நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் மக்கள் வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பார்க்வீன் (Parkwind) மற்றும் பைல்ஸ்ட்ரெட் (Pilestredet) பகுதியில் இந்த இரண்டு குண்டுவீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

குண்டுகள் வெடித்ததைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த நோர்வே பொலிஸார், அந்த பகுதியைச் சுற்றி வளைத்து, தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அங்கு வெடிக்காமலிருந்த கையெறி குண்டு ஒன்றைக் கண்டுபிடித்து, செயலிழக்கச் செய்தனர். மேலும், அங்கு சுற்றித்திரிந்த சந்தேக நபர்கள் மூவரைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும், சம்பவம் நடந்த இடம், தற்போது முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஒஸ்லோ காவல்துறை தலைவர் பிரையன் ஸ்கொட்னஸ் (Brian Skotnes) தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிஸ்லெட் (Bislett) விளையாட்டு அரங்கத்திலிருந்து சிற்றூந்து ஒன்று சந்தேகத்துக்கு இடமாகச் சென்றதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளதாகவும், சிற்றூந்திலிருந்து இரு கையெறி குண்டுகளை அவர்கள் வீசிச் சென்றதாகவும் சம்பவத்தைக் கண்ட சிலர் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குண்டுகள் வெடித்த பகுதிக்குள் எவரும் நுழைய வேண்டாம் என்றும், குடியிருப்புகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அப்பகுதி மக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version