இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அபுதாபி ஸய்யத் கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு மின்னோளியில் நடைபெற்ற சுப்பர் 4 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றியீட்டியது.

இந்த முடிவை அடுத்து ஆசிய கிண்ண கிரிக்கெட்டிலிருந்து வெளியேறும் துர்பாக்கிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நோக்கத்துடன் இரண்டு மாற்றங்களுடன் இலங்கை அணி களம் இறங்கியது.

காமில் மிஷார, துனித் வெல்லாலகே ஆகிய இருவரும் நீக்கப்பட்டு சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டது.

இலங்கையைப் போன்றே பாகிஸ்தானுக்கும் இந்தப் போட்டி தீர்மானம் மிக்கதாக இருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை முதலில் தெரிவு செய்தது.

இதற்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மிகவும் சிரமத்திற்கு மத்தியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

குசல் மெண்டிஸ் (0), பெத்தும் நிஸ்ஸன்க (8) ஆகிய இருவரும் ஷஹீன் ஷா அப்றிடியின் பந்துவீச்சிலும் குசல் ஜனித் பெரேரா (15) ஹரிஸ் ரவூப்பின் பந்துவீச்சிலும் ஆட்டம் இழந்தனர். (43 – 3 விக்.)

மொத்த எண்ணிக்கை 58 ஓட்டங்களாக இருந்தபோது சரித் அசலன்க (20), தசுன் ஷானக்க (0) ஆகிய இருவரும் ஹுசெய்ன் தலாத்தின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர்.

தொடர்ந்து வனிந்து ஹசரங்க 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க இலங்கை அணி நெருக்கடியை எதிர்கொண்டது. (80 – 6 விக்.)

இந் நிலையில் கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரட்ன ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

கமிந்து மெண்டிஸ் 50 ஓட்டங்களைப் பெற்றதுடன் சாமிக்க கருணாரட்ன 17 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹுசெய்ன் தலாத் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

134 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்று மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

ஷிப்ஸதா பர்ஹான் (24), பக்கார் ஸமான் (17) ஆகிய இருவரும் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

எனினும், 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் 5 விக்கெட்கள் வீழ்ந்ததால் பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்கொண்டது.

சய்ம் அயூப் (2), அணித் தலைவர் சல்மான் அகா (5), மொஹம்மத் ஹரிஸ் (13) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

ஆனால், ஹுசெய்ன் தலாத், மொஹம்மத் நவாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது  விக்கெட்டில் பெறுமதிமிக்க ?? ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானுக்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

மொஹம்மத் நவாஸ் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 38  ஓட்டங்களுடனும் ஹுசெய்ன் தலாத் 32 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

துஷ்மன்த சமீர வீசிய 18ஆவது ஓவரில் மொஹம்மத் நவாஸ் 3 சிக்ஸ்களை விளாசியமை குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Share.
Leave A Reply

Exit mobile version