பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக சுமார் ஒரு வருடத்தின் பின்னர் சம்பள நிர்ணய சபை நாளை வெள்ளிக்கிழமை கூடுகிறது. தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டீ.என்.கே.வட்டலியத்த தலைமையில், கொழும்பிலுள்ள தொழில் திணைக்களத்தில் பிற்பகல் 1 மணியளவில் சம்பள நிர்ணய சபை கூடவுள்ளது.

சம்பள நிர்ணய சபையின் தொழில் அமைச்சின் நியமன உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் சட்ட ஆலோசகர் கே.மாரிமுத்து, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முத்துக்குமார், விவசாய தோட்ட தொழிலாளர் காங்ரஸ் சார்பில் ஆர்.எம்.கிருஸ்ணசாமி, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கிட்னண் செல்வராஜா, இலங்கை செங்கொடி சங்கத்தின் சார்பில் அதன் ஆலோசகர் மேனகா கந்தசாமி மற்றும் பி.ஜி.சந்திரசேன உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளும், தொழில் தருநர் சார்பில் பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மஸ்கெலியா – பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளியான பாலகிருஷ்ணன் தேவிகா மற்றும் செங்கொடி சங்கத்தின் ஆலோசகர் மேனகா கந்தசாமி ஆகியோரால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனுமீதான விசாரணைகளின் பின்னர் செப்டெம்பர்  19ஆம் திகதி நீதிமன்றத்தால் விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கமைய பெருந்தோட்டக் கம்பனிகளுடன் முன்னெடுக்கப்பட வேண்டிய பேச்சுவார்த்தைகளை அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யுமாறும், நவம்பர் 20ஆம் திகதிக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை தொழில் ஆணையாளர் அறிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனுவை தாக்கல் செய்திருந்த இலங்கை செங்கொடி சங்கத்தின் ஆலோசகர் மேனகா கந்தசாமி, ‘கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. தொழிற்சங்கமாக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்பதால் செங்கொடி சங்கத்தின் சார்பில் நாம் மனுதாக்கல் செய்தோம். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா சம்பளம் தீர்மானிக்கப்பட்ட போது நாமும் சம்பள நிர்ணய சபையின் அங்கத்தவர்களாக இருந்தோம். செங்கொடி சங்கம், ஜே.வி.பி. தொழிற்சங்கம் மற்றும் இலங்கை தொழிற்சங்கங்களின் சம்மேளனமும் இந்த தீர்மானத்துக்கு எதிராகவே வாக்களித்தன.

அதேவேளை 65க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் இந்த தீர்மானத்துக்கு எதிராக ஆட்சேபனைகளை சம்பள நிர்ணயசபைக்கு அனுப்பியிருந்தனர். ஆனால் இவை எவையுமே கவனத்தில் கொள்ளப்படாது 1350 சம்பள யோசனை நிறைவேற்றப்பட்டது. இது வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட போதிலும், இந்த சம்பளம் ஒருபோதும் தொழிலாளர்களுக்கு போதுமானதாக இருக்காது எனக் கூறி மீண்டும் சம்பள நிர்ணயசபையை கூட்டுமாறு கடந்த அரசாங்கத்திடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தோம். இந்த அரசாங்கத்திடமும் இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதற்குரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

குறிப்பிட்டவொரு தொகையை அதிகரிக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது. எனவே தான் சம்பள நிர்ணய சபையை கூட்டுவதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறும், தொழில் அமைச்சரால் வாழ்க்கை செலவுக்கு ஏற்ற ஒரு சம்பளத்தை நிர்ணயித்து அதற்கான கொள்கை பிரகடனமொன்றை முன்வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடுமாறு கோரியே மனு தாக்கல் செய்துள்ளோம்.

அதற்கமைய ஒக்டோபர் 30ஆம் திகதிக்குள் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட வேண்டும் என்றும், நவம்பர் 20ஆம் திகதிக்கு முதல் சம்பள உயர்வை அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த காலக்கெடுவுக்குள் சம்பள உயர்வு அறிவிக்கப்படாவிட்டால் ஜனவரி 20ஆம் திகதிக்குள் எம்மை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.’ எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் திகதி சம்பள நிர்ணய சபை கூடிய போது 1350 ரூபா அடிப்படை சம்பளமும், 350 ரூபா உற்பத்தி திறன் கொடுப்பனவையும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் சம்பள பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பள நிர்ணய சபை கூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share.
Leave A Reply

Exit mobile version