பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை (மலையக அதிகார சபை) சட்டம் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதியுடன் ஏழு வருடங்களாகின்றன. கடந்த காலங்களில் அதிகார சபையை வலுப்படுத்தி பெருந்தோட்ட சமூகத்துக்கு உரிய அபிவிருத்திகளை முன்னெடுக்காமைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அரசியல் நெருக்கடிகள் ,மற்றும் மலையகக் கட்சிகளின் ஒற்றுமையின்மை போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டாலும் தற்போது அதிகார சபையை கலைப்பது தொடர்பான அறிவித்தல்கள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அதை தடுத்து நிறுத்தும் செயற்பாடுகளும் மிகவும் மந்த கதியிலேயே செல்கின்றன.
2018 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட இந்த சபையானது நட்டத்தில் இயங்கும் நிறுவனங்ககளின் பட்டியலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் உள்ளடக்கப்பட்டது. இச்செயற்பாடுகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்றிருந்தன. வணிக நோக்கமற்ற அதே வேளை நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை கலைக்கும் இந்த யோசனை ஜனாதிபதியின் பரிந்துரைப்பாகும். அதற்கமைய பிரதமரின் செயலாளரின் தலைமையில் அமைக்கப்பட்ட விசேட குழுவானது அடையாளம் காணப்பட்ட 160 நிறுவனங்களில் 33 நிறுவனங்களை கலைத்து விடுவதற்கு தீர்மானித்து அந்த பட்டியலை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது.
அந்த 33 நிறுவனங்களில் புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையும் அடங்கியுள்ளது. இத்தகவல்கள் வெளியானவுடன் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் இந்த செயற்பாட்டுக்கு எதிராக அறிக்கைகள் உரையாடல்கள் மாத்திரமே வெளிப்பட்டன. மலையக சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களும் அதிகார சபையை கலைக்கும் யோசனையை அரசாங்கம் கைவிட வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.
பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் மலையக அதிகார சபை வந்தாலும் அமைச்சர் சமந்த வித்யாரட்னவோ அல்லது இராஜாங்க அமைச்சரோ அதிகார சபை கலைக்கப்படமாட்டாது என உறுதியாக இதுவரை தமது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இது குறித்து பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரட்னவிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பாராளுமன்றத்தில் இன்னும் பதில் அளிக்கவில்லை.
எனினும் இந்த முடிவு குறித்து அமைச்சரவையில் மறுபரிசீலனை செய்யப்படும் என்ற கதைகளும் அமைச்சு வட்டாரங்களில் உலாவினாலும் அது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பது கேள்விக்குறியாகும். இதற்கு அவர்கள் தயங்குவதற்கு பிரதான காரணம் இந்த யோசனை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் கொண்டு வந்ததாகும். அமைச்சரவையில் ஜனாதிபதியால் கொண்டு வரப்பட்ட ஒரு யோசனை அல்லது தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யும் படி கோரப்போவது யார்? எனவே மலையக அதிகார சபையை கலைப்பதா வேண்டாமா என்ற முடிவை ஜனாதிபதியைத் தவிர வேறு எவரும் எடுக்க முடியாது என்பதே யதார்த்தம்.
மலையக சமூக அபிவிருத்திக்காக பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட மலையக அதிகார சபையை வலுப்படுத்தும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு இல்லை என்றால் குறித்த அதிகார சபை யாருக்காக உருவாக்கப்பட்டதோ அந்த சமூகத்தின் மீதும் அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை என்பது தான் அர்த்தம். இவ்விடயத்தை மலையகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே சுட்டிகாட்டவில்லை. மலையக அதிகார சபை குறித்து ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன என யாரும் அவரிடம் கேள்வி எழுப்பவில்லை. ஜனாதிபதி செயலகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பவில்லை. இந்நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் செயற்பாட்டாளருமான ம.திலகராஜ், மலையக அதிகார சபையை தொடர்ந்து நடத்தி செல்வதை அரசாங்கம் உறுதிபடுத்த வேண்டும் என்பதை வலிறுத்தி பொது மக்களின் கையெழுத்துகளை சேகரிக்கும் செயற்பாட்டை இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆரம்பித்துள்ளார்.
இது தொடர்பாக அட்டனில் ஊடக சந்திப்பொன்றையும் அவர் முன்னெடுத்திருந்தார். அதில் மலையக அதிகார சபை தொடர்பில் அவர் முன் வைத்திருந்த பிரதான நான்கு கோரிக்கைகள் முக்கியமானவை.
பெருந்தோட்டப் பிராந்தியந்துக்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையானது கலைக்கப்படும் அரச நிறுவனங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
அத்தகைய நீக்கத்திற்கான தீர்மானத்தினை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.
பெருந்தோட்டப் பிராந்தியந்துக்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையை மறுசீரமைப்பின்பேரில் அதிகாரக் குறைப்பு செய்தல் கூடாது.
அதிகார சபையை தொடர்ந்து உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில் எதிர்வரும் 2026 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் போதுமான நிதியினை ஒதுக்கீடு செய்வதுடன் அதனூடாக அபிவிருத்தி நடவடிக்கைபனை முன்னெடுத்தல் வேண்டும்.
மேற்படிக் கோரிக்கைகளை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு நிறைவேற்ற வேண்டுமேன இம்மனுவில் கையொப்பமிட்டடு பொதுமக்கள் மனுவாக கையளிக்கத் திட்டமிட்டுள்ளதாக மலையக அரசியல் அரசங்கம் கூறியுள்ளது.
எதிர்வரும் 10 திகதி அளவில் உத்தியோகபூர்வமாக மனுவை கையளிக்க உள்ள நிலையில் இந்த நோக்கத்தில் ஆர்வமுள்ள அமைப்புகள் முன்வந்து மக்கள் கையெழுத்துக்களைப் பெற்று தருவதற்கு ஏதுவாக மேற்படி மனுவின் மாதிரியை சமூக வலைத் தளங்களிலும் அரசியல் அரசங்கம் வெளியிட்டுள்ள அதே வேளை மலையக சமூகம் மீது அக்கறை கொண்ட சகலரும் பொது மக்களின் கையொப்பங்களைப் பெற்று இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்குமாறும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மேற்படி கோரிக்கையில் நான்காவது விடயம் முக்கியமானது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதில் மலையக சமூகம் மற்றும் மலையக அபிவிருத்திக்காக என்ன முன்மொழிவுகள் முன்வைக்கப்படப்போகின்றன என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஏனெனில் இவ் அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டத்தில் மலையக சமூகம் மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் தொடர்பில் கூறப்பட்ட விடயங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதில் தொழிலாளர்களின் வேதன விவகாரம் இன்று வரை பேசப்படவில்லை.
ஆனால் கடந்த வரவு செலவு திட்டத்தில் மலையக அதிகார சபைக்கு மூல தன செலவு என ஐந்து மில்லியன் (ஐம்பது இலட்சம்) ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. அதிகாரசபை ஒன்றுக்கு ஒதுக்கப்பட்ட மிகக்குறைந்த தொகையாக அது விளங்குகின்றது. வரவு செலவு திட்டத்தில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் போது பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு அமைச்சுக்கும் ஒதுக்கீடுகள் செய்யப்படும். அதன் போது மேற்படி அமைச்சின் கீழ் இயங்கும் மலையக அதிகார சபையும் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும் என்பது முக்கிய விடயம். எனவே அதிகார சபையை கலைப்பதா வேண்டாமா ? அல்லது அது குறித்து பேசாதிருத்தல் நல்லதா என்ற கேள்விகளோடு இருக்கும் ஜனாதிபதி வரவு செலவு திட்டத்தில் அது பற்றி பேசக்கூடும். அதிகார சபையால் ஒன்றும் செய்வதற்கில்லை என்றால் ஜனாதிபதி அதை கடந்து செல்லலாம்.
மலையக அதிகார சபையை கலைக்க மாட்டோம் என பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அண்மையில் தெரிவித்திருந்தார். அப்படியானால் அதைக் கொண்டு எதிர்காலத்தில் என்ன செய்வதாக உத்தேசம் என்பதற்கும் அவர் பதில் கூற வேண்டும். அதிகார சபையை கலைக்காமல் அதை பாரிசவாத நிலையில் அப்படியே வைத்திருப்பதிலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை.
எது எப்படியானாலும் அதிகார சபை விவகாரம் இப்போது ஜனாதிபதியின் கைகளிலேயே உள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.