நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பர் 21 ) வந்தடைந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் டினேஸ் கே திரிபாதி, திங்கட்கிழமை ( செப்டம்பர் 22) காலை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை சந்தித்துள்ளார்.

இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்த இந்திய கடற்படைத் தளபதி மற்றும் அவரது மனைவியை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன வரவேற்றுள்ளார்.

நேற்று (2025 செப்டம்பர் 22) காலை கடற்படைத் தலைமையகத்திற்கு சென்ற இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதிக்கு கடற்படையின் சம்பிரதாயபூர்வ மரியாதை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, இந்திய கடற்படைத் தளபதியை கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்றார்.

இந்த சந்திப்பின்போது, கடல்சார் பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு தொடர்பான மூலோபாய மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன.

மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய கடற்படைத் தளபதி இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத் தலைவர்களுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்த உள்ளார்.

மேலும் இலங்கை கடற்படையால் 12 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு – 2025 இல் பங்கேற்றதன் பின்னர், 2025 செப்டம்பர் 25ஆம் திகதியன்று நாட்டிலிருந்து புறப்பட உள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version