ஒரு நிறுவனத்தின் இலாபம் மற்றும் நட்டத்தை மாத்திரம் கருத்திற்கொள்வதை காட்டிலும் ஒட்டுமொத்த பொருளாதாரம் குறித்தும் அவதானம் செலுத்த  வேண்டும். வருடத்திற்கு நான்கு முறை மின்கட்டணங்களை திருத்துவது தர்க்க ரீதியானதல்ல என்பதுடன் நடைமுறை காரணிகள் மற்றும் தொழில்நுட்ப காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 2025 இறுதி காலாண்டுக்கு மின்கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளோம். 2026 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மின்கட்டணத்தை குறைப்பதற்குரிய சாதகமான சூழலை உருவாக்கும் நிபந்தனைகள் மின்சார சபைக்கு விதிக்கப்பட்டுள்ளது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கே.பி.எல். சந்ரலால் தெரிவித்தார்.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை மின்சார சபையானது கடந்த ஆகஸ்ட் மாதம்  27 ஆம் திகதியன்று இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு வழங்கிய கட்டண திருத்த முன்மொழிவில் இந்த ஆண்டு இறுதி காலாண்டில் 7.7 பில்லியன் ரூபாய் வருமான பற்றாக்குறை ஏற்பாடும் ஆகவே நிதி நெருக்கடியை முகாமைத்துவம் செய்வதற்கு 6.8 சதவீதத்தால் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபை வலியுறுத்தி,மின்கட்டண அதிகரிப்புக்கான பரிந்துரைகளை முன்வைத்தது.

2025 கடந்த செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்த கடிதங்கள் மூலம் இந்த ஆண்டின் இறுதி காலாண்டில் நிதி பற்றாக்குறை 20.8 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கக்கூடும் என்று மின்சார சபை திருத்த யோசனைகளை முன்வைத்திருந்தது.

இலங்கை மின்சார சபையால் முன்வைக்கப்பட்ட திருத்த பரிந்துரைகள் தொடர்பான ஊழியர்களின் பகுப்பாய்வு, பொதுமக்களின் கருத்துக்கள் ஆகியவற்றுக்கு அமைய இறுதி காலாண்டுக்கு மின்கட்டணத்தை திருத்தம் செய்யாமலிருக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

2024 மற்றும் 2025 இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் ஐந்து தடவைகள் மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.2024 ஆம் ஆண்டு ஜனவரி மாத கட்டண திருத்தத்தை தற்போதைய கட்டணத்துடன் ஒப்பிடும் போது மின்சார கட்டணம் 44 சதவீதம் குறைந்துள்ளது.

மின்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரைகள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து எழுத்துமூலமாகவும்,வாய்மூலமாகவும் கருத்துக்கள் கோரப்பட்டன.இதற்கமைய சுமார் 500 எழுத்து மற்றும் வாய்மூலமான கருத்துக்கள் மற்றும் யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

இதற்கமைய 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் மின்சார சபை முன்வைத்த மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான செலவினங்களிலிருந்து அநாவசியமான செலவினங்களைக் குறைக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.அதன்பின்னர் குறித்த நிதி பற்றாக்குறையை நிவர்ததி செய்யும் வகையில், 2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிலும்,2025 ஆம் ஆண்டின் முதல் இரு காலாண்டுகளிலும், மின்சாரசபை பெற்ற வருமானம் அண்ணவளாக 8486 மில்லியன் ரூபாவை சீர் செய்ய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மின்சார சபை 22,875 மில்லியன் ரூபாவை தேறிய இலாபமாக பெற்றுள்ளது.மேலும் எதிர்காலத்தில் மின்சார கட்டணத்தை நிலையானதாக பேணுவதற்கு, 2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் அந்த  8487 மில்லியன் ரூபாய் மற்றும் மீதமுள்ள 16,975 மில்லியன் ரூபாயை 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இணைத்துக்கொள்ள ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இலங்கை மின்சார சபை மற்றும் தனியார் மின்சார நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்க 7 நிபந்தனைகளை விதித்துள்ளோம்.செலவுக் கணக்குகளைத் தயாரித்தல்,மின்சார  கொன்முதல் ஒப்பந்தங்களைச் செய்துக்கொள்வது, 2024 ஆம் ஆண்டு மின்சார சபை பெற்றுக்கொண்ட 60,461 மில்லியன் ரூபாய் வருமானம், தொடர்பில் தடயவியல் கணக்காய்வினை மேற்கொண்டு,2026 ஆம்  ஆண்டு முதல் காலாண்டுக்கான மின்சார கட்டணத் திருத்தத்தில் ,16,975 மில்லியன் ரூபாய் இலாபத்தை முகாமைத்தும் செய்தல் ஆகியன இந்த நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு,மின்சார உற்பத்திக்காக போட்டி விலையில்  எரிபொருளை கொள்வனவு செய்யுமாறு இலங்கை மின்சார சபைக்கு இதற்கு முன்னர் நிபந்தனைகயை விதித்திருந்ததுடன், அது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version