கொழும்பு பெய்ர ஏரிக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையில் விமான சேவை இன்று (வெள்ளி) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

பெய்ர ஏரியை விமான தளமாகக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் இந்த விமான சேவை முன்னெடுக்கப்பட உள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுக மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்தப் புதிய சேவையை சினமன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது. தொடக்கப் பயணமாக செஸ்னா 208 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, கொழும்பு சினமன் லேக்சைடு இறங்குதளத்தை சென்றடைந்தது.

இந்த முதல் பயணத்தில், துறைமுக மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதிஅமைச்சர் ஜனிதா ருவான் கொடிதுவாக்கு, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க, சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் சுனில் ஜயரத்ன, மற்றும் பல்வேறு சிறப்பு அதிதிகள் பங்கேற்றனர்.

விமானத்தை கேப்டன் இந்திக பிரேமதாச இயக்க, இசுரு முனசிங்க துணை விமானியாக இணைந்திருந்தார். உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையை மேம்படுத்த முடியும் என அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு வரைவாக பயணம் செய்வதற்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த சேவை பயனளிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

நீரில் தரையிறக்கக்கூடிய இலகு ரக விமானங்கள் இந்த சேவைக்காக பயன்படுத்தப்பட உள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version