உணவுப்பாதுகாப்பு, உணவு பதப்படுத்தல் செயன்முறை, ஏற்றுமதி மற்றும் துறைமுக நடவடிக்கைகள் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்து இலங்கை – அமெரிக்கப் பிரதிநிதிகள் கூட்டாக ஆராய்ந்துள்ளனர்.

அமெரிக்க சிந்தனை ஆய்வு அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் வர்த்தகம், வணிகம், உணவுப்பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இவ்வாரம் கொழும்பில் நடைபெற்றது.

இப்பிரதிநிதிகள் குழுவில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான ஆர்வம் கொண்ட அமெரிக்காவின் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் உள்ளடக்கியிருந்தனர்.

இச்சந்திப்பின்போது உணவுப்பாதுகாப்பு, உணவு பதப்படுத்தல் செயன்முறை, ஏற்றுமதித்துறை மற்றும் துறைமுக நடவடிக்கைகள் என்பன தொடர்பில் அப்பிரதிநிதிகள் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

இதன்போது எதிர்வருங்காலங்களில் இணக்கப்பாடு எட்டப்படவிருக்கும் வர்த்தக ஒப்பந்தங்கள், முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் வர்த்தக வாய்ப்புக்கள் தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்க அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார். அத்தோடு உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், சந்தை நிலைவரங்களை ஒருங்கிணைப்பதற்கும் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் தொடர்பிலும் அவர் எடுத்துரைத்தார்.

அதுமாத்திரமன்றி இலங்கையுடனான வர்த்தக மற்றும் ஏற்றுமதிசார் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்திக்கொள்வது குறித்தும், முதலீடுகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version