இந்திய வம்சாவளியினரான ஒரு தம்பதியர், விபத்தொன்றை ஏற்படுத்தி தங்கள் பெற்றோரும் பிள்ளையும் பலியாக காரணமாக இருந்த கனடா பொலிசார் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

கனடாவில், கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, மதுபானக்கடை ஒன்றில் திருடியதாக சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவரை பொலிசார் துரத்த, அவர் வேன் ஒன்றில் தப்பியோட, அவரது வேன் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அந்த விபத்தில், காரில் பயணித்த, இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன் ஸ்ரீனிவாசபிள்ளை (60), அவரது மனைவியான மஹாலக்‌ஷ்மி அனந்தகிருஷ்ணன் (55)மற்றும் தம்பதியரின் பேரப்பிள்ளையான மூன்று மாதக்குழந்தையும் பலியானார்கள்.

தம்பதியர், தங்கள் மகன் கோகுல்நாத் (33), மருமகள் அஷ்விதா ஜவஹர் (27) மற்றும் பேரனான மூன்று மாதக் குழந்தை ஆதித்யா விவான் ஆகியோரைப் பார்ப்பதற்காக கனடா சென்றிருந்த நிலையில் விபத்தில் பலியாக, அந்தக் குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

இந்த விபத்தில் குறிப்பிடத்தக்க ஒரு விடயம் என்னவென்றால், விபத்தில் உயிர் பலிகளுக்கு காரணமான குற்றவாளி மட்டுமின்றி, அவரைத் துரத்திச் சென்ற பொலிசாரும், சாலையின் தவறான திசையில்தான் வாகனத்தை ஓட்டிச் சென்றார்கள். உண்மையில், அது விதிமீறலாகும்.

ஆகவே, தவறான பாதையில் பயணித்து தங்கள் குடும்பத்தில் மூன்று உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்த பொலிசார் மீது கோகுல்நாத்தும் அஷ்விதாவும் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

தங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளையின் இழப்பால் கடும் மன உளைச்சலுக்கும் அதிர்ச்சிக்கும் மன ரீதியில் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளதாகவும், தங்களால் அன்றாடக வீட்டுப் பணிகளைக் கூட செய்ய இயலாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கோகுல்நாத், அஷ்விதா மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் இருவர், பொலிஸ் வாகனத்தை தவறான பாதையில் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இரண்டு பொலிசார் மீதும் 25 மில்லியன் டொலர்கள் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version