கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

பரப்புரை நடைபெறும் இடத்திற்கு விஜய் வந்ததிலிருந்து சனிக்கிழமை இரவு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் வேகவேகமாக நடந்தேறின.

முன்னதாக, கரூரில் பரப்புரை செய்யும் இடத்திற்கு அனுமதி கோரி, தவெக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில், 27.08.2025 அன்று மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி கோரப்பட்டிருந்தது.

ஆனால், அதேசமயம், கரூர் வேலுச்சாமிபுரத்தில் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு விஜய் பரப்புரை மேற்கொள்வார் என தவெகவின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

கரூரில் பரப்புரை மேற்கொள்வதற்கு முன்பாக நாமக்கல்லில் விஜய் பரப்புரை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாமக்கல் கே.எஸ். திரையரங்கம் அருகே காலை 8.45 மணிக்கு விஜய் பரப்புரை மேற்கொள்வார் என, அக்கட்சி சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நாமக்கல், கரூர் என இரண்டு இடங்களிலும் திட்டமிடப்பட்ட நேரத்தில் விஜயால் பரப்புரை மேற்கொள்ள முடியவில்லை.

நாமக்கல்லில் விஜய் பரப்புரை மேற்கொள்ளும் இடத்துக்கு அவரது வாகனம் மூலம் வந்தடையவே மதியம் சுமார் 2.00 மணியானது.

அதாவது, திட்டமிடப்பட்ட நேரத்தைவிட சுமார் 5 மணிநேரம் தாமதம். அங்கு சுமார் 20 நிமிடங்கள் பேசிய விஜய், அங்கிருந்து கரூர் புறப்பட்டார்.

இரவு வந்து சேர்ந்த விஜய்

கரூரில் விஜய் நண்பகல் 12 மணிக்கு பரப்புரை மேற்கொள்வார் என கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவர் வந்து சேர இரவு 7.40 மணியாகிவிட்டது.

ஆனால், காலை 11 மணியிலிருந்தே அந்த இடத்தில் கூட்டம் கூட ஆரம்பித்ததாக, கூட்ட நெரிசல் குறித்து பேட்டியளித்த தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் தெரிவித்தார்.

11 மணியிலிருந்தே கூடிய கூட்டம் ஒருபுறமும், விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்ட இடத்திலிருந்து சேர்ந்த கூட்டம் ஒருபுறமும் என, பரப்புரை நடந்த இடத்தில் ஏராளமானோர் கூடியதாக டிஜிபி வெங்கட்ராமன் தெரிவித்தார்.

அதேசமயம், ஏடிஜிபி டேவிட்சன், காலை 10 மணியிலிருந்தே அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியதாக தெரிவித்தார்.

கரூர் கூட்ட நெரிசல்

இரவு சுமார் 7.00 மணியளவில் பரப்புரை நடைபெறும் இடத்திற்கு விஜய் வந்து சேர்ந்தார்.

தன் பரப்புரையை தொடங்கிய விஜய், சுமார் 20 நிமிடங்கள் பேசினார். தன் பேச்சுக்கு நடுவே அங்கு சென்ற ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.

அவர் பேசியபோதே, ஒருசிலர் மயக்கம் அடைந்ததையும் நேரலை காட்சிகளில் காண முடிந்தது.

விஜயே தண்ணீர் பாட்டில்களை குழுமியிருந்த மக்களை நோக்கி எறிந்தார்.

கூட்ட நெரிசல், ஆம்புலன்ஸ் சத்தம் என பல்வேறு விஷயங்களால் விஜய் தன் பேச்சை 2-3 முறை நிறுத்த வேண்டியிருந்தது.

மேலும், தன் உரையை முடித்துக்கொண்டதும், கூட்டத்தின் நடுவே காணாமல் போன சிறுமி ஒருவரின் பெயரைக் கூறி, அவரை கண்டறிந்து, பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பின், சுமார் 7.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் விஜய். கரூரில் இருந்து கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு விஜய் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றார்.

நிமிடத்திற்கு நிமிடம் மாறிய காட்சிகள்

ஆனால், விஜய் பரப்புரை செய்யப்படும் இடத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அப்பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் செய்தி வந்துகொண்டிருந்தது.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 10க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சுமார் 8.30 மணியளவிலேயே கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகத் தொடங்கின.

கரூர் அரசு மருத்துவமனைக்கு கரூர் மாவட்ட ஆட்சியர், திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் சென்றனர்.

இதனிடையே, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என, பல்வேறு அரசியல் தலைவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

கரூர் கூட்ட நெரிசல், விஜய் கரூர் பரப்புரை

இரவு 8.35: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமைச்சர் மா. சுப்பிரமணியனையும் மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.

அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ஏடிஜிபியிடமும் பேசியிருக்கிறேன்.

பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என பதிவிட்டிருந்தார்.

இரவு 10.57: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், இதுகுறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என தன் எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார்.

மேலும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிவாரணமும் வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இரவு 11.15: சென்னை வந்திறங்கிய விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.

கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.” என பதிவிட்டிருந்தார்.

இரவு 11.52: கரூரில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான விபரங்களை தெரிந்துகொள்ள, தொடர்பு கொள்ள வேண்டிய கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி மைய எண்களை (04324 256306, வாட்ஸ் அப்: 7010806322) மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இரவு சுமார் 12.19: கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி, மரணம் விளைவிக்கும் செயல் செய்தல், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நள்ளிரவு சுமார் 01.00 மணி: செய்தியாளர்களை சந்தித்த பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், “சம்பவம் நடந்தவுடன் 2,000 போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தவெக முதலில் இரண்டு குறுகிய இடத்தை கேட்டார்கள். பத்தாயிரம் பேர் தான் வருவார்கள் என்று அனுமதி கேட்டார்கள்.

அதன்படி, 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தவெக கோரிக்கை ஏற்று அனுமதி அளிக்கப்பட்டது. 12 மணிக்கு கூட்டம் நடப்பதாக அறிவித்துவிட்டு கால தாமதமாக நடந்தது. விஜய் வருவதற்கு காலதாமதம் ஆனதால் கூட்டம் அதிகமானது.” என தெரிவித்தார்.

செப். 28, காலை சுமார் 6.37: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்த வீடியோவை தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டிருந்தார்.

முன்னதாக முதலைமைச்சர் ஸ்டாலின் இன்று காலைதான் கரூர் புறப்படுவார் என தகவல் வெளியான நிலையில், நேற்றிரவு 12.30 மணியளவிலேயே அவர் கரூர் புறப்பட்டு அதிகாலையிலேயே அங்கு வந்தடைந்தார்.

மேலும், கரூர் அரசு மருத்துவமனைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், சசிகலா உள்ளிட்ட பலரும் வருகை தந்தனர்.

, காயமடைந்தவர்களிடம் நிலவரத்தைக் கேட்டறியும் மு.க. ஸ்டாலின்

காலை சுமார் 7.00 மணி: செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், “நேற்று இரவு 7.45 மணி அளவில் அதிகாரிகளுடன் பேசிக்கொடிண்ருந்தபோது கரூரில் அரசியல் பிரசாரத்தில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தது.

உடனடியாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அனுப்பினேன். அடுத்ததாக மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு அவரை அனுப்பி வைத்தேன்.

அடுத்தடுத்து மரணச்செய்தி அதிகமானதால் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் மற்றும் டிஜிபியை அனுப்பி வைத்தேன்.” என தெரிவித்தார்.

மேலும், மூத்த அமைச்சர் எ.வ வேலுவுடன் தலைமை செயலகத்தி்ல் ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டார்.

கூட்ட நெரிசலில், குழந்தைகள் 10 பேர், பெண்கள் 16 பேர், ஆண்கள் 13 பேர் உயிரிழந்ததாக ஸ்டாலின் தெரிவித்தார்.

“ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டதில் இத்தனை பேர் இறந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இனிமேல் இதுபோன்று நடக்கக்கூடாது.” என்றார்.

விஜய் கைது செய்யப்படுவாரா என செய்தியாளர் ஒருவர் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

அப்போது அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அதற்கு தான் உயர் நீதிமன்றத்தினுடைய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படிருக்கிறது. அந்த ஆணையம் விசாரித்து முழுமையாக சொல்லும். இதற்கிடையில், நீங்கள் கேட்பது போல அரசியல் நோக்கத்தோடு எதையும் நான் சொல்ல விரும்பவில்லை. மீண்டும் மீண்டும் இதை தான் சொல்லப்போகிறேன்.” என்றார்.

இதனிடையே, துபையில் இருந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்றிரவே புறப்பட்டு இன்று காலை சென்னை வந்தடைந்து, அங்கிருந்து கரூர் வந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு, பின்னர் இன்று காலையே மீண்டும் துபை புறப்பட்டார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version