இஸ்ரேல்- ஹமாஸ் போர் முடிவுக்கு வரும் அறிகுறி தென்படாத போதும் காசாவையும் ஹமாசையும் அழிப்பதன் மூலம் போரை நிகழ்த்திக் காட்ட இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார்.

அத்தகைய திட்டமிட்டலின் ஓரங்கமாகவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் இஸ்ரேலிய பிரதமரும் முன்வைத்துள்ள சமாதான உடன்படிக்கை காணப்படுகின்றது.

உடன்படிக்கையின் உள்ளடக்கங்கள் இஸ்ரேலுக்கு வாய்ப்பாகவும், ஹமாஸுக்கு எதிரானதாகவும் அமைந்திருக்கின்றது.

அத்தகைய போர் நிறுத்த உடன்பாடு சாத்தியப்படாத போது இஸ்ரேல்- அமெரிக்க எச்சரிக்கையோடு காசா நிலப்பரப்பு மீண்டும் ஓர் அழிப்பை எதிர்கொள்ள தயாராகின்றதாகவே தெரிகிறது.

இக்கட்டுரையும் டொனால்ட் ட்ரம்ப்- நெதன்யாகு வகுத்திருக்கும் போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னால் உள்ள அரசியலை தேடுவதாக உள்ளது.

உடன்படிக்கையின் 20 அம்ச உள்ளடக்கத்தை முதலில் சுருக்கமாக கண்டு கொள்ள முயற்சிப்பது அவசியமானது.

குறிப்பாக காசா, அதன் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லாத, தீவிரவாதமற்ற மண்டலமாக இருத்தல், காசா மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மீளமைக்கப்படும்.

மேற்படி முன்மொழிவுக்களை இரு தரப்பும் ஒப்புக்கொண்டால், போர் உடனடியாக முடிவுக்கு வரும். பணயக் கைதிகளை விடுவிப்பதற்குத் தயாராவதற்கு இஸ்ரேலியப் படைகள் ஒப்புக்கொண்டபடி எல்லைக் கோட்டிற்கு பின்வாங்குவர்.

வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல் உட்பட அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும், இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை பகிரங்கமாக ஏற்றுக்கொண்ட 72 மணி நேரத்திற்குள், ஹமாஸ் உயிருடன் உள்ள மற்றும் இறந்த அனைத்து யூத பணயக்கைதிகளையும். சடலங்களையும் ஒப்படைக்க வேண்டும்.

அனைத்து பணயக்கைதிகளும் ஹமாஸால் விடுவிக்கப்பட்டவுடன், இஸ்ரேல் 250 ஆயுள் தண்டனை கைதிகளையும், 2023 அக்டோபர் 7 க்குப் பிறகு தடுத்து வைத்திருக்கும் 1,700 பாலஸ்தீனர்களையும் விடுவிக்கும்.

இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். ஒவ்வொரு இறந்த இஸ்ரேலிய பணயக் கைதியின் உடல்களை வழங்கினால் பதிலுக்கு இஸ்ரேல் இறந்த 15 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைக்கும்.

பணயக் கைதிகள் விடயம் நிறைவு பெற்ற பின்னர், அமைதியான சகவாழ்வை ஏற்படுத்தும் விதத்தில் ஆயுதங்களை கைவிடும்; ஹமாஸ் உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.

காசாவை விட்டு வெளியேற விரும்பும் ஹமாஸ் உறுப்பினர்கள் வேறு நாடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்படுவர்.

இவை ஏற்றுக் கொள்ளப்பட்டதும் முழுவீச்சிலான உதவிகளை காசாவுக்குள் அனுமதிப்பதுடன் உட்கட்டுமான பணிகள் தொடங்கப்படும்.

அதனை ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய சர்வதேச நிறுவனங்களும் கண்காணித்துக் கொள்ளும்.

19 ஜனவரி 2025 உடன்பாட்டின் கீழ் ரபா போக்குவரத்துக்குத் திறக்கப்படும். அரசியல் சார்பற்ற பாலஸ்தீன குழுவின் தற்காலிக இடைக்கால நிர்வாகத்தின் கீழ் காசா நிர்வகிக்கப்படும்.

இதனை மேற்பார்வை செய்ய சர்வதேச மட்டத்தில் அமைதிக்கான சபை நிறுவப்படும். காசாவை மீண்டும் கட்டியெழுப்பவும், உற்சாகப்படுத்தவும் டிரம்ப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்படும்.

பங்கேற்கும் நாடுகளுடன் சிறப்பு பொருளாதார வலயம் நிறுவப்படும். இந்த நிர்வாகத்தில் ஹமாஸ் பங்கேற்காது.

அதன் பதுங்குகுழிகள், ஆயுதங்கள் அழிக்கப்படும். ஹமாஸ் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடாதென பிராந்திய நாடுகள் உறுதியளிக்க வேண்டும். காசாவை கண்காணிப்பதற்கு அமெரிக்கா தலைமையில் விசேட படைப்பிரிவு நிறுவப்படும்.

இப்போர் நிறுத்த உடன்பாட்டின் உடனடி நீண்ட கால விளைவுகளை விளங்கிக்கொள்வது அவசியமானது.

முதலாவது, ஐக்கிய நாடு சபையிலும், சர்வதேச அரங்கிலும், இஸ்ரேலிய தரப்பும், பிரதமர் நெதன்யாகுவும் அதிகம் அவமதிக்கப்படுகின்ற நிலை எழுச்சி பெற்றுவருகிறது.

இதனைச் சரி செய்வதற்கான உபாயம் ஒன்று அவசரமாகத் தேவைப்படுகிறது. அதுவே போர் நிறுத்த உடன்பாட்டின் உடனடித் தேவையாக தெரிகிறது.

உடன்பாடு அறிவிக்கப்பட்டவுடன் கட்டாரிடம் நேரடியாக நெதன்யாகு மன்னிப்பு கோரியதன் அடிப்படையும் அதுவாகும்.

இதன் பிரகாரம் போர் நிறுத்த உடன்பாட்டை இஸ்ரேலுக்கு சாதகமாக வரைந்து கொண்டு ஹமாஸை அத்தகைய போர் நிறுத்தத்துக்கு உடன்பட வைப்பதை ஓர் அரசியலாக நகர்த்தி, அதனூடாக உலகத்தின் பார்வையை தனது பக்கம் திருப்புவதற்கு நெதன்யாகு திட்டமிட்டுள்ளார்.

அத்தகைய திட்டமிடலின் ஓரங்கமாகவே போர்நிறுத்த உடன்பாடு பற்றிய பேச்சுக்கள் முதன்மைப்படுத்தப்பட்டதோடு காசா நிலப்பரப்பில் உள்ள மக்கள், போர் நிறுத்த உடன்பாட்டின் அவசியத்தை அதிகம் வலியுறுத்திவருவதற்கான செய்திகளை முதன்மைப்படுத்துகிறார்.

ஏறக்குறைய காசா முழுமையாக அழிக்கப்பட்ட நிலையில் போர் நிறுத்த உடன்பாடு எதற்கானது என்ற கேள்வி பிரதானமானதாகவே உள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலுமே போர் நிறுத்த உடன்படிக்கையை முன்மொழிந்துள்ளனர். இது ஒரு வகையில் நெதன்யாகு குறிப்பிடுவது போல் அமெரிக்காவின் போரை இஸ்ரேல் நிகழ்த்துவதாக புரிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

காசா நிலப்பரப்பு என்பது அமெரிக்காவின் நிலப்பரப்பாகவே விளங்குகிறது. இத்தகைய சூழலிலே ரொனால்ட் ட்ரம்ப்பின் எதிர்பார்க்கையும் இஸ்ரேலின் எதிர்பார்க்கையும் ஒன்றாகவே உடன்பாட்டில் குவிந்துள்ளன.

இரண்டாவது உடன்பாட்டின் மூலம், காசா நிலப்பரப்பை முழுமையாக ஹமாசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது பிரதான உத்தியாகத் தெரிகின்றது.

இராணுவ ரீதியில் ஹமாசை அழிக்க முடியாத இஸ்ரேல் அரசியல் ரீதியிலாவது அழித்து விடுவதற்கான உத்தியோடு இத்தகைய நகர்வை திட்டமிட்டு இருக்கின்றது.

உலகத்தின் எதிர்ப்புகளும், அமெரிக்க செனட்சபை மற்றும் காங்கிரஸின் எதிர்ப்புகளும் மத்தியில் அமெரிக்காவின் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் பிரதானமானதாக காணப்படுகிறது.

அதனாலேயே நெதன்யாகு அமெரிக்காவின் தலைமையில் இருப்பது போன்றும் அமெரிக்காவின் கட்டளைக்கு இசைந்து செயற்படுவது போன்றும் காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றார்.

அதனாலேயே அமெரிக்காவை நோக்கி அவரது விஜயம் அமைந்திருப்பது ஏனைய நாடுகளை விட அமெரிக்காவோடு உறவு வைத்துக் கொள்வதில் நெதன்யாகு அதிக கவனம் கொண்டவராக காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.

மூன்றாவது இஸ்ரேல், ஹமாஸ் போரானது, நீடித்திருப்பது மட்டுமின்றி, இஸ்ரேலிய தரப்பின் உளவுத்துறையின் பலவீனம் யூத பணயக் கைதிகளை மீட்க முடியாத துயரத்தை கொடுத்திருக்கின்றது.

அடிப்படையில் 2023 ஒக்டோபரில் ஹமாஸ் மேற்கொண்ட படுகொலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்த போதும், இஸ்ரேலியர்களின் அணுகுமுறை, காசாவை முழுமையாக துடைத்து அழிப்பதற்கான நடவடிக்கையாகவே போர் அமைந்திருக்கின்றது.

சிறுவர்கள், குழந்தைகள், தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் வயோதிபர்கள் என்ற வேறுபாடு இன்றி அனைவரையும் போரில் அழித்தொழிப்பது என்பது இஸ்ரேலியர் தரப்பில் உத்தியாகவே காணப்படுகிறது.

பாலஸ்தீனர்களை அழிப்பதன் மூலமே யூத- பாலஸ்தீன முரண்பாட்டை தீர்த்துக் கொள்ள முடியும் என நெதன்யாகுவும் இஸ்ரேலிய தரப்பும் கருதுகின்றனர்.

இஸ்ரேலிய மக்கள் பெருமளவானவர்கள் ஹமாஸ் மீதான தாக்குதலையும் காசா மீதான போரையும் அங்கீகரிப்பதாகவே தெரிகின்றது.

அதேநேரம் தொடர்ச்சியாக நெதன்யாகு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். நெதன்யாவுக்கு, தனது ஆட்சியை தக்கவைப்பதற்கு இப்போரை நிகழ்த்த வேண்டும் என உணரப்படுகின்றது.

போர் நிறுத்த உடன்படிக்கையும், அதில் அமெரிக்காவின் வகிபங்கை அதிகரிக்கச் செய்வதும், நெதன்யாகு தனது ஆட்சியை தக்க வைப்பதற்கான செயற்பாடாகத் தெரிகிறது.

ஏறக்குறைய ஹமாஸ் மீதான போர் என்பது நெதன்யாகுவின் ஆட்சிக்கான போராகவே அல்லது ஆட்சியை பாதுகாப்பதற்கான போராகவே காணப்படுகிறது.

நான்காவது, போர்நிறுத்த உடன்பாட்டின் உள்ளடக்கங்கள் ஹமாசை அழிப்பதற்கானதாகவே தெரிகின்றது.

அமெரிக்காவை இப்போது பகுதியளவில் ஈடுபடுத்துவதை விடுத்து, முழுமையாக ஈடுபாடு அடையச் செய்வதில் இந்த உடன்படிக்கை கவனம் செலுத்தியுள்ளது.

போர்நிறுத்த உடன்பாட்டை மேற்கொள்ளுகின்ற சந்தர்ப்பத்தில், வெள்ளைமாளிகையில், இரு தலைவர்களும் ஊடகங்களை சந்திக்கின்ற போது, வெளிப்படுத்திய கருத்துக்கள் அவ்வாறானதாகவே காணப்படுகிறது.

இதன் பிரகாரம் ஹமாஸ் மீதான போரை நிகழ்த்துவதற்கு அமெரிக்கா எப்போதும் உதவும் என்ற உறுதிமொழியை, டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்கள் மத்தியில் முன்வைத்தார்.

போர் நிறுத்த உடன்பாட்டை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளத் தவறுகின்ற பட்சத்தில், நெதன்யாகுவின் அணுகுமுறையை அமெரிக்கா ஏற்றுச் செயற்படும் என அக்கருத்தை மேலும் விளங்கிக் கொள்ள முடியும்.

அப்படியானால் இப்போரின் நேரடி வகிபங்கை அமெரிக்க எடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் நெதன்யாகு அதிகம் கவனம் கொண்டிருந்தார்.

போர் நிறுத்த உடன்படிக்கையின் உள்ளடக்கமாக வெளிப்படையாக சமாதானம் பற்றிய உரையாடலை கோடிட்டுக் காட்டினாலும் அடிப்படையில் போர் நிறுத்த உடன்பாடு அமெரிக்காவின் இஸ்ரேலுடனான உறவையும் ஆயுத பரிமாற்றத்தையும் போருக்கான ஒத்துழைப்பையும் உத்தரவாதப்படுத்துகின்ற அம்சமாகவே காணப்படுகிறது.

எனவே போர்நிறுத்த உடன்பாட்டில் அடையப்படக்கூடிய வாய்ப்புகள், அமெரிக்கா, இஸ்ரேல் தரப்பின் நலன்களை பாதுகாப்பதாக மட்டுமே தென்படுகிறது.

அது காசா மக்களையும், ஹமாசையும் நிரந்தரமாகவே அந்நியப்படுத்த முனைகிறது. காசாவை பாதுகாப்பதற்காக உருவாக்கப்படவில்லை.

ஏதோ ஓர் அடிப்படையில் போரை நிகழ்த்தவும் அழிவுகளை ஏற்படுத்தவும் அதனூடாக காசா நிலப்பரப்பை முழுமையாக இஸ்ரேல் வசப்படுத்தவும் உடன்படிக்கை வழிவகுத்துள்ளது.

உடன்படிக்கை இஸ்ரேல்- அமெரிக்காவிற்கானதே அன்றி காசா மக்களுக்கானதாக தெரியவில்லை. இது ஹமாஸை முழுமையாக அழிப்பதற்கான உத்தியைக் கொண்டது.

ரீ.கணோசலிங்கம்

Share.
Leave A Reply

Exit mobile version