மலையக மக்களுக்கான காணி உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக பாராளுமன்றத்தில் ஆவணமொன்றை முன்வைப்பதற்கு நான் தயார். அதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் ஏனைய மலையக அரசியல் தலைவர்களும் ஒற்றுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஏனைய கட்சித் தலைவர்களின் நிலைப்பாடுகளையும் தெரிந்து கொள்ள முடியும் என இலங்கை இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தலைமையகத்தில் செவ்வாய்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்  இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மறைந்த தலைவர்களான சௌமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் சந்திரசேகரன் காலங்களில் கட்டப்பட்ட சுமார் 30 000 வீடுகளில் 15 000 வீடுகளுக்கு  காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. வீடுகளுக்கு மாத்திரமின்றி கோவில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தளங்களுக்கும் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. எனவே இந்த விடயத்தில் யார் செய்தது எனப் பெயர் பதித்துக் கொள்ளும் போட்டிகளை கைவிட வேண்டும். தற்போது மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் கூட அமைச்சரவையில் இல்லை என்பது துரதிஷ்டவசமான ஒரு விடயமாகும்.

எனவே அமைச்சுப்பதவி இல்லாவிட்டாலும் வரவு – செலவு திட்டத்தில் மலையக மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்திக் கொள்வதற்கேனும் முயற்சிக்க வேண்டும். முன்னாள் நல்லாட்சி காலத்தில் 4 ஆண்டுகளுக்கு பயனாளிகளுக்கு காணி அனுமதிப்பத்திரம் (Permit) வழங்கப்பட்டது. அதன் பின்னர் அது காணி உரித்தாக்கப்பட்டது. எனினும் நாம் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்த காலப்பகுதியில் 1000 காணி உரிமங்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றையே தற்போதைய பெருந்தோட்ட பிரதி அமைச்சர் , அட்டனிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயனாளிகளிடம் கையளித்திருந்தார்.

ஆனால் இந்த அரசாங்கம் பொறுப்பேற்று ஓராண்டு கடந்தும் வெறும் 237 காணி உறுதிப்பத்திரங்கள் மாத்திரமே தயாரிக்கப்பட்டுள்ளமை ஒரு வேடிக்கையான விடயமாகும். இவ்வாறு தயாரிக்கப்பட்டவற்றில் வெறுமனே 10 காணி உறுதிப்பத்திரங்கள் மாத்திரமே பண்டாரவளையில் இடம்பெற்ற நிகழ்வின் போது மக்களிடம் கையளிக்கப்பட்டன. எஞ்சியோருக்கு பயனாளிகளாக அவர்கள் தெரிவு செய்யப்பட்டமையை குறிப்பிட்ட ஒரு காகிதமே வழங்கப்பட்டது. அதுவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். இந்திய வீட்டுத்திட்டம் மாத்திரமின்றி, இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டமானாலும் இதுபோன்றதொரு கடிதம் பயனாளிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

எமது ஆட்சியில் முழுமையாக நிர்மானப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட 1000 வீடுகளையே மக்களிடம் கையளித்தோம். மாறாக இவ்வாறான காகிதங்களை வழங்கி மக்களை ஏமாற்றவில்லை. 2020 – 2024 காலப்பகுதியில் 1500க்கும் மேற்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. ஆனால் அவற்றை வழங்குவதற்கு நாம் பிரம்மாண்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவில்லை. காணி உரித்து என்பது மக்களின் உரிமை சார்ந்த விடயமாகும். அதில் அரசியல் இலாபம் தேட முயற்படுவது பொறுத்தமற்றது. பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமம் வழங்கப்படுவதை பெரும்பான்மையினர் விரும்பவில்லை. ஆளுங்கட்சிக்குள்ள தலைவர்கள் இதனை எதிர்க்கின்றனர்.

எனவே இவ்வாறான சவால்களை கட்சி பேதங்கள் இன்றி அனைத்து மலையகத் தமிழ் பிரதிநிதிகளும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும். பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமம் வழங்கப்படும் பட்சத்தில் அவர்களால் தமது சுய முயற்சியில் வீடொன்றை நிர்மாணித்துக் கொள்ள முடியும். இதற்காண ஆவணமொன்றை தயாரித்து அனைவரும் ஒற்றுமையாக அதில் கையெழுத்திட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் என அழைப்பு விடுக்கின்றேன். அதன் பின்னர் இது குறித்து அனைத்து கட்சிகளினதும் நிலைப்பாடு என்ன என தெரிந்து கொள்வோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காணி உரிமத்தை வழங்குவதற்கு தயாராகவே இருந்தார். அதற்காக 4000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டையும் வழங்கியிருந்தார்.

அதன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளது நிலைப்பாடுகளையும் கேட்றிந்து கொள்வோம். மலையக மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் கட்சி பேதங்கள், பதவிகளுக்கு அப்பால் இந்த ஆவணத்தில் கையெழுத்திட தயாரா? இந்திய வீட்டுத்திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு எமது ஆட்சி காலத்தில் முன்னுரிமையளிக்கப்பட்டது. ஆனால் தற்போது இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குஃபாதிக்கப்படக் கூடியவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படுகிறது. இது தவறாகும். அனர்த்தங்களால் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் கீழ் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் உரிய உதவிகள் வழங்கப்படும்.

எனவே இந்த வீட்டுத்திட்டத்துக்குள் அவர்களை உள்வாங்குவது நியாயமற்றது. லயன் அறைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் துயர நிலைமை மாற்றப்பட வேண்டும் என்பதே இந்திய வீட்டுத்திட்டத்தின் நோக்கமாகும். கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் சுமார் 46 000 வீடுகள் எவ்வித சிக்கலும் இன்றி நிர்மானித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் மலையகத்தில் 14 000 வீட்டுத்திட்டத்தை கூட நிறைவு செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. இதற்கு பிரதான காரணம் காணிக்கான உரிமை பெருந்தோட்ட நிறுவனங்களிடம் காணப்படுகின்றமையாகும்.  எனவே தோட்டக் காணிகளை அரசாங்கத்தின் பொறுப்பிலெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version