விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இலங்கை இராணுவத்திற்குத் தலைமை தாங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இறுதிப்போர் தொடர்பான சில தகவல்களை அண்மையில் வெளியிட்டு வருகிறார்.
ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில் இதற்கு முன்னர் வெளிப்படுத்தியிராத விடயங்களையும் கூறியிருக்கிறார்.
இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பக்கச்சார்பற்ற- நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள சூழலில், அவரது தகவல்கள் அதிகளவில் வெளிவர தொடங்கி இருக்கின்றன.
இதற்கு முன்னர், போர்க்கால மீறல்கள் தொடர்பாக, சர்வதேச விசாரணை அல்லது கலப்பு விசாரணைப் பொறிமுறை பற்றிய யோசனைகள் முன்மொழியப்பட்டிருந்த சூழலில் சரத் பொன்சேகா இவ்வாறான தகவல்களை வெளியிட்டிருக்கவில்லை.
ஆனால், அவர் இப்போது, இலங்கை அரசாங்கம் நம்பகமான உள்ளக விசாரணைகளை முன்னெடுப்பதாக ஜெனிவாவில் வாக்குறுதி கொடுத்துள்ள சூழலில், இந்த தகவல்களை வெளியிட ஆரம்பித்துள்ளதன் உள்நோக்கத்தை புரிந்து கொள்வது கடினமானதல்ல.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அரசாங்கம் ஓர் உள்ளக விசாரணை பொறிமுறையை உருவாக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கலாம்.
ஏனென்றால் சர்வதேச அழுத்தங்களை சமாளித்துக் கொள்வதற்கு, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது.
அதனால், சர்வதேசம் எதிர்பார்க்கின்றபடி, நம்பகமான, பக்கச்சார்பற்ற விசாரணை பொறிமுறையாக இருக்கிறதோ இல்லையோ , பெயருக்கு ஒரு பொறிமுறையை, உருவாக்குவதற்கான சாத்தியங்களை நிராகரிக்க முடியாது.
ஆனால், அது பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழர்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றக் கூடிய ஒன்றாக நிச்சயம் இருக்கப் போவதில்லை.
அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினரின் மீது கொண்ட கரிசனையினால், அல்லது அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த பொறிமுறையை உருவாக்கும் என எதிர்பார்க்க முடியாது.
சர்வதேசத்தை சமாளிப்பதற்காக ஒரு பொறிமுறை உருவாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அத்தகையதொரு பொறிமுறை உருவாக்கப்பட்டால், சரத் பொன்சேகா அதன் முன்னிலையில் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஏனென்றால் அவர் போர்க்காலத்தில் இராணுவத்துக்குத் தலைமை தாங்கியவர்.
அவரது தலைமையிலேயே போர் முன்னெடுக்கப்பட்டது. அவரது மூலோபாயத் திட்டத்தின் அடிப்படையிலேயே போர் முன்னெடுக்கப்பட்டது.
அந்தப் போரில் இடம்பெற்ற மீறல்கள் அனைத்துக்கும் பொறுப்புக்கூற வேண்டியவர் அவர்.
ஆனால், அவர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக இதுவரை கூறியதில்லை. தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது போலவே கருத்துக்களை வெளியிட்டு வந்திருக்கிறார்.
அதேவேளை, இதுவரையில் போர்க்குற்ற விசாரணைக்காக அவரிடம் யாரும் கேள்வி எழுப்பவும் இல்லை.
எந்தவொரு நாட்டினாலும் பயணத் தடை விதிக்கப்படவும் இல்லை.
அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் சில இராணுவ தளபதிகளையும் அரசியல் தலைவர்களையும் தமது நாட்டுக்குள் நுழைவதற்கு பயண தடை விதித்துள்ளன.
ஆனால், சரத் பொன்சேகாவுக்கு எதிராக அத்தகைய எந்தத் தடையும் வெளிப்படையாக விதிக்கப்படவில்லை.
ஆனால் அவர், அமெரிக்கா செல்வதற்கு விசா பெற முடியாத நிலை ஏற்பட்டது உண்மை.அது அவர் மீதான தடை அல்ல. விசா மறுப்பதற்கும் அவரை தடை செய்திருப்பதற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.
சரத் பொன்சேகா, பொறுப்புக்கூறல் விசாரணை பொறிமுறை ஒன்றை எதிர்கொள்ளுகின்ற போது, தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்.
அதனால், அவர் தனக்கு எதிராக செயற்பட்டவர்களையும் தன்னுடன் ஒத்துழைக்காதவர்களையும் குற்றச்சாட்டுகளில் சிக்க வைக்க முற்படக் கூடும்.
அவர் கூறுகின்ற விடயங்கள் அனைத்தும் உண்மையானவை என்று ஏற்றுக் கொள்ள வேண்டியவை அல்ல.
ஏனென்றால் அவர், இன்னமும் போரின் போது இராணுவத்தினால் குற்றங்கள் இழைக்கப்பட்டன என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுப்பவர்.
கட்டமைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் அல்லது இனஅழிப்பு முன்னெடுக்கப்பட்டது என்பதை, அவர் முழுமையாக எதிர்ப்பவர்.
அவ்வாறான நிலையில், அவர் கூறுவதெல்லாம் உண்மையானது என ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இசைப்பிரியா
இசைப்பிரியா படுகொலை தொடர்பாக சரத் பொன்சேகா அண்மையில் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவுக்கு அளித்துள்ள செவ்வியில் சில தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
இராணுவப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் குழுவினரே அதற்குக் காரணம் என்று உறுதியாக கூறுவேன் என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அவ்வாறு தெரிந்திருந்தும் அவருக்கு எதிராக சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த போது, எந்த நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை.
ஜகத் ஜயசூரி
வன்னிப் படைகளின் தளபதியாக இருந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராகவும் அவர் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்.
தான் இராணுவத் தளபதியாக இருந்த போது அவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால், திடீரென அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தன்னுடைய கருத்தைச் செவிமடுக்காமல், குற்றச்சாட்டுக்களைப் பொருட்படுத்தாமல் அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் சரத் பொன்சேகா.
சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தபோது, ஜகத் ஜயசூரியவை போர்முனையில் இருந்து விலக்கி, வன்னிப் படைகளின் தளபதியாக நியமித்திருந்தார்.
ஜகத் ஜயசூரிய போர்முனை செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்க வில்லை. ஆனால் பின்களச் செயற்பாடுகள் அவரது வசமே இருந்தது.
போரின் இறுதியில் சரணடைந்தவர்களைக் கையாண்டவர் அவர்.
இந்த விவகாரத்தில் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சரத் பொன்சேகா குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தாலும், முன்களச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தவர்கள் விடயத்தில் வாய் திறக்காமல் அமைதியாக இருக்கிறார்.
ஏனென்றால் அவர்கள் அவருக்குப் போரை வென்று கொடுத்தவர்கள்.
கோட்டாபய ராஜபக் ஷவுடன் நெருக்கமானவர்களாக இருந்தவர்கள் என்ற போதும், அவர்கள் தொடர்பான எந்த தகவல்களையும் சரத் பொன்சேகா வெளியிடாமல் தவிர்க்கிறார்.
குறிப்பாக, மேஜர் ஜெனரல்கள் சவேந்திர சில்வா, கமல் குணரத்ன, ஷாஜி கல்லகே, ஜகத் டயஸ், பிரசன்ன டி சில்வா, போன்ற முன்னரங்க போர்முனை அதிகாரிகள், கோட்டாபய ராஜபக் ஷவுக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர்.
அவர்கள் சரத் பொன்சேகாவின் போர்முனை வழிநடத்தலை ஏற்று செயற்பட்டிருந்தாலும், சில விடயங்களில் கோட்டாபய ராஜபக் ஷவின் நேரடி உத்தரவுகளை நிறைவேற்றினார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.
அதனை சரத் பொன்சேகா ஆரம்பத்தில் இருந்தே கூறி இருந்தார்.
ஆனாலும் அவர்களுக்கு எதிராக மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்திருக்கவில்லை.
இப்போது இசைப்பிரியா விடயத்தில் களமுனையில் இருந்த படைத்தளபதிகள் எவரையும் சரத் பொன்சேகா குற்றச்சாட்டில் சிக்கவைக்கவில்லை.
அதற்கு மாறாக இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக இருந்த, மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் குழுவினரே இதற்கு பொறுப்பு எனக் கூறியிருக்கிறார்.
மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ராஜபக் ஷவினருக்கு மிகவும் நெருக்கமானவர்.
முன்னர், அவர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருந்தன.
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், அவர் பதவிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன் பின்னர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண சீனாவின் ஷங்ரி லா குழுமத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்றிருந்தார்.
இசைப்பிரியா படுகொலை விவகாரத்தில் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டு குற்றச்சாட்டு முதல்முறையாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.
சரத் பொன்சேகா இந்தக் குற்றச்சாட்டுகளை சுமத்தி இருப்பதன் ஊடாக, அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள முற்படுகிறாரா அல்லது உண்மையிலேயே குற்றம் இழைத்தவர்களை தண்டிப்பதற்கு எத்தனிக்கிறாரா என்று புரிந்து கொள்வதில் சிரமங்கள் உள்ளன.
எவ்வாறாயினும் இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற போது, அது பற்றிய விசாரணைகளை மேற்கொள்வதில் அரசாங்கமோ அல்லது பொலிஸ் தரப்போ எந்த அக்கறையும் காண்பித்திருக்கவில்லை.
ஒரு தமிழர் தொடர்பாகவோ அல்லது விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் ஒருவர் தொடர்பாகவோ- இத்தகைய குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தால், அவர்கள் தொடர்பாக இவ்வாறான அணுகுமுறை தான் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்க முடியாது.
அது வேறு விதமாக கையாளப்பட்டிருக்கும்.
இதிலிருந்து, தற்போதைய அரசாங்கமும் தண்டனை விலக்கு கலாசாரத்தை தொடர்ந்து முன்னெடுப்பதிலேயே ஈடுபடுகிறது என்பது நிரூபணமாகிறது.
சரத் பொன்சேகா, அரசாங்கத்துக்கு நெருக்கமானவராக இருந்தாலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் அவருடன் இணைந்து பயணிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரியவில்லை.
குற்றமிழைத்தவர்களை பொறுப்புக்கூற வைக்கும் கடப்பாட்டை அரசாங்கம் கொண்டிருந்தாலும்- அதற்கான வாக்குறுதியைக் கொடுத்திருந்தாலும், அதனை நிறைவேற்றும் நிலைப்பாட்டை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.
-சுபத்ரா-