வவுனியாவடக்கு வெடிவச்சகல்லு கிராம அலுவலர்பிரிவில் மகாவலி அதிகாரசபையின் பிடியிலுள்ள தமிழர்களின் பூர்வீக விவசாயக்காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டமை மற்றும் பெரும்பான்மை இனத்தவர்களால் 1000ஏக்கர்வரையில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்களுக்கு மகாவலி அதிகாரசபை மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மகாவலி “எல்”வலய வதிவிவத் திட்ட முகாமையாளருடன் கலந்துரையாடல் ஒன்று ஒழுங்கு செய்வதாகவும், அக்கலந்துரையாடலின் மூலம் குறித்த திரிவைச்சகுளத்தின் கீழான தமிழ் மக்களின் பூர்வீககாணிகள் பெரும்பான்மையினத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டமை மற்றும் அதனை அண்டிய பகுதியில் 1000ஏக்கர்வரையில் அடர்வனங்கள் பெரும்பான்மை இனத்தவர்களால் அழிக்கப்பட்ட பிணக்குகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுமென மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் தெரிவித்துள்ளர்.

குறித்த திரிவச்சகுளம் விவகாரம் தொடர்பில் மகாவலி அதிகாரசபையினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தலைமையிலான  குழுவினருக்குமிடையில் புதன்கிழமை (17) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போதே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வெடிவச்சகல்லு கிராமசேவகர்பிரிவிலுள்ள திரிவைச்சகுளத்தின்கீழான தமிழர்களின் பூர்வீக வயல்நிலங்கள் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் ஆக்கிரமிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களுக்கு குத்தகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மை இனத்தவர்கள் தற்போது நெற்பயிற்செய்கை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை அண்மையில்  குறித்த திரிவைச்ச குளத்தை அண்டியுள்ள சுமார் 1000ஏக்கர்வரையிலான  அடர்வனப்பகுதிகள்  பெரும்பான்மையினத்தவர்களால் அழிக்கப்பட்டு பாரிய ஆக்கிரமிப்பு முயற்சியொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் முறைப்பாட்டிற்கு அமைவாக கடந்த 07.07.2025திகதியன்று அன்று பெரும்பான்மை இனத்தவர்களின் ஆக்கிரமிப்பிலுள்ள தமிழர்களின் பூர்வீக திரிவச்சகுளம் மற்றும் பெரும்பான்மை இனத்தவர்களால் 1000ஏக்கர் வரையில் அழிக்கப்பட்டுள்ள திரிவச்ச குளத்தை அண்டிய பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த16.07.2025அன்று மகாவலி அபிவிருத்த அதிகாரசபையின் எல் வலய வதிவிடத் திட்ட முகாமையாளர் அலுவலகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் வெடிவச்ச கல்லு கிராமமக்கள் உள்ளிட்ட குழுவினர் நேரடியாகச் சென்று மகாவலி “எல்”வலய வதிவிடதிட்ட முகாமையாளருடன் கலந்துரையாடல் நடாத்தியிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் பெரும்பான்மை இனத்தவர்கள் பத்துப்பேருக்கு திரிவைச்சகுளம் பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு நெற்செய்கைக்காக மகாவலி அதிகாரசபையால் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினரால் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு பெரும்பான்மை இனத்தவர்களால் அழிக்கப்பட்ட அடர்வனப்பகுதி தொடர்பில் வனவளத் திணைக்களத்துடன் இணைந்து வழக்குக்குத் தொடரவுள்ளதாகவும் இதன்போது தெரியப்படுத்தப்பட்டது.

எனினும் இதுவரை மகாவலி அபிவிவிருத்தி அதிகாரசபையால் இவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இத்தகையசூழலில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு குத்தகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்ட திரிவைச்ச குளத்தின்கீழான வயல் நிலத்திலும், அதனை அண்டியுள்ள சட்டவிரோதமாக அடர் வனப்பகுதி அழிக்கப்பட்ட பகுதியிலும் தற்போது பெரும்போக நெற்செய்க்கான பண்படுத்தல் வேலைகளை பெரும்பான்மை இனத்தவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இத்தகையசூழலில் ஏற்கனவே கடந்த 16.07.2025அன்று மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் வழங்கப்பட்ட உத்தரவாதம் இதுவரை நிறைவேற்றப்படாமை குறித்து கேட்டறிவதற்கு 17.09.2025 இன்று மகாவலி  அதிகாரசபையின் “எல்”வலய திட்ட முகாமையாளர் காரியாலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்  துரைராசா ரவிகரன், வவுனியாவடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் தனுசன், துரைராசா தமிழ்செல்வன், நீதிக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதி கோசலை, வெடிவைச்சகல்லு கிராமத்தைச்சேர்ந்த மக்கள் உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தனர்.

இந்நிலையில் மகாவலி அதிகாரசபையின் “எல்”வலய வதிவிட திட்ட முகாமையாளர் அலுவலகத்தில் இல்லாத நிலையில், குறித்த அலுவலகத்தில் அடுத்த நிலையிலுள்ள அதிகாரியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடியிருந்தனர். இதன்போது இதுவரை திரிவைச்ச குளம் வயல்காணிகள் மற்றும், அதனைஅண்டியபகுதியில் இடம்பெற்ற பாரிய சட்டவிரோத காடழிப்பு தொடர்பில் மகாவலி அதிகாரசபை நடவடிக்கை எடுக்காமைகுறித்து இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் குறித்த பிணக்குத்தொடர்பில் ஆராய்வதற்கு மகாவலி “எல்”வலய திட்ட முகாமையாளருடன் பிறிதொருநாளில் கலந்துரையாடல் ஒன்றினை ஒழுங்குசெய்வதாகவும், குறித்த கலந்துரையாடலினூடாக இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தாம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது மக்களின் பூர்வீக விவசாயக்காணிகளை அபகரிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. அபகரிக்கப்பட்ட எமது மக்ககளின் காணிகள் விடுவிக்கும்வரை எமது தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோகிப்போம் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version