“இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா (ஹமாஸ்) இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வந்த போர் தற்போது முடிவுக்கு வந்து உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலையீட்டால் கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதையடுத்து முதல் கட்டமாக இரு தரப்பினருக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடங்கி இருக்கிறது.
காசாவில் ஹமாஸ் பிடியில் இருந்த இஸ்ரேல் பிணைக்கைதிகளில் 20 பேர் மட்டுமே உயிரோடு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் இருந்து சுமார் 1,900 பாலஸ்தீனர்கள் கைதிகளை இஸ்ரேல் ரிலீஸ் செய்ய வேண்டும் இதுதான் போர் நிறுத்தத்தின் முதற்கட்ட நிலை.
போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து இன்று காலை முதற்கட்டமாக இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 7 பேரை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்தனர்.
எய்டன் மோர், கலி, கிவ்பெர்மன் உள்ளிட்ட பிணைக்கைதிகளும் இதில் அடங்குவர். இவர்கள் அனைவரையும் ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் கையில் கொடியுடன் உற்சாகத்தை வெளிபடுத்தினார்கள். இஸ்ரேல் ராணுவம் அவர்களுக்கு உடற்தகுதி சோதனை மேற்கொண்டபின்னர்,
தங்கள் சொந்த நாட்டுக்கு சென்று குடும்பத்துடன் இணைய இருக்கிறார்கள்.இதற்கிடையே 2ஆவது கட்டகமாக 13 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர்.
இதனால் உயிரிடன் உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர்.
இவர்கள் இஸ்ரேல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றனர்.பிணைக்கைதிகளுக்கு ஈடாக பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க இருக்கிறது.
போர் நிறுத்த நடவடிக்கைகள் தொடங்கி இருப்பது இரு நாட்டு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காசாவில் உயிருக்கு பயந்து முகாம்களில் தங்கி இருந்த பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்துக்கு திரும்ப தொடங்கி இருக்கிறார்கள்.எகிப்தில் ஷர்ம் அல்-ஷேக் நகரில் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் காசா அமைதி உச்சி மாநாடு நடக்கிறது.
இந்த மாநாட்டில் முக்கிய மத்தியஸ்தர்களான எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்- சிசி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டில் இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக எகிப்து செல்வதற்கு முன்பாக இஸ்ரேல் சென்றுள்ளார்.
இஸ்ரேல் புறப்படுவதற்கு முன்னதாக டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது:-காசாவில் போர் முடிவுக்கு வந்து விட்டது. காசாவில் மறு கட்டமைப்பை உருவாக்க விரைவில் அமைதி வாரியம் அமைக்கப்படும். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த உதவியதற்காக கத்தார் பெருமைப்பட வேண்டும்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மிக சிறப்பாக பணியாற்றினார்.தற்போது அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த நிகழ்வு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த தருணத்தை எல்லோரும் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து உள்ளனர்.
இதுவரை இப்படி நிகழ்ந்தது இல்லை. இந்த போர் நிறுத்த விவகாரத்தில் முக்கிய பங்காற்றுவது பெருமை அளிக்கிறது.
இதுவரை எப்போதும் நடந்திராத ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். இஸ்ரேலுக்கு பிறகு நாங்கள் எகிப்துக்கு செல்கிறோம்.
மிகவும் சக்தி வாய்ந்த பெரிய நாடுகள், பணக்கார நாடுகள், பிற நாடுகள் தலைவர்கள் அனைவரையும் சந்திக்க போகிறோம். அவர்கள் அனைவரும் இந்த ஒப்பந்தத்தில் அங்கம் வகிப்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.”,