தை அமெரிக்கா, இங்கிலாந்து,
ஐரோப்பிய மற்றும் அரபு சர்வாதிகாரிகள் ஆதரித்த வருகின்ற நிலையில் இஸ்ரேல் குறுத்த உலகளாவிய தீர்மானம் ஒன்றுபட்டதாகவே உள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலியர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையையும் தம்மோடு இணைத்துக் கொள்ள முன்னேறி வருகின்றனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பை இணைப்பது சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது. எவ்வாறாயினும் பலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்துவெளியேற்றிய பின்னர் பலஸ்தீன நிலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறி பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சக்தியால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நிறுவனமான இஸ்ரேல், அமெரிக்கா - இங்கிலாந்து- -ஐரோப்பா மற்றும் அரபு சர்வாதிகாரிகளால் ஆதரிக்கப்படுவதால் அனைத்து சட்டங்களையும் மீறலாம் என்ற நிலை அங்கு ஏற்கெனவே உருவாக்கப்பட்டு விட்டது.
இது எதிர்காலத்தில் பலஸ்தீன அரசொன்று அமைவதற்கான வாய்ப்பை திறம்பட அகற்றும் ஒரு நடவடிக்கையாகும்.
அந்த வகையில் 1967 ஆம் ஆண்டு ஆறு நாள் போரின் போது கைப்பற்றப்பட்ட மேற்குக் கரையை அல்லது அதன் சில பகுதிகளை இஸ்ரேலுடன் இணைப்பது பற்றி இஸ்ரேலிய அரசியல்வாதிகளால் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
அரபு மொழியில் அல்-தஃபா என்று அழைக்கப்படும் மேற்குக் கரை, ஜோர்தான் ஆற்றின் மேற்கே உள்ளது.
அதனால் தான் அந்தப் பகுதி அதன் பெயரைப் பெறுகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமுடன் சேர்த்து, இது 5,655 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
இது காஸாவை விட 15 மடங்கு பெரியது. இது 2,747,943 பலஸ்தீனர்கள் மற்றும் 670,000 இற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய வந்தேறுகுடிகளைக் கொண்டுள்ளது. அவர்களில் சுமார் 220,000 பேர் கிழக்கு ஜெருசலேமில் வாழ்கின்றனர்.
இது 11 ஆளுநர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஹெப்ரோன் அல்லது அரபு மொழியில் அல்-கலீல் சுமார் 842,000 குடியிருப்பாளர்களுடன் அதிக மக்கள் தொகை கொண்ட பிரதேசமாகும்.
ஜெருசலேம் 500,000, நப்லஸ் 440,000, ரமல்லா மற்றும் எல்-பைரே 377,000 மற்றும் ஜெனின் 360,000 சனத்தொகையுடன் ஏனைய பகுதிகளாக உள்ளன. சுமார் 700,000 இஸ்ரேலியர்கள் பலஸ்தீன பூமியில் சட்டவிரோத குடியேற்றங்களில் வாழ்கின்றனர்.
1947 ஐ.நா. ஒப்பந்தத்தின் கீழ், இப்போது மேற்குக் கரையில் உள்ள பெரும்பாலான பிரதேசம் பலஸ்தீன அரசின் ஒரு பகுதியாக மாறி இருக்க வேண்டும். பலஸ்தீனர்களை விரட்டியடித்த பின்னர் பலஸ்தீன நிலங்களில் இஸ்ரேல் அரசு நிறுவப்பட்டபோது பிரிவினை திட்டம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
ஒரு யுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜோர்தான் இப்பகுதியின் கட்டுப்பாட்டைகொண்டிருந்தது. 1950 இல் அதை தன்னோடு இணைத்ததும் கொண்டது.
1967 ஆம் ஆண்டு ஆறு நாள் போரின் போது இஸ்ரேல் இதை மீண்டும் ஆக்கிரமித்தது. 1970கள் மற்றும் 80களில் இஸ்ரேல் அங்கு குடியேற்றங்களை நிறுவியது. இது அரபு மக்களிடையே அதிருப்தியையும் சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பையும் தூண்டியது.
அரபு கிளர்ச்சிகள் 1987இல் காஸா பகுதியில் தொடங்கி மேற்குக் கரை வரை பரவின. ஜோர்தான் 1988 இல் தனது உரிமைக் கோரல்களைக் கைவிட்டது.
பலஸ்தீன விடுதலை அமைப்பு (பி.எல்.ஓ) அதிகாரத்தை ஏற்றது. 1993ல் பி.எல்.ஓ- அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இரகசிய சந்திப்புகள், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், மேற்குக் கரை மற்றும் காஸா பகுதியின் சில பகுதிகளில் பலஸ்தீனர்களுக்கு சுயாட்சியை வழங்குவதற்கான உடன்படிக்கைக்கும் வழிவகுத்தன.
நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் 1990 களில் இடைவிடாமல் தொடர்ந்தன. ஆனால், 2000 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புதிதாக தோன்றிய வன்முறைகளுக்கு மத்தியில் அவை முறிவடைந்தன.
2007 ஆம் ஆண்டில், முன்னணி பலஸ்தீன அமைப்புகளான ஹமாஸுக்கும் ஃபதாஹுக்கும் இடையிலான மோதல்கள் காஸா பகுதியின் கட்டுப்பாட்டை ஹமாஸ் கைப்பற்றுவதற்கும், மேற்குக் கரையின் கட்டுப்பாட்டை ஃபதாஹ் தலைமையிலான அவசர அமைச்சரவை பொறுப்பேற்கவும் வழிவகுத்தன.
2010 களில் ஃபத்தாஹ் ஆதிக்கம் செலுத்திய பலஸ்தீன அதிகார சபை மேற்குக் கரையின் நகர்ப்புற பலஸ்தீன பகுதிகளில் தன்னை ஒரு சுயாதீன அரசாங்கமாக நிலைநிறுத்த முயன்றது. அதே நேரத்தில், இஸ்ரேல் பிராந்தியத்தில் தனது குடியேற்ற நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது.
2022 ஆம் ஆண்டில் மேற்குக் கரையில் பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் ஏராளமான தாக்குதல்களை நடத்தியது. 2023 ஆம் ஆண்டில் இஸ்ரேல்- – ஹமாஸ் போர் தொடங்கியது முதல் இஸ்ரேலிய இராணுவம் மேற்குக் கரையில் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கியது மற்றும் அங்கு சுற்றி வளைப்பு சோதனைகளையும் அதிகரித்தது.
இஸ்ரேலிய யூத குடியேற்றத் தாக்குதல்கள் மேற்குக் கரையில், குறிப்பாக குடியேற்ற புற நகர் காவல் நிலையங்களுக்கு அருகில் தினசரி நிகழ்வாக மாறிவிட்டன. குடியேற்றவாசிகள் பலஸ்தீன சமூகங்களுக்கான வீதிகளைத் தடுத்துள்ளனர்.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கான அணுகலையும் தடுத்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில், அவர்கள் நீர் ஆதாரங்களை அழித்து, பலஸ்தீன மந்தை மேய்க்கும் மக்கள் பிரிவின் சமூகங்களுக்கான முக்கிய வளங்களை துண்டித்துள்ளனர்.
காஸா மீதான இஸ்ரேலின் கொடிய போரைத் தொடர்ந்து, இஸ்ரேலிய படைகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பலஸ்தீன நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.
இருப்பினும், இஸ்ரேலிய –பலஸ்தீன மோதலின் மையமாக மேற்குக் கரை உள்ளது. காஸா பகுதியுடன் இதை தங்கள் கற்பனையான அரசின் மையமாக பலஸ்தீனர்கள் கருதுகின்றனர்.
மிக வேகமாக அதிகரித்து வரும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் தாயகமாகவும் இது மாறி வருகின்றது. பிரிவு ‘சி’ பகுதியில் 230 இஸ்ரேலிய குடியேற்றங்கள் உள்ளன. அங்கு இஸ்ரேலிய சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. ஒஸ்லோ உடன்படிக்கையின் கீழ் இந்த பகுதி பெரும்பாலும் 1997 க்குள் பலஸ்தீன தேசிய அதிகார ஆணையத்திற்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை மதிக்க தவறிவிட்டது. மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானவை என்று சர்வதேச சமூகம் கருதுகின்றது.
2007 ஆம் ஆண்டில் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகத்தின் மதிப்பீட்டின் படி, மேற்குக் கரையின் சுமார் 40% பகுதி இஸ்ரேலிய உள்கட்டமைப்பால் உள்வாங்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது.
குடியேற்றங்கள், தடைகள், இராணுவத் தளங்கள் மற்றும் மூடிய இராணுவப் பகுதிகள் ஆகியவற்றைக் உள்ளடக்கியதே இந்த உள்கட்டமைப்பாகும். இங்குள்ள இயற்கை இருப்புக்களையும் மற்றும் அவற்றுடன் வரும் வீதிகளையும் இஸ்ரேல் தடுத்துள்ளது.
இது 1989ல் முன்னாள் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்ததிலிருந்து நடந்து வருவதைப் போல முஸ்லிம் நாடுகளை ஆக்கிரமித்து அழித்து முஸ்லிம்களை படுகொலை செய்யும் அமெரிக்க- -இங்கிலாந்து –ஐரோப்பிய புதிய உலக ஒழுங்கின் கீழ் இவை இடம்பெறுகின்றன.
இதுவரை பல முஸ்லிம் நாடுகள் தகர்த்து தள்ளப்பட்டுள்ளன. மில்லியன் கணக்கானவர்கள் அமெரிக்க- -பிரித்தானிய- ஐரோப்பிய மேற்கத்திய நாடுகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காஸாவில் நடைபெற்று வரும் இனப்படுகொலையும், மேற்குக் கரையை இஸ்ரேல் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையும் இந்த தொடர் போர்க்குற்றங்களின் அண்மைக்கால நிகழ்வுகளாகவே அமைந்துள்ளன.
லத்தீப் பாரூக்