இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவராக இருக்கும் சி.வி.கே. சிவஞானம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஓர் ஊடகச் சந்திப்பில், இந்தியாவை நோக்கி ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

சி.வி.கே. சிவஞானம் அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த அரச நிர்வாகியாக இருந்தவர்.

ஆனால், அரசியலில் அவர் அதிகம் மின்னாத நட்சத்திரம்.

பாராளுமன்றத் தேர்தல்களில் அவரால் வெற்றிபெற முடியவில்லை.

2013 வடக்கு மாகாணசபை தேர்தலில், வெற்றி பெற்ற அவர் சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.

அந்த மாகாணசபை, செயலிழந்து 7 ஆண்டுகள் ஆகியும் சபை முதல்வர் பதவி அவருடன் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

மாவை சேனாதிராஜாவின் திடீர் மறைவினால், ஒரு விபத்தாக கட்சியின் பதில் தலைவர் பதவிக்கு அவரைக் கொண்டு வந்து விட்டது.

இப்போது அவர் தமிழ் அரசுக் கட்சியை வழிநடத்தும் பதவியில் இருக்கிறார், ஆனால், அவர் கட்சியை வழிநடத்துகிறாரா அல்லது பிறரால் அவர் வழிநடத்தப்படுகிறாரா என்ற சந்தேகம் உள்ளேயும் வெளியேயும் இருக்கிறது.

அது இந்தப் பத்தியின் விடயப் பரப்பு அல்ல.

சி.வி.கே.சிவஞானம், தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு எழுப்பியிருக்கின்ற கேள்விதான் முக்கியமானது, முதன்மையானது.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு, மாகாண சபைகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்துமாறு- தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு இந்தியாவிடம் வலியுறுத்தவில்லை என்றும் அவ்வாறு ஒன்றுபட்டு கோரிக்கை விடுத்தால், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா கூறியிருந்தார்.

அவரது அந்த கருத்தை மையப்படுத்தியே, சி.வி.கே. சிவஞானம் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

“13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் நிற்கிறோம், ஒற்றுமையாக தான் இருக்கிறோம், சைக்கிள் கட்சி மட்டும் தான் தனியாக நிற்கிறது” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனாலும், “இந்தியா ஏன் திரும்பத் திரும்ப ஒற்றுமையாக வாருங்கள் என்று சொல்கிறது? நாங்கள் ஒற்றுமையாக தானே இருக்கிறோம்” என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

பாரம்பரியம் மிக்க தமிழ் கட்சியான தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் பதவியில் இருக்கின்ற சி.வி.கே. சிவஞானம், இந்தக் கேள்வியை இந்தியாவிடம் நேரடியாக எழுப்பி இருக்கலாம்.

இந்தியத் தூதுவரை சந்திக்கின்ற சந்தர்ப்பங்கள் அவருக்கு அவ்வப்போது கிடைக்கிறது.

இல்லாவிட்டால் இந்தியத் தூதுவரை அடிக்கடி சந்திக்கின்ற, கட்சியின் செயலாளர் சுமந்திரன் ஊடாகவேனும் இந்த கேள்வியை அவர் அனுப்பி இருக்கலாம்.

அவர் ஏன் இதனை பகிரங்கமாக எழுப்ப வேண்டி வந்தது என்பது கேள்விக்குரியது.

ஒற்றுமையாக வாருங்கள், கேளுங்கள் என்று இந்திய தூதுவர் குறிப்பிட்டதன் அர்த்தம், அவருக்கு புரியவில்லையா? அல்லது அது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறதா?

இந்திய தூதுவரின் கருத்து முற்று முழுதாக ஏற்றுக்கொள்ளக் கூடியதா என்ற கேள்வி இருக்கிறது.

ஏனென்றால் தமிழர் தரப்பு 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒரு முழுமையான தீர்வாக என்றைக்கும் ஏற்றுக் கொண்டதில்லை.

அதனை தீர்வுக்கான அடிப்படையாகக் கூட யாரும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.

ஏனென்றால் தமிழர் தரப்பு அதற்கு அப்பாற்பட்ட சமஷ்டி தீர்வை எதிர்பார்க்கிறது, வலியுறுத்துகிறது.

அதுவே அதன் அபிலாஷையாக இருந்து வந்திருக்கிறது.

அப்படியிருக்க, 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளுமாறு இந்தியத் தூதுவர் கேட்கிறாரா? அல்லது, அதனை ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்வதாக கூறி அதனை நடைமுறைப்படுத்துமாறு கேட்டச் சொல்கிறாரா என்பது கவனிக்க வேண்டிய விடயம்.

இந்தியத் தூதுவரின் நிலைப்பாடு 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூறுவதை மட்டும் மையப்படுத்தியதாக இருந்தால் அது பிரச்சினைக்குரிய விடயம் அல்ல.

ஆனால், அதனை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக் கொண்டு, இந்த கோரிக்கையை முன்வைப்பது சிக்கலானது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பொறுத்தவரையில் அது என்றைக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒரு தீர்வாக ஏற்றுக் கொண்டதில்லை.

அதனை ஏற்றுக் கொள்ளாத நிலையில், அதனை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவது அல்லது அதனை கோருவது தவறானது என்ற நிலைப்பாட்டில் அந்தக் கட்சி இருக்கிறது.

அதனால் தான் அந்த கட்சி 13 ஆவது திருத்தம் தொடர்பான வலியுறுத்தல்களில் இருந்து எப்போதும் ஒதுங்கியே இருந்து வந்திருக்கிறது.

அதற்காக அந்த கட்சி 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை எதிர்க்கவில்லை.

அதன் ஊடாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைகளில் பங்கேற்பதில் இருந்து விலகி இருக்கவும் தயாராக இல்லை.

மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டால் அந்த கட்சி அதில் பங்கேற்கவும் தயாராகவே இருக்கிறது.

ஆனால், இந்தியாவின் நிலைப்பாட்டை பொறுத்தவரையில் -தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு வரவேண்டும் என கூறுகின்ற போது, ஒரு கட்சி மாத்திரம் விலகியிருப்பது அதனால் விரும்பப்படவில்லையா?

அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை விலக்கி வைத்து விட்டு ஒரு தீர்வை கொண்டு வரும் முயற்சியில் இறங்குவதற்கு அது தயாராக இல்லையா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது.

அனைத்து தரப்புக்களும் ஒன்றிணைந்து வர வேண்டும் என இந்தியா கூறுவதை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பங்கேற்பை அது வலியுறுத்துகிறது, அது அவசியம் என எதிர்பார்க்கிறது என்றும் புரிந்து கொள்ள முடியும்.

1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தம் கையெத்திடப்பட்டு, 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது- அதன் ஊடாக உருவாக்கப்பட்ட வட-கிழக்கு மாகாணசபைக்கு தேர்தல் நடத்துவதற்கு இந்தியா தலைகீழாக நின்றது.

அந்த தேர்தலில், தான் எதிர்பார்த்த – தன்னால் கையாளப்படும், தமிழ்க் குழுக்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக, பிறதரப்புகளை தேர்தலில் பங்கேற்காமல் தடுப்பதற்கு இந்தியா தனது படைகளை முழுமையாக பயன்படுத்தியது என்பது வரலாறு.

அந்த தருணத்தில் விடுதலைப் புலிகள் ஒரு பக்கம் இருக்க, 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரித்த மற்றைய தரப்புகளை கூட இந்தியா அலட்சியம் செய்தது.

அவற்றைப் புறக்கணித்துவிட்டு 13 ஆவது திருத்தச் சட்டத்தை -மாகாண சபைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா முழுமையான முயற்சிகளை முன்னெடுத்திருந்தது.

ஆனால், இப்பொழுது ஒரு தரப்பு மாத்திரம் விலகி இருக்கிறது என்ற காரணத்தை வைத்துக் கொண்டு, இந்தியா இந்தப் பொறுப்பில் இருந்து நழுவ முனைகிறதா என்ற கேள்வி எழுகிறது.

ஒன்றில் இந்தியா இதனை சாட்டாக வைத்துக் கொண்டு தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முற்படுகிறது என எடுத்துக் கொள்ள வேண்டும்.

“மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்துமாறு நாங்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அரசாங்கத்திடம் கூறுகிறோம், அவர்கள் அதற்கு ‘ஆம்’ என்று கூறிவிட்டுச் செல்கிறார்கள், ஆனால், ஒன்றையும் செயற்படுத்துகிறார்கள் இல்லை” என, முன்னர் இந்திய தூதுவர் விசனத்துடன் கருத்தை வெளியிட்டிருந்தார்.

கிட்டத்தட்ட இந்தியா திரும்பத் திரும்ப வலியுறுத்தியும் மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்த செய்வதில் வெற்றி பெற முடியாமல் போனதன் விளைவாக கூட, ‘ஒற்றுமையாக வாருங்கள்’ என இந்தியா கூறியிருக்கலாம்.

ஏனென்றால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதற்கு முன்வராது என்பது இந்தியாவுக்கு தெரியும்.

இந்த விடயத்தையிட்டு, சி.வி.கே.சிவஞானம் சினம் கொண்டதற்கு காரணம் இருக்கிறது.

“நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக தான் நிற்கிறோம், 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்கிறோம்.

ஆனால், இந்தியா ஏன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்ப்பதை மட்டும் மையப்படுத்திக் கொண்டு தலையிடாமல் இருக்கிறது” என அவர் சினம் கொண்டிருக்கிறார்.

இது தமிழ் அரசுக் கட்சியின் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறது.

அப்படிப் பார்த்தால், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்கிறதா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி பல விடயங்களில் முரண்பாடான முடிவுகள்- செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டிருந்தாலும், தமிழரசுக் கட்சி என்னதான் பெரும்பான்மை தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றதாக கூறிக் கொண்டிருந்தாலும், இந்தியா போன்ற நாடுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை புறக்கணித்துவிட்டு செல்வதற்கு தயாராக இல்லை என்று தெரிகிறது.

இதுதான், சி.வி.கே. சிவஞானம் இந்தியாவை நோக்கி சினத்தை வெளிப்படுத்தியதற்குக் காரணமாகத் தெரிகிறது.

-கபில்-

Share.
Leave A Reply

Exit mobile version