முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் தற்போது அரசாங்கத்தில் பதவி வகிப்பதால் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படப் போவதில்லை. காரணம் இவர்கள் கொலையுடன் தொடர்புடையவர்கள் அல்ல என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புபுதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இலக்காகும். குற்றப்புலனாய்வு திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று நம்புகின்றோம். விசாரணைகளுக்கு தடையற்ற சகல காரணிகளும் அவ்வப்போது ஊடகங்களுக்கு வழங்கப்படும்.

முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் தற்போது அரசாங்கத்தில் பதவி வகிப்பதால் இந்த விசாரணைகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படப் போவதில்லை. காரணம் இவர்கள் கொலையுடன் தொடர்புடையவர்கள் அல்ல. எவ்வாறிருப்பினும் இது குறித்த மேலதிக தகவல்களை பொலிஸ் பேச்சாளர் ஊடாக வெளிப்படுத்துவதே சிறந்ததாகும் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version