-இன்று அவரது 36ஆவது நினைவு தினம்
இலங்கையின் இன்னல்கள் பல பரிமாணம் கொண்டவை. எழுதப் புறப்பட்டால் இந்த ஜென்மம் போதாது. அதிலும் இலங்கைத் தமிழர்கள் இலங்கையின் சுதந்திரத்துக்குப் பங்களிப்பு செய்த பிறகு பல்வேறு புறக்கணிப்புகளுக்கு உள்ளானதும் 1983 உள்ளிட்ட அப்பாவித் தமிழர் மீதான வன்முறைகளும் போதாதென்று தமிழ் மக்களைக் காக்கப் புறப்பட்ட முக்கிய இயக்கமும் தமிழ் மக்களின் கல்விமான்கள் பலரை அவர்கள் ஒரு சில மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்தியமைக்காக மிருகத்தனமாக வேட்டையாடியமை மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
யாழ்ப்பாண நகரின் பிரபல ஆண்கள் பாடசாலையான சென். ஜோன்ஸ் கல்லூரி அதிபர் சீ.ஈ. ஆனந்தராஜன் 1985 ஜூன் 26 புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தனியார் பாடசாலையாக இருந்தும் பல ஏழை மாணவர்களுக்கு நன்கொடை வாங்காது அனுமதி வழங்கியவர். அதற்கும் பல மடங்கு அப்பால் சென்று செப்டெம்பர் 21, 1989 டாக்டர் ரஜினி திரணகம அவர் சேவையாற்றிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் முன்பாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதைவிடக் கொடுமை என்னவென்றால் மருத்துவ பீடத்தில் அவருடன் கடமையாற்றிய விரிவுரையாளர்கள் பலர், அவரிடம் கற்று அந்தக் கல்வியால் விசேட வைத்திய நிபுணர்களாக இன்றிருக்கும் அவரது மாணவர்கள் பெரும்பான்மையினர் அவரை நினைவு கூரக்கூட மறந்து விட்டார்கள்.
செப்டெம்பர் 21 1989 அவர் கொல்லப்பட்டு 36 ஆண்டுகள் ஆகின்றன. “முறிந்த பனை” என்ற பெயரில் ஈழத்தமிழரின் அவலத்தை அவரும் யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலரும் புத்தகமாக எழுதி வெளியிட்டதே டாக்டர் ரஜினி செய்த குற்றம்.
அந்த நூலில் இலங்கைத் தமிழருக்கு இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், புலிகள் உள்ளிட்ட சகல இயக்கங்களும் செய்த அநீதி பதிவு செய்யப்பட்டிருந்தது.
புலிகள் பற்றி மிகச் சில பக்கங்களில் மட்டுமே விமர்சிக்கப்பட்டிருந்தது. அவர் கொல்லப்பட்ட பின் அவரது சகாக்களான பௌதீகவியல் பேராசிரியர் சிறீதரன் தென்னிலங்கைக்கு வெங்காயம் ஏற்றிச் சென்ற லொறியில் நாட்டாண்மை போல் அழுக்கு லுங்கி (சாறம்) கட்டிக் கொண்டு புலிகளிடம் தப்பித்தார்; பேராசிரியர் ராஜன் ஹூலும் தப்பித்தார்.
மூத்த பேராசிரியரும் உலகம் முழுவதும் புகழ்பெற்றவருமான மனநல மருத்துவ பேராசிரியரான தயா சோமசுந்தரம் மௌனமாக்கப்பட்டார். அவரது மாணவன் நான். அவரின் கீழ் மருத்துவ மாணவனாக கற்றேன். யாழ்ப்பாணத்தின் போதனா வைத்தியசாலைக்கு வெளியே மனநல மருத்துவப் பிரிவு ஒரு வைத்தியசாலையில் இருந்தது.
அங்கு சென்று சில வாரங்கள் பேராசிரியரிடம் கற்கச் சந்தர்ப்பம் கிட்டியது. அப்போது வசந்தா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் வைத்தியசாலை சிற்றூழியர் டாக்டர் ரஜனியை பற்றி அழுதவாறு பேசினார்.
கணவரை இழந்து குழந்தையுடன் மனநோயாளியாக மாறியிருந்த தன்னை டாக்டர் ரஜனி தையல் இயந்திரம் வாங்கித் தந்து, தொழிலை கற்பித்து, நோயிலிருந்து மீளவைத்து வைத்தியசாலை சிற்றூழியராக தொழில் பெற உதவியதைக் கூறினார். இது வசந்தாவின் கதை மட்டுமே. இவ்வாறு பல அபலைத் தமிழ்ப்பெண்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றியவர் ரஜனி.
இந்த வசந்தி என்ற பெண்மணி மனநோயாளியாக எந்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்தாரோ அதே மனநோய் மருத்துவமனையில் சிற்றூழியராக நியமனம் பெற்று தான்பட்ட வேதனையில் இருக்கும் அதேபோன்ற மனநோயாளிகளுக்கு சேவை செய்கிறார். “ரஜனி மேடம், மேடம்” என்று அடிக்கடி கண்கலங்குவார்.
“தமிழ்ப் புலிகளுக்கும் இந்திய அமைதி காக்கும் படைக்கும் (IPKF) இடையே ஆயுத மோதல் உச்சத்தில் இருந்தபோது, எந்தவித எதிர்ப்பும் பொறுத்துக்கொள்ளப்படவில்லை. ரஜினி, ஆரம்ப காலத்தில் காயமடைந்த தமிழ் போராளிகளுக்கு சிகிச்சை அளித்திருந்தார்.
அப்போது அவர்கள் ஒரு சிறிய ஆயுதக் குழுவாகவே இருந்தனர். காலம் மாறியது. அவரது கொலையாளிகள், மருத்துவ பீடத்தில் பணி முடிந்து வீடு திரும்பும்போது, யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் அவருக்காகக் காத்திருந்தனர். 1989 செப்டெம்பர் 21 அன்று மாலை 4:00 மணியளவில் அவர் சுடப்பட்டார்.”
“அவர்கள் பின்னால் வந்து அவரது பெயரை அழைத்தனர். அவர் மிதிவண்டியில் உட்கார்ந்திருந்தபோது திரும்பிப் பார்த்தார். கண்ணாடியில் பார்த்தவர்கள், கொலையாளிகள் அவரது தலையை நோக்கி துப்பாக்கியைச் சுட்டபோது, அவர் தனது வெறும் கைகளால் நெற்றியை மறைக்க முயன்றதாகக் கூறுகின்றனர்.
அவர்கள் ஒரு பெண்ணுக்கு எதிராக அசாதாரணமான செயற்பட்டனர். அவர் தனது வெறும் கைகளால் மட்டுமே தனது தலையை குண்டுகளுக்கு எதிராக மறைக்க முயன்றார்.
அவர் தரையில் விழுந்த பிறகும், அவர்கள் மீண்டும் அவர் உயிர்பிழைக்க மாட்டார் என்பதை உறுதி செய்ய, அவரது தலையின் பிற்பகுதியில் இரண்டு தரம் சுட்டனர். தாங்கள் காயமடைந்தபோது இரக்கம் காட்டி சிகிச்சை அளித்த ஒரு பெண்ணுக்கு எந்தவித கருணையும் அவர்கள் காட்டவில்லை.
ரஜினி கொல்லப்பட்டபோது, ஆரம்பத்தில் அவரது கொலையாளிகள் யார் என்பதில் சில குழப்பங்கள் இருந்தன. சில பல்கலைக்கழக மாணவர்கள், இந்திய இராணுவத்தின் கைப்பாவைகளாக செயற்பட்ட தமிழ் ஆயுதக் குழுக்களைக் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்குக் காரணம், ரஜினி மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்தியத் தரப்புடன் அடிக்கடி மோதியிருந்தார்.
பின்னர், விடுதலைப் புலிகள் (LTTE) இதற்குப் பொறுப்பு என்பது தெளிவாகியது. ஆனால், ரஜினி தனது மரணத்தை முன்கூட்டியே உணர்ந்திருந்தார். அவர் நெருங்கிய ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், தனது கொலையாளிகள் யாழ்ப்பாண தாயின் வயிற்றில் வளர்ந்த மகன்களாக இருப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுவரை யாரும் அவரது கொலைக்கு அதிகார பூர்வமாக பொறுப்பேற்கவில்லை. கொலையாளிகளுக்கு நெருக்கமானவர்கள் பலமுறை குற்றத்தை வேறு திசைதிருப்ப முயற்சித்துள்ளனர்.
ஆனாலும் மக்கள் பொதுவாக கொலையாளிகள் யார் என்பதை அறிந்திருந்தனர், ஆனால் பலர் அதை பகிரங்கமாகக் கூறத் துணியவில்லை.
ரஜினி பற்றிய எந்தவொரு குறிப்பும், அவரது கணவர் தயாபால திரணகமவை குறிப்பிடாமல் முழுமையடையாது.
அவர்களது திருமணம் இனம், மதம், சாதி மற்றும் வர்க்கத்தைத் தாண்டிய ஒரு ஒன்றிணைவாக இருந்தது. தயாபால தன்னை ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலில் ஈடுபடுத்தியிருந்தார். அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடியவர்.
அதிகம் படிக்கப்பட்ட செய்தி: